உலகம்
இந்திய – நேபாள எல்லையில் 2வது சோதனைச் சாவடி
- இந்திய – நேபாள எல்லையில் 2வது ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை பிரதமர் நரேந்திர மோடியும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலியும் 21.01.2020 தொடங்கி வைத்தனர்.
- பிஹாரின் ஜாக்பனி நேபாளத்தின் பிராட் நகர் இடையே இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்த சோதனைச் சாவடி 260 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
- இங்கு தினமும் 500 லாரிகள் வந்து செல்ல முடியும். ரூ.140 கோடி செலவிலான இந்த திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் கலாச்சார உறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்திய – நேபாள எல்லையில், பிஹார் மாநிலம் ரக்சால் நேபாளத்தின் பீர்கஞ்ச் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி தொடங்கப்பட்டது.
இந்தியா, பிரேசில் இடையே 15 ஒப்பந்தம் கையெழுத்து
- இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ பிரதமர் நரேந்திர மோடியை 26.01.2020 சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் இரு நாடுகளுக்கிடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
- குடியரசு தின விழாவில் பங்கேற்குமாறு பிரேசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்றுக் கொண்ட அவர் தனது வருகையை உறுதி செய்திருந்தார். இதன்படி போல்சனாரோ 25.01.2020 டெல்லி வந்தடைந்தார்.
- அவர் இந்தியா வந்திருப்பது இதுவே முதல் முறை. அவருடன் மகள் லாரா, மருமகள் லெடிசியா பிர்மோ, 8 அமைச்சர்கள், 4 எம்.பி.க்கள் மற்றும் தொழிலதிபர்கள் குழுவும் இந்தியா வந்துள்ளது.
- டெல்லி வந்தடைந்த பிரேசில் அதிபரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாட்டு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
- பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- இதையடுத்து பிரதமர் மோடியும் போல்சனாரோவும் சந்தித்துப் பேசினர். அப்போது இரு தரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்தும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பின்னர் வர்த்தகம் – முதலீடு, எண்ணெய் – எரிவாயு, இணையதள பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்தியா
டெல்லியில் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்
- இந்தியாவின் 71-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் 26.01.2020 கொண்டாடப்பட்டது.
- டெல்லியின் ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவுச் சின்னத்துக்கு வருகை தந்து நாட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
- விழாவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் பொல் சொனாரோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்தியக் குடியரசு தினவிழாவில் பிரேசில் அதிபர் ஒருவர் பங்கேற்பது இது மூன்றாவது முறையாகும்.
- குடியரசு தின விழா கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் பிரம்மாண்ட வாகன அணிவகுப்புகள் நடைபெற்றன. 16 மாநிலங்கள் மற்றும் 6 மத்திய அமைச்சகங்களின் வாகனங்கள் இதில் கலந்து கொண்டன.
- தங்கள் மாநிலங்களின் தனிச் சிறப்புகளையும், கலாச்சாரங்களையும் பிரதிபலிக்கும் வகையில் ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு அணிவகுப்பில் பங்கேற்றதை மக்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
- இந்த அணிவகுப்பில் முதன் முறையாக யூனியன் பிரதேசம் என்ற முறையில் ஜம்மு – காஷ்மீர் அரசின் வாகனமும் பங்கேற்றது. அதில், `கிராமத்துக்குத் திரும்புவோம்’ என்ற வாசகத்துடன் கிராமங்களின் சிறப்பம்சங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
- தமிழகத்தின் சார்பில் காவல் தெய்வமான அய்யனார் சிலையுடன் கூடிய ஊர்தி, அணிவகுப்பில் கலந்து கொண்டது. இந்த ஊர்தியில் அய்யனார் சிலைக்கு முன்பாக தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான மயிலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் ஆகியவற்றை கலைஞர்கள் ஆடிச் சென்றது மக்களின் கவனத்தை ஈர்த்தது.
- கோவா மாநிலத்தின் சார்பில் பங்கேற்ற ஊர்தியானது பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, தவளை இனத்தின் பாதுகாப்பை உணர்த்தும் விதமாக வாகனத்தின் முகப்பில் பிரம்மாண்ட தவளை ஒன்று கித்தார் இசைக்கருவியை இசைப்பது போன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது.
- குஜராத், பிஹார், அசாம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களின் சார்பிலும் கண்கவர் வாகன ஊர்திகள் இதில் பங்கேற்றன.
- இதன் தொடர்ச்சியாக, முப்படைகள் மற்றும் துணை ராணுவப் படைகளின் பிரம்மாண்ட பேரணிகள் தொடங்கின. முதலில் ராணுவம், விமானப் படை, கடற்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதையடுத்து, முப்படைகளின் வலிமையை பறைசாற்றும் விதமாக ஆயுத அணிவகுப்புகள் நடைபெற்றன. இந்த அணி வகுப்பில் ராணுவ பீரங்கிகள், நவீன ஏவுகணைகள் ஆகியவை அணிவகுத்துச் சென்றதை மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
- இதில், எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களை தகர்க்கும் வல்லமை படைத்த ஏ – சாட் ஏவுகணையின் அணிவகுப்பும், தனுஷ் பீரங்கியின் அணிவகுப்பும் நடைபெற்றது. குடியரசு தின விழா அணிவகுப்பில் ஏ – சாட் ஏவுகணை பங்கேற்பது இதுவே முதன்முறையாகும்.
- ராணுவத்தின் அப்பாச்சி மற்றும் சினூக் ஹெலிகாப்டர்களும் குடியரசு தின விழாவில் முதன்முறையாக பங்கேற்று விண்ணில் பறந்து பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்தது.
கொடி இறக்கும் நிகழ்ச்சி
- இந்த அணிவகுப்பு நிகழ்ச்சிகள் முடிவடைந்ததை அடுத்து, 26.01.2020 மாலை 5 மணிக்கு அட்டாரி – வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
போடோ அமைப்புகளுடன் அமைதி ஒப்பந்தம்
- அசாமில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஎப்பி) மற்றும் அனைத்து போடோ மாணவர்கள் கூட்டமைப்பு (ஏபிஎஸ்யு) ஆகியவற்றுடன் 27.01.2020 அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
- அசாமில் உள்ள போடோலாந்து பகுதியில் போடோ இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அப்பகுதியை தனி மாநிலமாகவோ யூனியன் பிரதேசமாகவோ உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.
- இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் அவ்வப்போது தொடங்கப் பட்டன. இக்குழுக்கள் நடத்திய தொடர் போராட்டங்கள், வன்முறை காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டன.
- தடை செய்யப்பட்ட இந்த அமைப்புகளுடன் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதன் பலனாக இதற்கு முன்பு 2 முறை ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 1993 ஆம் ஆண்டு அனைத்து போடோ மாணவர்கள் சங்க கூட்டமைப்புடன் (ஏபிஎஸ்யு) முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து போடோலாந்து தன்னாட்சி கவுன்சில் உருவாக்கப்பட்டது. இதற்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
- கடந்த 2003 ஆம் ஆண்டு போடோ லிபரேஷன் டைகர்ஸ் (பிஎல்டி) என்ற அமைப்புடன் 2 வது ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, அரசியலமைப்பு சட்டத்தின் 6 வது அட்டவணையின் கீழ் போடோலாந்து டெரிடோரியல் கவுன்சில் உருவாக்கப்பட்டது.
- கோக்ரஜார், சிராங், பஸ்கா மற்றும் உடால்குரி ஆகிய 4 மாவட்டங்கள் இதன் கீழ் கொண்டு வரப்பட்டன. கல்வி, வனம், தோட்டக் கலை உள்ளிட்ட 30 துறைகள் இதன் கட்டுப்பாட்டில் வந்தன. எனினும் காவல், வருவாய், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் அசாம் அரசிடமே இருந்து வருகிறது. ஆனாலும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.
- போடோலாந்து பகுதியில் அமைதியை நிலைநாட்டவும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா முடிவு செய்தார். இது தொடர்பாக மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் கிளர்ச்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
- இதில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, என்டிஎப்பி மற்றும் ஏபிஎஸ்யு ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய, அசாம் மாநில அரசுகளுக்கிடையே 27.01.2020 ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அசாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் முன்னிலையில் இந்த முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
24 வார கருவைக் கலைப்பதற்கு அனுமதி
- பிரதமர் மோடி தலைமையில் 29.01.2020 அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது 1971 ஆம் ஆண்டு கருக்கலைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- தற்போதுள்ள கருக்கலைப்புச் சட்டப்படி, 20 வாரங்கள் வரையிலான கருவை மட்டுமே கலைக்க முடியும். ஆனால், புதிய திருத்தத்தின்படி தாய்க்கோ அல்லது கருவில் உள்ள சிசுவுக்கோ உயிருக்கு ஆபத்து நேரிடும் பட்சத்தில் 24 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்கலாம்.
- தற்போதுள்ள 1971 ஆம் ஆண்டின் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தில் சில புதிய பிரிவுகள் சேர்க்கப்படும். சில நிபந்தனைகள் அடிப்படையில் கருக்கலைப்புக்கான உச்ச வரம்பை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு இவை சேர்க்கப்படும்.
- பாதுகாப்பான கருக்கலைப்பு சேவை மற்றும் தரத்தில் குறைகளின்றி கடுமையான நிபந்தனைகள் அடிப்படையில் விரிவான கருக்கலைப்புப் பராமரிப்புச் சேவையை வலுப்படுத்தவும், கருக்கலைப்புக்கு உச்ச வரம்பை அதிகரிக்கவும் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
விண்வெளிக்கு செல்லும் பெண் ரோபோ வியோம் மித்ரா
- பெங்களூருவில் ”மனிதர்களின் விண்வெளிப் பயணம் மற்றும் ஆய்வுகள்: எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்காலத் தேவைகள்” என்ற தலைப்பில் அறிவியல் மாநாடு தொடங்கியது. இதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மனித உருவிலான ‘வியோம் மித்ரா’ என்ற பெண் ரோபோவை அறிமுகப்படுத்தினர். இந்த பெண் ரோபோ ககன்யான் திட்டத்தின்கீழ் மனிதர்களுக்கு முன்பாக விண்வெளிக்குச் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தனர்.
- இதுகுறித்து வடிவமைப்பு பணியில் ஈடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானி ஷாம் தயால் கூறும் போது, “சம்ஸ்கிருதத்தில் “வியோம்” என்றால் விண்வெளி. “மித்ரா” என்றால் தோழி. விண்வெளிக்குச் செல்லும் பெண் ரோபோ என்பதால் வியோம் மித்ரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் பேசும் திறன் கொண்ட இந்த மனித உருவிலான பெண் ரோபோ பார்க்கும் திறனும் உணரும் திறனும் கொண்டது.
- விஞ்ஞானிகள் வியோம் மித்ரா ரோபோவை தன்னை தானே அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தனர். அதற்கு வியோம் மித்ரா, “அனைவருக்கும் வணக்கம், நான்தான் வியோம் மித்ரா. ககன்யான் திட்டத்துக்காக நான் தயாரிக்கப்பட்டுள்ள அரை மனித ரோபோ. மாதிரிகளின் அளவுகளைக் கண்காணித்தல், ஆபத்துக் காலத்தில் எச்சரிக்கை செய்தல் ஆகிய பணிகளை என்னால் மேற்கொள்ள முடியும். ஸ்விட்ச் பேனல் செயல்பாட்டிலும் என்னால் ஈடுபட முடியும். விண்வெளிக்கு வரும் விண்வெளி வீரர்களுடன் உரையாட முடியும். அவர்களின் சந்தேகங்களை என்னால் பூர்த்தி செய்யவும் முடியும்” என தெரிவித்தது.
- இது குறித்து இஸ்ரோவின் தலைவர் கே.சிவன் கூறும்போது, “இந்த ரோபோவுக்கு மனிதப் பண்புகள் இருப்பதால் விண்வெளியில் மனிதன் சென்று வர ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமா என்பதை ஆராய பயன்படுத்துகிறோம். 4 வீரர்கள் விண்வெளிக்குச் செல்லும் போதும் இந்த ரோபோவை அனுப்ப திட்டமிட்டு இருக்கிறோம். விண்வெளியில் வீரர்களின் செயல்பாட்டை கண்காணித்து, அவர்களின் செயல்பாடு சரியாக இருக்கிறதா என இந்த ரோபோ பரிசோதிக்கும்.
- தேர்வு செய்யப்பட்டுள்ள 4 வீரர்கள் இம்மாத இறுதிக்குள் ரஷ்யா சென்று பயிற்சியை தொடங்க உள்ளனர். கடந்த 1984 ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ராகேஷ் ஷர்மா ரஷ்ய விண்கலத்தில் பறந்தார். இந்த முறை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் பறக்க உள்ளனர். ககன்யான் திட்டத்தை தொடர்ந்து, சந்திரயான் – 3 பணிகளும் தொடங்கி முழுவீச்சில் நடந்து வருகின்றன. சந்திரனுக்கும் மனிதனை அனுப்பும் திட்டம் உள்ளது” என்றார்.
பொருளாதாரம்
ஏர் இந்தியாவின் 100% பங்குகளை விற்க அரசு முடிவு
- பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஏர் இந்தியாவின் பங்கு விலக்கல் (Disinvestment) தொடர்பாக அரசு முதலில் மேற்கொண்ட முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. அப்போது 76 சதவீத பங்குகளை விற்பதென முடிவு செய்யப்பட்டது. இதனால் முந்தைய டெண்டர் கோரும் நடவடிக்கையில் நிறுவனங்கள் எதுவும் விண்ணப்பிக்கவில்லை. இதையடுத்து பங்கு விலக்கல் நடவடிக்கைகளில் உள்ள விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளது.
- இதன்படி ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளையும் விற்க முடிவு செய்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் மார்ச் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. தகுதி வாய்ந்த நிறுவனங்கள் குறித்த விவரம் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏர் இந்தியா நிறுவனத்துக்குள்ள ஒட்டுமொத்த கடன் சுமை ரூ. 60,074 கோடியாகும். நிறுவனத்தை எடுத்து நடத்த விரும்பும் நிறுவனங்கள் இதில் ரூ.23,286 கோடியை ஏற்க வேண்டும்.
- ஏர் இந்தியாவின் பிராண்ட் பெயர் மற்றும் அது சார்ந்த விஷயங்கள் அனைத்தும் நிறுவனத்தை ஏற்று நடத்தும் நிறுவனத்துக்கு அளிக்கப்படும். இதன் மூலம் ஏற்று நடத்த விரும்பும் நிறுவனம் சுதந்திரமாக ஏர் இந்தியா நிறுவனத்தை நிர்வகிக்க முடியும்.
- ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமாக மும்பை நரிமன் பகுதியில் அமைந்துள்ள தலைமை அலுவலக கட்டிடம் மற்றும் டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள கட்டிடங்கள் இந்த விற்பனையில் இடம் பெறாது.
- ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமாக சில ஓவியங்கள், கலைப் பொருட்கள் உள்ளிட்ட மதிப்பு வாய்ந்த பொருட்கள் இந்த விற்பனையில் இடம் பெறாது.
- செயல்பாட்டு மூலதன செலவு மற்றும் விமானம் சாராத பிற செலவுகளால் ஏற்பட்ட கடன் சுமையை அரசே ஏற்கும்.
- இந்த பரிவர்த்தனை முழுவதையும் யர்னஸ் அண்ட் யங் நிறுவனம் மேற்கொள்ளும். எந்த ஒரு தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனம் அல்லது நிதியம் உள்ளிட்டவை ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விண்ணப்பிக்கலாம். அவ்விதம் விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் நிகர சொத்து மதிப்பு ரூ.3,500 கோடிக்குக் குறைவாக இருக்கக் கூடாது என்ற விதிமுறையும் உள்ளது.
- அரசு உபயோகத்துக்காக அதாவது குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பயணத்துக்காக பயன்படுத்தப்படும் நான்கு போயிங் 747 விமானங்கள் தவிர மற்ற 121 விமானங்கள் புதிதாக ஏற்று நடத்த தேர்வு செய்யப்படும் நிறுவனம் வசம் செல்லும்.
- ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது 13,629 பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஊதிய நிலுவை ரூ.1,383.70 கோடியாகும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு ரூ.1,791 கோடி கடன் சுமை உள்ளது.
தமிழ்நாடு
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடி ஏற்றினார்
- குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடந்த கண்கவர் நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். வீரதீர செயல்களுக்கான விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
- சரியாக காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது இந்திய வான் படையின் ஹெலிகாப்டர் உயரே பறந்தவாறு மலர்களைத் தூவியது.
- ராணுவம், கடற்படை, வான் படை, கடலோர காவல் படை, முன்னாள் ராணுவத்தினர், சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், ஆர்பிஎப், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, சென்னை பெருநகர மகளிர் போலீஸ், கடலோர பாதுகாப்புக் குழு, குதிரைப் படை, தமிழ்நாடு வனத் துறை, சிறைத் துறை, தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை உள்ளிட்ட 44 படைப் பிரிவுகளின் மிடுக்கான கண்கவர் அணிவகுப்பும் பல்வேறு படைப்பிரிவுகளின் கூட்டுக் குழல் முரசு இசையும் நடந்தது.
- பின்னர் 5 பேருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதல்வர் பழனிசாமி வழங்கினார். திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்த மு.ஷாஜ் முகமதுவுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம், சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சு.யுவக்குமாருக்கு வேளாண்மைத் துறை சிறப்பு விருது ஆகியவற்றை முதல்வர் வழங்கினார்.
- கலை நிகழ்ச்சிகள், அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடந்தது. முதலில் அயனாவரம் பெத்தேல் மேல்நிலைப் பள்ளி, விருகம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, மணிலால் எம்.மேத்தா மகளிர் மேல்நிலைப் பள்ளி, ராணி மேரிக் கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, குருஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகள் மகாகவி பாரதியின் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே…’ என்ற பாடலுக்கு சாமரம், கிராமிய நடனம், கோலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க் கால் குதிரையாட்டம் என்ற பல்வேறு வகைகளில் நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
- தஞ்சையில் உள்ள தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் அருணாச்சலப் பிரதேசம், காஷ்மீர், தெலங்கானா மாநிலங்களின் பாரம்பரிய நடனம், செய்தி, மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையத்தின் தப்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தன.
- செய்தி மக்கள் தொடர்பு, காவல், கூட்டுறவு – உணவு, ஊரக வளர்ச்சி, வேளாண்மை, பள்ளிக் கல்வி, சுகாதாரம், ஜவுளி, ஆதி திராவிடர், பழங்குடியினர் நலன், சுற்றுலா, சமூக நலம், கால்நடை பராமரிப்பு, பொதுத் துறை, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய துறைகளின் திட்டங்கள், சாதனைகளை விளக்கும் 16 அலங்கார ஊர்திகள் வந்தன.
- ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் அயனாவரம் பெத்தேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், மணிலால் எம்.மேத்தா மகளிர் மேல்நிலைப் பள்ளி 2 வது இடத்தையும், விருகம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி 3 வது இடத்தையும் பிடித்தன.
- கல்லூரி அளவில் குருஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரி முதலிடத்தையும், ராணி மேரிக் கல்லூரி 2 வது இடத்தையும், எத்திராஜ் மகளிர் கல்லூரி 3 வது இடத்தையும் பிடித்தன.
- அலங்கார ஊர்தி அணிவகுப்பில் காவல் துறைக்கு முதல் பரிசும், வேளாண் துறைக்கு 2 வது பரிசும், ஊரக வளர்ச்சித் துறைக்கு 3 வது பரிசும் வழங்கப்பட்டன.
சென்னை தரமணியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா
- தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள நிறுவனங்கள் விரிவாக்கம் செய்வதற்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- சென்னை தரமணியில் தமிழக அரசின் டிட்கோ மற்றும் டிஎல்எஃப் இணைந்து 6.8 மில்லியன் சதுர அடியில் புதியதாக அமைக்க உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிக்கு முதல்வர் பழனிசாமி 23.01.2020 அடிக்கல் நாட்டினார்.
- இவ்விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது தமிழக அரசின் தொடர் முயற்சிகளால் பல புதிய தொழில் முதலீடுகளை தமிழகம் தொடர்ந்து ஈர்த்து தொழில் துறையில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
- இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குப் பிறகு, இதுவரை ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 83 ஆயிரம் வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன.
- தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம் மூலம் இதுவரை ரூ.14 ஆயிரத்து 728 கோடி மதிப்பிலான 36 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் வானூர்தி தொழிற்பூங்கா, மின்சார வாகனப் பூங்கா ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.
- தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு கடந்த ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் கோடியாக இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அது 1 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
விளையாட்டு
வீரதீர செயலுக்கான விருது
- கேரளாவில் கடந்த மே மாதம் தீப்பற்றிய சுற்றுலா பஸ் ஒன்றின் கண்ணாடியை உடைத்து 20 பேரை காப்பாற்றிய சிறுவன் ஆதித்யாவுக்கு பாரத் விருது வழங்கப்பட்டது. கடலில் தத்தளித்த 3 நண்பர்களை காப்பாற்றும் போது உயிரிழந்த கோழிக்கோட்டை சேர்ந்த 16 வயது முகம்மது முசினுக்கு (இறப்புக்கு பிறகு) அபிமன்யு விருது வழங்கப்பட்டது. பெண் மற்றும் அவரது மகளை ரயில் விபத்தில் இருந்து காப்பாற்றிய கோழிக்கோடு மாணவர் பதாஹ் விருது பெற்றார்.
- இவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 26 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் விருது வழங்கப்பட்டது.
நேஷனஸ் கோப்பை குத்துச்சண்டை
- செர்பியாவில் நடைபெற்று வரும் 9 வது நேஷனஸ் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் 4 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
- இந்தப் போட்டிகள் செர்பியாவின் சோம்பார் நகரில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் எம். மீனா குமாரி (54 கிலோ), மோனிகா (48 கிலோ), ரிது கிரேவல் (51 கிலோ), பாக்யபதி கச்சாரி (75 கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றினர்.
- இந்தியாவின் பவித்ரா (60 கிலோ), விலாவோ பாசுமடாரி (64 கிலோ) ஆகியோருக்கு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
முக்கிய நபர்கள்
கூடைப்பந்து ஜாம்பவான் பிரையன்ட் தனது மகளுடன் மரணம்
- 41 வயதான பிரையன்ட் தனது 13 வயது மகளான கியானா மற்றும் 7 பேருடன் தவுசண்ட் ஆக்ஸ் என்னும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். கடும் பனி மூட்டத்தின் நடுவே மேற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள கலாபஸாஸ் மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்த போது திடீரென விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது. இதில் பிரையன்ட், கியானா உட்பட ஹெலிகாப்டரில் பயணம் செய்த 9 பேரும் இறந்தனர்.
- ஐந்து முறை என்பிஏ சாம்பியனும், இரண்டு முறை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருமான பிரையன்ட் வரலாற்றில் மிகச் சிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். கடந்த இருபது ஆண்டுகளாக லாஸ் ஏஞ்சல்ஸ் லேக் கர்ஸ் அணியின் முக்கிய அங்கமாக பிரையன்ட் இருந்து வந்தார்.
- முன்னாள் கூடைப்பந்து வீரரான ஜோ பிரையன்டின் கடைசி மகனாக 1978 இல் வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள பில டெல்பியா நகரில் பிறந்தார் கோப் பிரையன்ட். 1996 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியில் இருந்து தனது என்பிஏ வாழ்க்கையை நேரடியாக தொடங்கிய பிரையன்ட் தான் ஓய்வு பெற்ற 2016 ஆம் ஆண்டு வரை கூடைப்பந்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தினார்.
- பெய்ஜிங்கில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆகியவற்றில் அமெரிக்க கூடைப்பந்து அணி தங்கப் பதக்கம் வென்றதில் பிரையன்டின் பங்கு அளப்பரியது.
- ஸ்டேபிள்ஸ் மையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 60 புள்ளிகள் குவித்த நிலையில் கூடைப்பந்து போட்டிகளில் இருந்து பிரையன்ட் ஓய்வு பெற்றார். 2018 ஆம் ஆண்டு கோப் பிரையன்டின் ‘டியர் பாஸ்கெட்பால்’ என்ற அனிமேஷன் குறும்படம் ஆஸ்கர் விருது வென்றிருந்தது. கோப் பிரையன்டுக்கு வனெஸ்ஸா என்ற மனைவியும் ஜியானா, பியான்கா, நடாலியா, காப்ரி என்ற 4 மகள்களும் உள்ளனர்.
- 20 ஆண்டுகள் கூடைப்பந்து உலகை கட்டிப்போட்டிருந்த ஓர் ஆளுமையின் திடீர் மரணம் உலகம் முழுவதுமுள்ள கூடைப்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவு கூடைப்பந்து நட்சத்திரங்கள் மட்டும் அல்லாது கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட மற்ற விளையாட்டு துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முக்கிய விருதுகள்
புரஸ்கார் விருது
- உலகம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட மேஜிக் ஷோக்களை நடத்திய தர்ஷ் மாலனி (12), இளம் தபேலா கலைஞர் மனோஜ் குமார் லோஹர் (11), பியானோ கலைஞர் கவுரி மிஸ்ரா, நடனக் கலைஞர் கோரக் விஸ்வாஸ், இரு திருடர்களிடம் இருந்து ரஷ்ய சுற்றுலாப் பயணியை காப்பாற்றிய இஷான் சர்மா (15), இளம் தத்துவார்த்த ஆசிரியர் ஓம்கார் சிங், மணிப்பூரில் குட்டையில் மூழ்கிய 3 சிறுமிகளை காப்பாற்றிய லால்கன்சுங் (10), பள்ளி சுற்றுச்சுவர் இடிந்த போது 2 சிறுமிகளை காப்பாற்றிய பெமா உள்ளிட்டோருக்கு ராம் நாத் கோவிந்த் விருது வழங்கி கவுரவித்தார்.
- புதிய கண்டுபிடிப்பு, சமூக சேவை, கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம், துணிச்சல் என பல்வேறு பிரிவுகளில் சிறந்த குழந்தைகளுக்கு பால சக்தி புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. பதக்கம், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு, சான்றிதழ், பாராட்டு பத்திரம் ஆகியவற்றை இவ்விருது கொண்டது.
தேசிய வாக்காளர் தின விருது
- கடந்த 1950 ஜனவரி 25 ஆம் தேதி மத்திய தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
- நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியானவர்களைக் கண்டறிந்து அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து அடையாள அட்டை வழங்குவதும், தேர்தல் நாட்களில் வாக்களிக்கத் தூண்டுவதும் வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
- தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த செய்திகளை ஆண்டு முழுவதும் வெளியிட்டு, தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் ஊடகங்களுக்கு வாக்காளர் தினத்தில் மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
- அச்சு, தொலைக்காட்சி, இணையதளம், வானொலி ஆகிய நான்கு பிரிவுகளில் இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு விருதுக்குரிய ஊடகங்களை தேர்வு செய்கிறது.
- மேலும் சிறப்பாக தேர்தல் பணியாற்றிய அதிகாரிகள், தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த களத்தில் பணியாற்றிய சமூக நல அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் 20 பேருக்கு அறிவிக்கப்பட்டன. இதில் அச்சு ஊடக பிரிவில் ‘தி இந்து’ குழுமத்தைச் சேர்ந்த ‘இந்து தமிழ் திசை’ நாளேடு தேசிய விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.
- டெல்லியில் 25.01.2020 நடைபெற்ற 10 வது தேசிய வாக்காளர் தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். அப்போது அச்சு ஊடகப் பிரிவில் ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டுக்கு தேசிய விருதை அவர் வழங்கினார். நாளேட்டின் ஆசிரியர் கே.அசோகன் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
- மத்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் இந்த முறை நாடு முழுவதும் அனைத்து மொழிகளின் அச்சு, மின்னணு ஊடகங்களுக்கு மொத்தம் 2 விருதுகள் மட்டுமே அளிக்கப்பட்டன. அச்சு ஊடகத்துக்கான விருதை ‘இந்து தமிழ் திசை’ பெற்றுள்ளது. இதன் மூலம் தேசிய வாக்காளர் தின விருதை பெறும் முதல் தமிழ் நாளேடு என்ற பெருமையை ‘இந்து தமிழ் திசை’ பெற்றுள்ளது.
- சிறப்பு விருதுகளின் பிரிவில், கணக்குகளை தணிக்கை செய்த மத்திய வருமான வரித் துறையின் முதன்மை தலைமை ஆணையர் மது மஹாஜன், அதன் புலனாய்வு பிரிவின் தலைமை இயக்குநர் பி.முரளிகுமார் ஆகியோர் விருதுகளைப் பெற்றனர். I.R.S குடிமைப் பணியில் இருந்த இருவரும் தமிழகத்தின் சிறப்பு பார்வையாளர்களாக செய்த பணியின் சாதனைக்காக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
- விழாவில் பங்கேற்ற மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய தேர்தல் ஆணையத்தின் 2 நூல்களை வெளியிட்டார்.
- ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், கஜகஸ்தான், மாலத் தீவுகள், மொரீஷியஸ், நேபாளம், இலங்கை நாடுகளின் தேர்தல் அதிகாரிகள் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
பத்ம விருதுகள் அறிவிப்பு
- நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 71 வது குடியரசு தினத்துக்கு முந்தைய தினமான 25.01.2020 அறிவிக்கப்பட்டன. ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
- இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் 25.01.2020 அறிவிக்கப்பட்டுள்ளன. சமூக சேவை, ஆன்மிகம், கலை, மருத்துவம், இலக்கியம், பொறியியல், கல்வி, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
- இந்த ஆண்டு பத்ம விபூஷண் 7 பேருக்கும், பத்ம பூஷண் 16 பேருக்கும் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் 118 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
- இந்த ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- இதில் உறவினர்கள் இல்லாத 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதி சடங்குகளை செய்தவர் முகமது செரீஃப் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்ம விபூஷண் விருதுகள் |
|
ஜார்ஜ் பெர்னாண்டஸ் | அருண் ஜேட்லி |
சுஷ்மா ஸ்வராஜ் | மறைந்த உடுப்பி மடாதிபதி ஸ்ரீவிஷ்வேஷ தீர்த்த ஸ்வாமிகள் |
குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் | |
பத்ம பூஷண் விருதுகள் |
|
தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் | டிவிஎஸ் குழும தலைவர் வேணு ஸ்ரீநிவாசன் |
பாட்மிண்டன் விளையாட்டு வீராங்கனை பி.வி.சிந்து | மனோகர் பாரிக்கர் |
பத்மஸ்ரீ விருதுகள் | |
தமிழகத்தைச் சேர்ந்த அமர் சேவா சங்கத்தின் நிறுவனரும், மாற்றுத் திறனாளியுமான சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன் | லலிதா – சரோஜா சிதம்பரம் |
சென்னை டாக்டர் ரவி கண்ணன் | மனோகர் தேவதாஸ் |
கலி ஷாபி மகபூப் | ஷேக் மஹபூப் சுபானி |
பிரதீப் தாளபில் | ஜெகதீஷ் லால் அகுஜா |
வி.கே.முனுசாமி கிருஷ்ண பக்தர் | ஜித்து ராய் |
தருண்தீப் ராய் | ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் |
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் | மஹிந்திரா நிறுவனத் தலைவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா |
இந்தி நடிகை கங்கனா ரணாவத் | கரண் ஜோஹர் |
ஏக்தா கபூர் | முகமது செரீஃப் |
மூழிக்காள் பங்க ஜாக்சி | அட்னன் சாமி |
ஹரே கலா ஹஜப்பா |
தமிழக அரசு விருதுகள்
வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் |
|
ஏகேஷ் | பிரிஸ்டன் பிராங்களின் |
வினித் | சார்லிபன் |
ஈஸ்டர் பிரேம்குமார் | தீயணைப்புத் துறை ஓட்டுநர் இரா.ராஜா |
காட்டுப்பாக்கம் தனலட்சுமி | கோணிமேடு வினோதினி |
ஒரத்தநாடு இந்திரா காந்தி, அவரது கணவர் பழனியப்பன் |
- ஒவ்வொருவருக்கும் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம், தலா ரூ. 1 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை முதல்வர் வழங்கினார்.
கோட்டை அமீர் விருது
- திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் கிராமத்தில் இந்து – முஸ்லிம் மக்களிடையே எந்தப் பிரச்சினையும் இன்றி ஊர்வலம் அமைதியாக நடைபெற உதவிய மு.ஷாஜ் முகமதுவுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் மற்றும் ரூ. 25 ஆயிரத்துக்கான கேட்புக் காசோலையை முதல்வர் வழங்கினார்.
காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் |
|
காவல் ஆய்வாளர் எஸ்.சந்திரமோகன் | காவல் ஆய்வாளர் தே.ராஜசேகரன் |
காவல் நிலைய ஆய்வாளர் த.பூங்கோதை | உதவி ஆய்வாளர் என்.அழகிரி |
தலைமைக் காவலர் அ.பார்த்திபநாதன் |
- சிறந்த காவல் நிலையங்களுக்கான முதலமைச்சரின் முதல் பரிசு கோவை சி2 பந்தயச் சாலை காவல் நிலைய ஆய்வாளர் ஏ.சக்தி வேல், 2 வது பரிசு திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பி.உலகநாதன், 3 வது பரிசு தருமபுரி நகர காவல் நிலைய ஆய்வாளர் சி.எம்.ரத்தினகுமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
- திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக உற்பத்தி செய்யும் விவசாயி ஒருவருக்கு ரூ. 5 லட்சம் பரிசுடன் வேளாண்மைத் துறை சிறப்பு விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதன்படி ஹெக்டேர் ஒன்றுக்கு 16 ஆயிரத்து 750 கிலோ தானிய மகசூல் பெற்று சாதனைப் படைத்த ஈரோடு மாவட்டம், சென்னிமலை வட்டம், குன்னாங்காட்டு வலசு, பசுவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சு.யுவக்குமாருக்கு வேளாண்மைத் துறை சிறப்பு விருது, ரூ. 5 லட்சத் துக்கான காசோலை, ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பதக்கத்தை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
ராணி ரம்பால்
- கௌரவமிக்க உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை 2019 விருதை (வோ்ல்ட் கேம்ஸ் அதலெட் ஆஃப் தி இயா்) வென்றார் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால். இதன் மூலம் இந்த விருதை பெற்ற முதல் ஹாக்கி வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
- வோ்ல்ட் கேம்ஸ் கூட்டமைப்பு சார்பில் கடந்த 20 நாள்களாக இதற்காக இணையம் மூலம் வாக்கெடுப்பு நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து விளையாட்டு ரசிகா்கள் வாக்களித்த நிலையில் மொத்தம் 1,99,477 வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார் ராணி.
- கடந்த ஆண்டு எஃப்ஐஎச் சீரிஸ் தொடா் விருது வென்ற ராணியின் அபார ஆட்டத்தால் ஒலிம்பிக் போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற்றது.
- அவருக்கு அடுத்த நிலையில் 92,000 வாக்குகளுடன் உக்ரைன் கராத்தே வீரா் ஸ்டானிஸ்லேவ் ஹொருனா, கனடா பவா்லிப்டிங் சாம்பியன் ரயா ஸ்டின் ஆகியோர் உள்ளனா்.