January 3rd Week CA – 2020

Share:

உலகம்


ரெய்சினா மாநாடு

  • சா்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடா்பான ‘ரெய்சினா பேச்சுவார்த்தை’ மாநாடு, தில்லியில் ஜனவரி 14 இல் தொடங்கியது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், அப்சா்வா் ரிசா்ச் ஃபவுண்டேஷனும் இணைந்து 3 நாள்கள் இந்த மாநாடு நடைபெற்றது.
  • தொடக்க விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோர் பங்கேற்றனா். அவருடன் 7 நாடுகளைச் சோ்ந்த முன்னாள் பிரதமா்கள் மற்றும் மூத்த அரசியல் தலைவா்கள் பங்கேற்றனா்.
  • 3 நாள்கள் நடைபெற்ற மாநாட்டில் 100 நாடுகளில் இருந்து 700 பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
  • ரஷியா, ஈரான், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களும் பங்கேற்றனா்.
  • சா்வதேச வா்த்தகம், அரசியல், பொருளாதாரம், ராணுவ வலிமை, சா்வதேச வளா்ச்சி ஆகியவற்றை நிர்ணயிப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு என 5 தலைப்புகளில் 80 க்கும் மேற்பட்ட அமா்வுகளில் விவாதம் நடைபெற்றது.
  • இந்த மாநாட்டில் பங்கேற்று பேச இருப்பவா்களில் 40 சதவீதம் போ் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • நியூஸிலாந்து முன்னாள் பிரதமா் ஹெலன் கிளார்க், ஆப்கன் முன்னாள் அதிபா் ஹமீது கா்ஸாய், கனடா முன்னாள் பிரதமா் ஸ்டீபன் ஹார்ப்பா், ஸ்வீடன் முன்னாள் பிரதமா் கார்ல் பில்த், டென்மார்க் முன்னாள் பிரதமா் ஆண்டா்ஸ் ராஸ்முஸன், பூடான் முன்னாள் பிரதமா் ஷெரிங் தோப்கே, தென்கொரியா முன்னாள் பிரதமா் ஹான் சியூங்-சூ ஆகியோர் சா்வதேச நாடுகள் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் குறித்து ஆலோசனை நடத்தினா்.
  • ஈரான் வெளியுறவு அமைச்சா் ஜாவேத் ஸரீஃப், ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் ஆகியோர் ரெய்சினா பேச்சுவார்த்தையில் பங்கேற்றனா்.

லிபியா அமைதி மாநாடு

  • உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் லிபியாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உலகத் தலைவர்கள் ஜனவரி 19 இல் கூடினர்.
  • லிபியாவில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படையினருக்கும், முன்னாள் ராணுவ தளபதி காலிஃபா ஹஃப்தாரின் படையினருக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது.
  • அந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, உலகத் தலைவர்கள் ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு வந்தனர்.
  • ஐ.நா.வின் அழைப்பை ஏற்று இந்த மாநாடு நடைபெறுகிறது. ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், துருக்கி அதிபர் எர்டோகன், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் உள்ளிட்ட தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
  • ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் பங்கேற்கும் இந்த மாநாட்டில், காலிஃபா ஹஃப்தார் படை, சர்வதேச அங்கீகாரம் பெற்ற பிரதமர் ஃபாயஸ் அல்-சராஜ் தலைமையிலான அரசு ஆகிய இரு தரப்பையும் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும், சர்வதேச அமைதி மாநாட்டில் பங்கேற்பது கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • லிபியாவை 40 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டு வந்த அல்-கடாஃபியின் ஆட்சியை, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் உதவியுடன் கிளர்ச்சிப் படையினர் கடந்த 2011 ஆம் ஆண்டு கவிழ்த்தனர்.
  • அதற்குப் பிறகு அந்த நாட்டில் பல்வேறு ஆயுதக் குழுக்களும் தங்களுக்குள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன. சர்வதேச அங்கீகாரம் பெற்ற பிரதமர் ஃபாயஸ் அல்-சராஜ் தலைமையிலான அரசுப் படையினருக்கும், முன்னாள் ராணுவ தளபதி காலிஃபா ஹஃப்தார் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
  • துருக்கியைப் பூர்விகமாகக் கொண்ட ஃபாயஸ் அல்-சராஜ் அரசுக்கு ஆதரவாக, லிபியாவுக்கு தங்கள் நாட்டுப் படையினரை அனுப்ப துருக்கி முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹஃப்தார் படையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களில் எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளனர்.

அரசவைப் பட்டங்களைக் கைவிட்டனர் ஹாரி, மேகன்

  • பக்கிங்ஹம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தில் இளவரசர் ஹாரியும், இளவரசி மேகன் மார்க்கலும் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலம், இளவரசர், இளவரசி பட்டங்களை அவர்கள் துறக்கின்றனர்.
  • அவர்கள் அரச குடும்பத்திலிருந்து வெளியேறியதால், அவர்களது பெயர்களுக்குப் பிறகு இனி மேன்மை மிகு என்ற வாசகத்தை சேர்க்க வேண்டியதில்லை.
  • அரசவை சேவைக்காக அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த அரசு நிதி இனி வழங்கப்படாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அரசி எலிசபெத் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு குடும்பத்திலிருந்து ஹாரி விலகினாலும், அவர் தங்களது அன்புக்குரிய குடும்ப உறுப்பினராகத் தொடர்ந்து இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
  • பிரிட்டன் அரச குடும்பத்துக்குள் பூசல்கள் நிலவுவதாக ஊடகங்கள் கூறி வந்த நிலையில், அரச குடும்பத்தின் முதன்மை உறுப்பினர்கள் என்ற அந்தஸ்தைக் கைவிடுவதாக ஹாரியும், மேகன் மார்க்கலும் கடந்த 9-ஆம் தேதி அறிவித்தனர்.
  • வாழ்நாளின் அடுத்த கட்டத்தை தங்களது மகனுடன் கழிக்கவிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். பிரிட்டனில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, அரச குடும்பத்திலிருந்து விலகுவதற்கான ஆவணத்தில் அவர்கள் தற்போது கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தியா


முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்றம்

  • டெல்லியில் தற்போது பயன்பாட்டில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடமானது ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்டது ஆகும். எட்வின் லூடெய்ன்ஸ், ஹெர்பெர்ட் பேக்கர் ஆகிய இங்கிலாந்து பொறியாளர்கள் இந்தக் கட்டிடத்தை வடிவமைத்திருந்தனர்.
  • இந்த நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டு 93 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதை கவனத்தில் கொண்டும், புதிதாக ஒரு நாடாளுமன்றக் கட்டிடத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது.
  • முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மத்திய அரசிடம் கடந்த ஆண்டு ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். அதில், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.
  • தற்போது இருக்கும் நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு மாற்றாக புதிய கட்டிடத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, வரும் 2024-ம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
  • இந்தப் புதிய கட்டிடத்திற்கான ஒப்பந்தமானது குஜராத்தில் உள்ள ‘ஹெச்.சி.பி. டிசைன்’ என்ற நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்நிறுவனமானது புதிய நாடாளு மன்றக் கட்டிடத்தின் மாதிரி வரைபடத்தை வெளியிட்டது.
  • புதிய நாடாளுமன்றக் கட்டிடம் முக்கோண வடிவில் அமையவுள்ளதாக தெரிகிறது. அதன் மேற்பரப்பில் கூம்பு வடிவிலான ஓர் அமைப்பும், அதற்கு அருகில் மூவர்ணத்துடன் கூடிய ஸ்தூபி (அரைக்கோளம்) வடிவ அமைப்பும் உள்ளன.
  • பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தின் அருகாமையில் 13 ஏக்கர் பரப்பில் இந்தப் புதிய நாடாளுமன்றத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 1,350 எம்.பி.க்கள் வரை தாராளமாக அமரலாம் என்றும், மக்களவையில் மட்டும் 900 எம்.பி.க்கள் வரை அமர முடியும் என்றும் ‘ஹெச்.சி.பி. டிசைன்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைநகரங்கள் மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

  • ஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் திட்டத்தை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முன்மொழிந்தது. அதன்படி நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினமும், சட்டப்பேரவை தலைநகராக அமராவதியும், நீதி பரிபாலன தலைநகராக கா்னூலும் செயல்பட திட்டமிடப்பட்டது.
  • இதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான மசோதா, அந்த மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ‘ஆந்திரத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் நிர்வாக பரவலாக்கம், 2020’ என பெயரிடப்பட்டுள்ள அந்த மசோதாவில், மாநிலத்தை பல்வேறு மண்டலங்களாக பிரித்தல், மண்டல திட்டமிடுதல் மற்றும் மேம்பாட்டு வாரியங்கள் அமைத்தல் உள்ளிட்ட கூறுகள் இடம்பெற்றுள்ளன.
  • கடந்த ஆண்டு, ஆந்திர அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட கிராம மற்றும் நகராட்சி வார்டுகளுக்கான தலைமைச் செயலக திட்டத்துக்கு சட்டப்பூா்வ அனுமதி பெறவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியினா் பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டனா். அவா்கள், அவைக் காவலா்கள் மூலம் வெளியேற்றப்பட்டனா். பின்னா், அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • ஆந்திர தலைநகா் பகுதி மேம்பாட்டு ஆணையச் சட்டம் 2014-ஐ நீக்குவதற்கான மசோதாவையும் ஆளும் மாநில அரசு தாக்கல் செய்தது. அப்போது ஆந்திர பெருநகர பகுதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டு ஆணையங்கள் சட்டம் 2016-ன் கீழ் புதிதாக அமராவதி பெருநகர மேம்பாட்டு பகுதியை ஏற்படுத்த உத்தேசிப்பதாக மாநில அரசு தெரிவித்தது.
  • கடந்த 2014-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தலைநகா் பகுதி மேம்பாட்டு ஆணையச் சட்டம் (CRDA) ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகு, குறிப்பிட்ட பகுதியை தலைநகராக வரையறுத்து, அதன் மேம்பாட்டுக்கு வழிவகுப்பதற்காக உருவாக்கப்பட்டது.
  • சட்டமேலவையில் ஆளும் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், அங்கு இந்த மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல் நிலவுகிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்


இந்திய – ஜப்பான் கடலோர காவல் படை வீரர்கள் கூட்டு பயிற்சி

  • 19 வது ஆண்டு கூட்டு பயிற்சியை மேற்கொள்ள கடந்த 13 ஆம் தேதி சென்னை வந்த ஜப்பான் கடலோரக் காவல் படை கப்பல் ‘எச்சிக்கோவில்’ வீரர்கள் 60 பேர் வந்தனர்.
  • இரு நாட்டு வீரர்களுக்கும் புதிய தொழில் நுட்பங்களைக் கையாள்வது, கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
  • சென்னையை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் 16.01.2020 இரு நாட்டு வீரர்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர். ‘சாயோக் கைஜின்’ என பெயரிடப்பட்ட இக்கூட்டுப் பயிற்சியில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வணிகக் கப்பலை மீட்கும் பணிகளை இரு நாட்டு வீரர்களும் தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

ஜிசாட் – 30 செயற்கைக்கோள்

  • ஐரோப்பிய விண்வெளி மையத்துக்கு சொந்தமான ஏரியன் – 5 ராக்கெட் மூலமாக இந்தியாவின் ஜிசாட் – 30 செயற்கைக்கோள் 17.01.2020 அதிகாலை 2.35 மணிக்கு (இந்திய நேரப்படி) விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 38 வது நிமிடத்தில் புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
  • இந்தியாவின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இன்சாட், ஜிசாட் வகை செயற்கைக்கோள்களை இஸ்ரோ நிறுவனம் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. இதுவரை 40 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன.
  • கடந்த 2005 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட இன்சாட் – 4ஏ செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டது. எனவே அதற்கு பதிலாக ஜிசாட் – 30 செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இதன் எடை 3,357 கிலோ ஆகும்.
  • ஜிசாட் – 30 செயற்கைக்கோளானது 15 ஆண்டு ஆயுட்காலம் கொண்டது. டிடிஹெச் டெலிவிஷன், செயற்கைக்கோள்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம், செல்போன் தொடர்புகள், டிஜிட்டல் செய்தி சேகரிப்பு, கிராமப்புறப் பகுதிகளுக்கு டிஜிட்டல் சேவைகளை விரிவுப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு இந்த செயற்கைக்கோள் பெரிய அளவில் உதவி புரியும்.

பலூன் மூலம் 12 சிறிய செயற்கைகோள் ஏவப்பட்டன

  • வேலூர் விஐடி பல்கலைக்கழக விளையாட்டரங்கில் பள்ளி மாணவர்கள் சார்பில் பலூன் மூலம் 12 சிறிய செயற்கைக்கோள்கள் ஏவும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தேசிய வடிவமைப்பு ஆராய்ச்சி மன்றம், தி இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ், வேலூர் விஐடி பல்கலைக்கழகம் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
  • தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த 12 பள்ளி மாணவர்கள் உருவாக்கிய சிறிய செயற்கைக்கோள்களை ஏவும் நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
  • கவுரவ விருந்தினராக தேசிய வடிவமைப்பு ஆராய்ச்சி மன்றத்தின் தலைவரும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செயற்கைக் கோள்கள் அடங்கிய பலூனை பறக்க விட்டார்.

கே – 4 ஏவுகணை சோதனை வெற்றி

  • நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று எதிரி இலக்குகளைத் தாக்கும் கே – 4 (K4) ஏவுகணை ஜனவரி 19ல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
  • ஆந்திர மாநில கடற்பகுதியில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த ஏவுகணை 3,500 கி.மீ. தொலைவு வரை உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும். நீருக்கு அடியில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. பகல் நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  • இந்திய பாதுகாப்புத் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இந்த ஏவுகணையை உருவாக்கியது. இந்தியாவில் தயாரிக்கப்படும் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலில் இந்த ஏவுகணைகள் பொருத்தப்படும்.
  • நீர்மூழ்கி கப்பலில் பொருத்துவதற்கு முன்பு மேலும் பல கட்டங்களாக இந்த ஏவுகணை சோதிக்கப்படும் என்று தெரிகிறது. கே – 4 ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி ஏவுகணையாகும்.
  • 700 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளைத் தாக்கும் பிஓ-5 (PO5) ஏவுகணை இந்தியாவின் முதல் நீர்மூழ்கி ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.

சுகோய் 30 படைப்பிரிவு தொடக்கம்

  • தஞ்சாவூரில் 1940 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட விமானப்படை தளம் இரண்டாம் உலகப் போரின் போது செயல்பாட்டில் இருந்தது. இங்கிருந்து இங்கிலாந்து விமானப் படையை சேர்ந்த விமானங்கள் இயக்கப்பட்டன. சுதந்திரம் அடைந்த பிறகு இந்த விமானப்படை தளம் பயன்படுத்தப்படவில்லை.
  • இந்த தளத்தை சீரமைத்து 1988 இல் சிறிய பயணிகள் விமானம் (வாயுதூத்) சென்னைக்கு இயக்கப்பட்டது. பயணிகள் வருகை மிகவும் குறைந்ததைத் தொடர்ந்து நாளடைவில் இந்த சேவை நிறுத்தப்பட்டது.
  • தென்னிந்தியாவின் பாதுகாப்பில் பிரச்சினை ஏற்படும் போது, அவற்றை உடனடியாக சமாளிக்க, சுகோய் ரக போர் விமானங்களை இங்கிருந்து இயக்குவதற்கு தேவையான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டன.
  • கடந்த 2013 இல் தஞ்சாவூர் விமானப்படை தளத்தை அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் தரம் உயர்த்தப்பட்ட விமானத் தளமாக அறிவித்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து இங்கு சுகோய் விமானங்கள் மூலம் போர் விமானிகளுக்கு பயிற்சியும் தொடங்கி வைக்கப்பட்டது.
  • சுகோய் 30 ரக போர் விமானத்தில் இருந்து தரை இலக்கை நோக்கி பிரம்மோஸ் ஏவுகணையை ஏவும் சோதனை கடந்த ஆண்டு பிப்.23 ஆம் தேதி விமானப்படையால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
  • இந்திய விமானப் படையில் ‘டைகா் ஷார்க்ஸ்’ என்ற 222 வது போர் விமானப்படை பிரிவு தஞ்சாவூரில் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட 8 எண்ணிக்கையிலான சுகோய் 30 ரக போர் விமானங்களும் நிறுத்தப்படும்.
  • இந்த படைப்பிரிவை முப்படைகளுக்கான தலைமை தளபதி பிபின் ராவத் 20.01.2020 தொடங்கி வைத்தார். முன்னதாக தஞ்சாவூர் விமானப் படை தளத்தில் சாரங் ஹெலிகாப்டர் குழுவினரின் சாகச நிகழ்ச்சி, சூரிய கிரன் எனப்படும் விமானங்களின் போர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பொருளாதாரம்


ஹால்மார்க் முத்திரை கட்டாயம்

  • தங்க நகை வர்த்தகத்தில் முறைகேடுகளை தடுப்பதற்கு மூன்று கிரேடுகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்படுகிறது. அத்துடன் ஹால்மார்க் (Hallmark) முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
  • இந்த நடைமுறையை செயல்படுத்த ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
  • 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் உள்ளிட்ட மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகைகள் விற்பனை செய்யப்பட வேண்டும். அதே போல இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) சான்றான ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இடம் பெற வேண்டும்.
  • இதை முழுவதுமாக செயல்படுத்த ஜனவரி 15, 2021 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு இதை அமல்படுத்தாத வர்த்தகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தற்போது சில வர்த்தக நிறுவனங்கள் தாமாக முன்வந்து ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகளை விற்பனை செய்கின்றன. இதுவரை 40 சதவீத நகைகள் மட்டுமே இத்தகைய முத்திரை பெற்றுள்ளன.
  • 2021 ஜனவரி 15 முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளும் ஹால்மார்க் முத்திரை பெற்றதாக இருக்க வேண்டும். அத்துடன் மூன்று கிரேடுகள் அதாவது 14, 18 மற்றும் 22 கேரட் தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
  • இதற்கு முன்பு 10 கிரேடுகளில் தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இது தற்போது மூன்று கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
  • ஹால்மார்க் முத்திரை அளிப்பதற்கு 234 மாவட்ட மையங்கள் உள்ளன. ஏறக்குறைய 28,849 வர்த்தகர்கள் பிஐஎஸ் (BIS) பதிவு பெற்றுள்ளனர்.
  • இதை மீறுவோர் மீது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது அவரிடம் உள்ள பதிவு செய்யப்படாத தங்க நகைகளின் மதிப்பில் 5 மடங்கு அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
  • சர்வதேச வர்த்தக அமைப்பான டபிள்யூடிஓ (WTO), தங்க நகை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பிஐஎஸ் (BIS) தரச்சான்றை கட்டாயமாக்கியுள்ளது. டபிள்யூடிஓ அமைப்பில் இடம் பெற்றுள்ள 164 உறுப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • இந்தியா ஆண்டுக்கு 700 முதல் 800 டன் வரையிலான தங்கத்தை இறக்குமதி செய்கிறது.

மொத்த விலை பணவீக்கம் 2.59 % ஆக உயர்வு

  • மொத்த விலை சார்ந்த பணவீக்கம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் 2.59 % ஆக உயர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில் 0.58 % ஆக இருந்தது.
  • வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, உணவுப் பொருட்கள் சார்ந்த பணவீக்கம் டிசம்பரில் 13.24 % ஆக உயர்ந்துள்ளது. நவம்பரில் 11 % ஆக இருந்தது.
  • காய்கறிகள் சார்ந்த பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 45.32 % ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 69.9 % ஆக அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்கள் சாராதவற்றின் பணவீக்கம் டிசம்பர் மாதம் 7.72 % ஆக உயர்ந்துள்ளது. நவம்பரில் 1.93 % ஆக இருந்தது.

தமிழ்நாடு


சொட்டு நீர் பாசனத்தில் தமிழகம் முதலிடம்

  • சொட்டு நீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்தியதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. சொட்டு நீர் பாசனத்தால் தரமான விளைபொருள் கிடைப்பதால், விவசாயிகளுக்கு விளைச்சலுடன், வருமானமும் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
  • தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட ஆறுகள் இருந்தாலும் பெரும்பாலான ஏக்கர் நிலங்கள் திறந்தவெளி கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் மூலமாகவே பாசன வசதி பெறுகின்றன. போதிய மழைப்பொழிவு இல்லாதது, அதிக வெயில் உள்ளிட்ட காரணங்களால் நீர் ஆதாரங்களின் அளவு குறைந்து வருகிறது.
  • இதனால் தண்ணீர் சிக்கனம் அவசியமாகி வருகிறது. எனவே, சொட்டு நீர் பாசனத்துக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. விவசாயிகளுக்கு அதற்கான உதவிகள், மானியம் வழங்கப்படுகின்றன.
  • 5 ஏக்கர் வரை வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனத்துக்காக ஆழ்குழாய் கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம், குழாய்களுக்கு ரூ.10 ஆயிரம், தொட்டிகள் அமைக்க ரூ.40 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
  • நெல், கரும்பு, வாழை, தென்னை, காய்கறிகள், மலர்கள் சாகுபடிக்கு அதிக அளவில் சொட்டு நீர்ப் பாசனம் பயன்படுத்தப்படுகிறது.
  • சொட்டு நீர் பாசனத்துக்காக 2019 – 20 ஆண்டில் மத்திய, மாநில அரசுகள் ரூ.1,370 கோடி ஒதுக்கின. இதில், இதுவரை ரூ.758 கோடியில் 1.58 லட்சம் ஹெக்டேரில் சொட்டு நீர் பாசன வசதி செய்து தரப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தை செயல்படுத்தியதில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. அடுத்ததாக, கர்நாடகாவில் 1.25 லட்சம் ஹெக்டேர், குஜராத்தில் 77,858 ஹெக்டேர், ஆந்திராவில் 52,027 ஹெக்டேரில் சொட்டு நீர் பாசன வசதி செய்து தரப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் இதுவரை சொட்டு நீர் பாசனத்தால் 60 சதவீதம் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்துக்குள் மேலும் 1 லட்சம் ஹெக்டேரில் சொட்டு நீர் பாசன வசதி செய்து தரப்படும்.
  • கடந்த சில ஆண்டுகளாக போதிய மழைப்பொழிவு இல்லை. நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. இருப்பினும் சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி பரப்பு 40 சதவீதமும் விவசாய விளைபொருள் உற்பத்தி திறன் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. தவிர, விளைபொருளின் தரமும் அதிகரிக்கிறது.
  • உதாரணத்துக்கு, சொட்டு நீர் பாசனத்தில் உற்பத்தி செய்யப்படும் கரும்புகளின் உயரம், பருமன் ஒரே மாதிரி, அதிக பிழிதிறனுடன் தரமாக இருப்பதால், விவசாயிகளுக்கு போதிய விலையும் கிடைக்கிறது.
  • சொட்டு நீர் பாசனத்தால் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு விவசாயிகளின் விளைச்சலுடன், வருவாயும் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நெல்லையப்பர் கோயிலுக்கு முதல்முறையாக மத்திய அரசின் தரச்சான்று

  • சுவாமிக்கு படைக்கப்படும் பிரசாதம் சுகாதாரமாக தயாரிக்கப்படுவதில் தமிழகத்தில் முதல்முறையாக திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலுக்கு டெல்லியிலுள்ள மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தரச்சான்று (BHOG) வழங்கப்பட்டுள்ளது.
  • நாட்டிலுள்ள சிறிய மற்றும் பெரிய உணவு உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு செய்து, அவை தயாரிக்கும் உணவு பொருட்களுக்கு FSSAI அமைப்பானது சான்று வழங்கி வருகிறது.
  • மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள், தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சுவாமிக்கு படைக்கப்படும் பிரசாதங்களும் தரமானதாக தயாரிக்கப்படுவதை உறுதி செய்து ஹாக் (BHOG – Blissful Hygienic Offering to God) என்ற சான்றிதழையும் FSSAI வழங்குகிறது.
  • திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் மற்றும் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில்களில் சுவாமிக்கு படைக்கப்படும் பிரசாதம் சுகாதாரமாக தயாரிக்கப்படுவதை உறுதி செய்து, சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்காக பல்வேறு கட்டங்களாக கோயில் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
  • கடந்த 2 ஆம் தேதி இக்கோயில்களில் சுவாமிக்கு படைக்கப்படும் பிரசாதம், தண்ணீர் ஆகியவற்றின் மாதிரிகள் தனியார் மூலம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன. கடந்த 7, 8 ஆம் தேதிகளில் FSSAI சார்பில் அலுவலர்கள் இந்த கோயில்களில் ஆய்வு நடத்தினர்.
  • தமிழகத்தில் முதல்முறையாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு, சுவாமிக்கு படைக்கப்படும் பிரசாதமும் சுகாதாரமாக தயாரிக்கப்படுவதால் FSSAI இன் தலைமை செயல் அலுவலர் BHOG சான்று வழங்கியுள்ளார்.

18 ஆம் நூற்றாண்டு சதி கற்கள் கண்டுபிடிப்பு

  • உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் கிராமத்தில் இருந்து திருமுக்கூடல் செல்லும் சாலையில் உள்ளது எடமிச்சி கிராமம். உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் சு.பாலாஜி தலைமையில் தமிழர் தொன்மம் குழுவின் அமைப்பாளர் வெற்றித்தமிழன் ஆகியோர் இணைந்து கள ஆய்வு செய்தனர்.
  • தன் இனக்குழுவை காப்பதற்காக அல்லது தனது ஊரை காப்பதற்காக போரில் வீர மரணம் அடைந்த வீரனோடு, அவனது மனைவி தீ மூட்டி தானும் உயிரை மாய்த்துக் கொள்வது முன்பு வழக்கத்தில் இருந்துள்ளது. இத்தகைய உடன்கட்டை ஏறும் நிகழ்வுக்கு அக்காலத்தில் ‘சதி’ என்று பெயர்.
  • வீர மரணத்தை தழுவிய அத்தம்பதியின் நினைவை போற்றும் வகையில், அவர்களது உருவங்களை கல்லில் சிற்பமாக செதுக்கி வைத்து, அவற்றை வணங்கி வழிபடுவது அன்றைய நடைமுறை. இந்தக் கற்களுக்கு ‘சதி கற்கள்’ என்று பெயர்.
  • எடமிச்சி கிராமத்தின் குளக்கரையில் உடைந்த நிலையில் 2 சதி கற்களை கண்டறிந்தோம். 34 செ.மீ உயரமும் 47 செ.மீ அகலமும் கொண்ட ஒரு சதி கல்லில் 8 வரிகள் கொண்ட கல்வெட்டு எழுத்து காணப்படுகிறது.
  • 1706 ஆம் ஆண்டில் தனது கணவன் உயிரிழந்தவுடன் செந்தாமள் என்கிற பெண், தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டு உடன்கட்டை ஏறினார் என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் செந்தாமளின் உருவம் வலது பக்கமாகவும் அவரது கணவரின் உருவம் இடது பக்கமாகவும் புடைப்பு சிற்பங்களாக உள்ளன.
  • இன்னொரு சதி கல் 55 செ.மீ உயரம் 78 செ.மீ அகலத்தில் காணப்படுகிறது. இதில் வலது பக்கமாக கணவனின் உருவமும் இடது பக்கமாக மனைவியின் உருவமும் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
  • இதில் கணவனின் தலையில் உள்ள கொண்டை மேல் நோக்கிய நிலையில் ஒரு கயிற்றால் கட்டப்பட்டுள்ளது. காதில் அணிகலன், கழுத்தில் ஆரங்கள், புஜங்களில் வாகு வளையங்கள், மணிக்கட்டில் காப்புடன் வலது கையை மடக்கிய நிலையில், மார்பருகே ஒரு பொருளை ஏந்தியபடியும், இடது கையில் ஒரு வாளை ஏந்தியபடியும் செதுக்கப்பட்டுள்ளது.
  • இந்த சதி கற்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டு, சிற்ப அமைப்பு ஆகியவற்றை கொண்டு இவை 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருத முடிகிறது. இந்த 2 சதி கற்களையும் தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்றார்.

விளையாட்டு


2019 சிறந்த ஒருநாள் வீரர் ரோஹித்

  • சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரா் விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • இதன்படி ஒருநாள் ஆட்டத்தில் சிறந்த வீரா் விருது இந்திய துணை கேப்டன் ரோஹித் சா்மாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2019 இல் 7 சதங்கள் விளாசினார் ரோஹித். அதில் உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடங்கும்.
  • வளர்ந்து வரும் வீரரராக ஆஸி.யின் மார்னஸ் லேபுச்சேன் தோ்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டில் 11 டெஸ்ட்களில் மொத்தம் 1104 ரன்களை விளாசினார். கிரிக்கெட் உலகின் சிறந்த விருதான சா் கேரிபீல்ட் சோபா்ஸ் விருதுக்கு இங்கிலாந்து வீரா் பென் ஸ்டோக்ஸ் தோ்வு செய்யப்பட்டார். அவா் ஒருநாள் உலகக் கோப்பையை இங்கிலாந்து கைப்பற்ற உதவினார்.
  • ஐசிசி டெஸ்ட் சிறந்த வீரா் விருதை ஆஸி. பந்துவீச்சாளா் பேட் கம்மின்ஸ் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு 59 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • டி20 ஆண்டு சிறந்த வீரா் விருதை இந்தியாவின் தீபக் சாஹா் பெற்றார். வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்களை மட்டுமே தந்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் ஹாட்ரிக்கும் அடங்கும்.
  • ஐசிசி சிறந்த நடுவா் விருது ரிச்சிர்ட் இல்லிங்வொர்த்துக்கும், சிறந்த இணை உறுப்பினா் வீரா் விருது ஸ்காட்லாந்தின் கெயில் கோட்ஸருக்கும் வழங்கப்படுகிறது.
  • கடந்த 2018 இல் ஐசிசி சிறந்த வீரர் விருதை வென்ற கோலி, தற்போது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் என்ற சிறப்பு விருதை வென்றார். ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய – ஆஸி அணி ஆட்டத்தின்போது ஒராண்டு தடை முடிந்து களத்துக்கு திரும்பிய ஸ்மித்துக்கு ரசிகர்கள் வரவேற்பு தர வேண்டும் என வலியுறுத்தினார்.
  • தனக்கு வரவேற்பு தராமல் ஸ்மித்துக்கு வரவேற்பு தர வேண்டும் என விளையாட்டுத் தன்மையுடன் கோலி கூறியதால் இந்த விருது வழங்கப்படுகிறது.

அன்ஷு மாலிக்

  • இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரில் மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் அன்ஷு மாலிக், நைஜீரியாவின் ஒடுனயோ அடெகுரோயுடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஒடுனயோ 10 – 0 என்ற புள்ளிகள் கணக்கில் அன்ஷு மாலிக்கை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
  • 2 வது இடம் பிடித்த அன்ஷு மாலிக் வெள்ளிப் பதக்கம் பெற்றார். அதேவேளையில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் திவ்யா கரண், கனடாவின் டேனியல் சுசனிடம் தோல்வியடைந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

வினேஷ் போகத்

  • ரேங்கிங் சிரீஸ் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வென்றார்.
  • இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரில் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் வினேஷ் போகத், ஈக்வேடாரின் லூயிசா எலிசபெத் வால்வெர்டேவுடன் மோதினார். இதில் 4 – 0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார் வினேஷ் போகத்.
  • முன்னதாக உக்ரைனின் கிறிஸ்டியானா பெரேஸாவை 10 – 0 என்ற கணக்கிலும் சீனாவின் லன்னுவான் லூவை 15 – 5 என்ற கணக்கிலும், கியான்யு பாங்கை 4 – 2 என்ற கணக்கிலும் பந்தாடியிருந்தார் வினேஷ் போகத்.

ஆஷ்லே பார்டி

  • ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்ற அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிச் சுற்றில் அவர் 24 ஆம் நிலை வீராங்கனையான உக்ரைனின் டயானா யஸ்த்ரெம்ஸ்காவை 6 – 2, 7 – 5 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார்.
  • 9 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீராங்கனை பட்டத்தை கைப்பற்றியுள்ளார். கடைசியாக ஜார்மிலா வோல்ஃப் 2011 ஆம் ஆண்டு கோப்பையை வென்றிருந்தார்.
  • ஆடவர் பிரிவில் ரஷிய வீரர் ஆன்ட்ரே ரூப்லேவ் 6 – 3, 6 – 0 என்ற நேர் செட்களில் தென்னாப்பிரிக்காவின் லாயிட் ஹாரிஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

விராட் கோலி புதிய உலக சாதனை

  • ஒரு நாள் ஆட்டங்களில் 5 ஆயிரம் ரன்களை விரைவாகக் கடந்த கேப்டன் என்ற உலக சாதனையை படைத்தார் விராட் கோலி.
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களுருவில் ஜனவரி 19 இல் நடைபெற்ற இறுதி ஒருநாள் ஆட்டத்தில் இச்சாதனையை கோலி படைத்தார்.
  • அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த கேப்டன் என்ற சாதனையை தோனி (127 இன்னிங்ஸ்) நிகழ்த்தி இருந்தார். அதை முறியடித்து தற்போது வெறும் 82 இன்னிங்ஸ்களில் கடந்து புதிய உலக சாதனையை படைத்தார்.

அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த கேப்டன்கள்

  • கோலி 82 இன்னிங்ஸ், தோனி 127 இன்னிங்ஸ், ரிக்கி பாண்டிங் (ஆஸி.) 131 இன்னிங்ஸ், கிரேம் ஸ்மித் (தென்னாப்பிரிக்கா) 135 இன்னிங்ஸ், சௌரவ் கங்குலி (136 இன்னிங்ஸ்), முகமது அஸாருதீன் (151 இன்னிங்ஸ்), அா்ஜுனா ரணதுங்க (இலங்கை) 157 இன்னிங்ஸ், ஸ்டீபன் பிளெம்மிங் (நியூஸி.) 201 இன்னிங்ஸ்.

முக்கிய நபர்கள்


மைக்கேல் பத்ரா

  • கடந்த 2017 ஜனவரியில் வீரல் ஆச்சார்யா ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பொறுப்பேற்றார். அவருடைய பணிக்காலம் முடிய 6 மாதங்கள் இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராஜினாமா செய்தார்.
  • அதைத் தொடர்ந்து துணை கவர்னர் பதவி காலியாக இருந்து வந்த நிலையில், தற்போது மைக்கேல் பத்ராவை நியமிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அவர் பணியில் சேருவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
  • ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக உள்ள இவர் நிதிக் கொள்கை குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். பொதுவாக இப்பொறுப்புக்கு வெளியில் இருந்து பொருளாதார நிபுணர்கள்தான் நியமிக்கப்படுவது வழக்கம். இதற்கு முன்பு உர்ஜித் படேல் இப்பொறுப்பை வகித்தார். அதற்குப் பிறகு பத்ரா நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • கடந்த 5 நிதிக் கொள்கை முடிவுகளில் ஆர்பிஐ கவர்னர் எடுத்த வட்டிக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு பத்ரா ஆதரவாக வாக்களித்துள்ளார்.

முக்கிய விருதுகள்


தமிழ் வளர்ச்சித்துறை விருது

  • திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் 45 தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி முதல்வர் பழனிசாமி கவுரவித்தார்.

திருவள்ளுவா் திருநாள் விருதுகள்

(ரூ.1 லட்சம் காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதி உரை)

  • திருவள்ளுவா் விருது – நித்யானந்தபாரதி
  • தந்தை பெரியார் விருது – செஞ்சி ந.ராமச்சந்திரன்
  • அண்ணல் அம்பேத்கா் விருது – க.அருச்சுனன்.
  • பேரறிஞா் அண்ணா விருது – கோ.சமரசம்.
  • பெருந்தலைவா் காமராஜா் விருது – மா.சு.மதிவாணன்
  • மகாகவி பாரதியார் விருது – ப.சிவாஜி.
  • பாவேந்தா் பாரதிதாசன் விருது – தேனிசை செல்லப்பா
  • தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது – சே.சுந்தரராசன்.
  • முத்தமிழ்க்காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது – மணிமேகலை கண்ணன்.

சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருது: தமிழ்த்தாய் விருது

(ரூ.5 லட்சம் காசோலை, கேடயம், பொன்னாடை)

  • சிகாகோ தமிழ்ச் சங்கம் (நம்பி மற்றும் மணிகுணசேகரன்)

(ரூ.1 லட்சம் காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதி உரை)

  • கபிலா் விருது – வெற்றியழகன்
  • உ.வே.சா.விருது – வே.மகாதேவன்
  • கம்பா் விருது – சரசுவதி ராமநாதன்
  • சொல்லின் செல்வா் விருது – கவிதாசன்
  • ஜி.யு.போப் விருது – மரிய ஜோசப் சேவியா்
  • உமறுப்புலவா் விருது – லியாகத் அலிகான்
  • இளங்கோவடிகள் விருது – ஞானச்செல்வன் என்ற திருஞானசம்பந்தம்
  • அம்மா இலக்கிய விருது – உமையாள் முத்து
  • சிங்காரவேலா் விருது – அசோகா சுப்பிரமணியன் என்ற சோ.கா.சுப்பிரமணியன்
  • அயோத்திதாசப் பண்டிதா் விருது – வே.பிரபாகரன்
  • முதல்வரின் கணினித் தமிழ் விருது – த.நாகராசன்

சிறந்த மொழிபெயா்ப்பாளா் விருது

(தலா ரூ.1 லட்சம் காசோலை, விருதுக்கான தகுதி உரை)

  • சா.முகம்மது யூசுப் (மகன் அல்அமீன் பெற்றார்), மஸ்தான் அலி, சிவ.முருகேசன், ந.கடிகாசலம், மரபின் மைந்தன் (முத்தையா), வத்சலா, முருகுதுரை, மாலன் என்ற வே.நாராயணன், கிருசாங்கினி என்ற பிருந்த நாகராசன், அ.மதிவாணன்.

உலகத் தமிழ்ச் சங்க விருது

(ரூ.1 லட்சம் காசோலை, விருதுக்கான தகுதி உரை)

  • இலக்கிய விருது – பெ.ராசேந்திரன், மலேசியா.
  • இலக்கண விருது – முத்து கஸ்தூரி பாய், பிரான்ஸ்
  • மொழியியல் விருது – சுபதினி ரமேஷ், இலங்கை.

கலைச்செம்மல் விருது

(ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு, விருது)

  • எஸ்.கணபதி ஸ்தபதி, ராமஜெயம், எம்.தமிழரசி, எஸ்.கீா்த்திவா்மன், ஆ.கோபாலன் ஸ்தபதி, பி.எஸ்.நந்தன், பி.கோபிநாத், அனந்த நாராயணன் நாகராஜன், டக்ளஸ், எம்.ஜெயக்குமார்.

நூல்கள் நாட்டுடைமை

பரிசுத் தொகை (தலா ரூ.5 லட்சம்)

  • உளுந்தூா்பேட்டை சண்முகம்
  • கவிஞா் நா.காமராசன்
  • இளவரசு
  • அடிகளாசிரியா்
  • இறைக்குறுவனார்
  • பண்டித ம.கோபாலகிருட்டிணன்
  • பாபநாசம் குபித்தன்

Share:
error: Content is protected !!