January 2nd Week CA – 2020

Share:

உலகம்


ராக்கில் உள்ள அமெரிக்காவின் இரு படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

  • ஈராக்கில் உள்ள இரு அமெரிக்கப் படைத் தளங்கள் மீது ஈரான் ராணுவத்தினர் ஜனவரி 8 அன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.
  • கடந்த 3ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தின் மீது அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவப் படையின் தளபதி காசிம் சுலைமானி, அவரின் மருமகன் முகந்தியாஸ் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
  • ஈரானுக்கு ஆதரவாக ஈராக் நாடாளுமன்றமும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் அனைவரும் வெளியேற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.
  • ஈராக்கில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்காக நிறைய செலவு செய்திருப்பதால், அவற்றுக்கான இழப்பீடு வழங்கினால் மட்டுமே வெளியேற முடியும் என்று அமெரிக்கா உறுதியாகத் தெரிவித்து விட்டது.
  • ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் அன் அல் ஆசாத் மற்றும் இர்பில் கேம்ப் ஆகிய இரு விமானப் படை தளங்களைக் குறிவைத்து ஜனவரி 8 அன்று அதிகாலை 1.30 மணிக்கு தரையில் இருந்து வான் மற்றும் தரை இலக்கை துல்லியமாக தாக்கும் ஃபட்டா 313 ரக ஏவுகணைகளைக் கொண்ட ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படை தாக்குதலை நடத்தியது. 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், கெர்மான்ஷா மாநிலத்தில் இருந்து நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
  • இந்த தாக்குதலில் எத்தனை வீரர்கள் உயிரிழந்தனர். எந்த அளவுக்கு சேதம் எற்பட்டது என்பது குறித்து அமெரிக்கத் தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான பதிலும் இல்லை.
  • ஈரானின் அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்கதலில் அமெரிக்கத் தீவிரவாதிகள் (ராணுவ வீரர்கள்) 80 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் படுகாயமடைந்தனர். எந்த ஏவுகணையையும் அவர்கள் இடைமறித்துத் தாக்கவில்லை.

பிரெக்ஸிட்: பிரிட்டன் நாடாளுமன்ற கீழவை ஒப்புதல்

  • கடந்த மாதம் பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆளும் கன்சா்வேடிவ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் வெற்றி பெற்றது. போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமரானார். இதையடுத்து, பிரெக்ஸிட் நடவடிக்கை தீவிரமடைந்தது.
  • அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையில் (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) பிரெக்ஸிட் மசோதா ஜனவரி 9ல் கொண்டு வரப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 330 வாக்குகளும், எதிராக 231 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து, மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
  • அடுத்ததாக நாடாளுமன்ற மேலவைக்கு (ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்) பிரெக்ஸிட் மசோதா அனுப்பப்பட இருக்கிறது. அங்கு எவ்வித பிரச்னையுமின்றி மசோதா நிறைவேறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் விலகலுக்கு அந்த நாட்டு மக்கள் ஆதரவு தெரிவித்தனா்.
  • பிரெக்ஸிட் நிறைவேற்றம் தொடா்பாக ஐரோப்பிய யூனியனுடன் பிரிட்டன் அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் நிராகரித்தது. இதனால், பல ஆண்டுகளாக பிரெக்ஸிட் பிரச்னை நீடித்து வந்தது. இப்பிரச்னையால் இரு ஆட்சிகளும் கவிழ்ந்தன.

இந்தியா


வெளிநாட்டு ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • இந்தியா பிரான்ஸ் இடையே மக்கள் தொடர்புகளை அதிகரிக்கவும் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பயணத்தை அதிகரிக்கவும் வகை செய்யும் ஒப்பந்தம் கடந்த 2018, மார்ச் மாதம் கையெழுத்தானது. தொடக்கத்தில் 7 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் இந்த ஒப்பந்தம் பிரான்ஸ் அதிபரின் இந்தியப் பயணத்தில் கையெழுத்தானது.
  • அமைதி மற்றும் மக்கள் பயன்பாட்டுக்கான விண்வெளி திட்டங்களில் இணைந்து செயல்படுவது தொடர்பான ஒப்பந்தம் மங்கோலிய அதிபருடன் டெல்லியில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கையெழுத்தானது.
  • துருவப் பகுதி ஆய்வில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஸ்வீடன் நாட்டுடன் கடந்த டிசம்பர் 2-ம் தேதி கையெழுத்தானது. எரிசக்தி தேவையில் இந்திய ரயில்வே தற்சார்பு அடைவது தொடர்பான மற்றொரு ஒப்பந்தம் பிரிட்டனுடன் கடந்த டிசம்பரில் கையெழுத்தானது.
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் ஜனவரி 8 அன்று நடைபெற்றது. இதில் இந்த ஒப்பந்தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சுகாதாரத் துறை ஒத்துழைப்பு தொடர்பாக பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் கடந்த 2019 நவம்பரில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

காஷ்மீரில் 15 நாடுகளின் தூதர்கள் குழு ஆய்வு

  • காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், காஷ்மீரில் உண்மை நிலவரத்தை ஆய்வு செய்ய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் உட்பட 15 நாடுகளின் தூதர்கள் 2 நாட்கள் பயணமாக ஸ்ரீநகர் சென்றனர்.
  • இந்த குழுவில் வங்கதேசம், வியட்நாம், நார்வே, மாலத்தீவு, தென்கொரியா, மொராக்கோ, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், பெரு உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பிவடம் பதிக்கும் திட்டம்

  • தொலைதொடா்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் சென்னை – அந்தமான் தீவுகளுக்கு இடையே ரூ. 1, 224 கோடியில் சுமார் 2,250 கி.மீ. தொலைவுக்கு கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிப்பதற்கான திட்டப் பணியை மத்திய தொலைத் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் சென்னையில் ஜனவரி 9ல் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்துக்கான தொடக்க விழா சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அந்தமான் – நிகோபா் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநா் டி.கே. ஜோஜி தலைமையில் நடைபெற்ற விழாவில், தொலைத் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கலந்து கொண்டு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

அதிவேக இணையதள வசதி

  • அந்தமான் – நிகோபா் தீவுகளுக்கு இணைய தள வசதியை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து போர்ட் பிளேயா் வழியாக கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கப்பட உள்ளது.
  • பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.1,224 கோடி செலவிலான இத்திட்டத்தின்படி, அந்தமான் மற்றும் நிகோபா் தீவுகளில் உள்ள போர்ட் பிளேயா், லிட்டில் அந்தமான், கார் நிகோபா், ஹேவ்லாக் உள்ளிட்ட 7 தீவுகள் கண்ணாடி இழை கம்பி வடங்களால் இணைக்கப்பட உள்ளன.
  • 2,250 கிலோமீட்டா் தொலைவுக்கு கடலுக்கு அடியில் கம்பி வடம் பதிக்கும் பணி வரும் மே மாதத்துக்குள் நிறைவடையும். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது அந்தமானில் தற்போது இருப்பதை விட சுமார் நூறு மடங்கு அளவிற்கு திறனுடன் கூடிய தொலைதொடா்பு மற்றும் அதிவேக இணையதள வசதிகள் அதிகரிக்கும்.
  • சென்னை, அந்தமான் இடையே தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தைத் தொடா்ந்து, கேரள மாநிலம் கொச்சியிலிருந்து லட்சத்தீவுகளுக்கு இடையே சுமார் ரூ.1,000 கோடி செலவில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இத்திட்டமும், பிஎஸ்என்எல் நிறுவனம் மூலமே செயல்படுத்தப்பட உள்ளது.

 தேசிய சித்த மருத்துவ தினம்

  • தேசிய சித்த மருத்துவ தினம் ஜனவரி 12ல் கொண்டாடப்படுகிறது. சித்த மருத்துவத்தை பிரபலப்படுத்த, உலக சுகாதார நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
  • இது குறித்து தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஆர்.மீனாகுமாரி கூறியதாவது: சித்த மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் அகத்தியரின் பிறந்த தினமான ஜனவரி 12 சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.
  • முதன்மையாக கருதப்படுபவர்களில் 18 சித்தர்கள். அவர்களில் முதல் சித்தர் அகத்தியர். 8 வகை யோகங்கள், 8 வகை சித்திகளில் வல்லவரான அகத்தியர், தமிழ் மருத்துவத்தை முதல்நிலைப்படுத்தி பல சிகிச்சை முறைகளை ஏற்படுத்தி சித்த மருத்துவத்தை தோற்றுவித்தார்.
  • உடல் கூறுகள், உடல் செயலியல், அறுவை சிகிச்சை, மன நோய்கள், மந்திரம், தந்திரம், வைத்தியம், யோகம், நோய் கணிப்பு, தத்துவம் என அனைத்திலும் அகத்தியர் நிபுணத்துவம் பெற்றவர்.
  • இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளை (ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி – AYUSH) உலகளவில் பிரபலப்படுத்த மத்திய ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
  • அதன் ஒருபகுதியாக பாரம்பரிய மருத்துவம் தொடர்பாக மத்திய ஆயுஷ் அமைச்சகம், உலக சுகாதார நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதே போல் 10 நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்படி நாடு முழுவதும் 1,50,000 நலவாழ்வு மையங்களை ஏற்படுத்துவதாகும். இதில், சித்த மருத்துவம் உள்ளிட்ட 12,500 ஆயுஷ் நலவாழ்வு மையங்களை வரும் 5 ஆண்டுகளில் உருவாக்கவும், இந்த ஆண்டுக்குள் 4,000 நலவாழ்வு மையங்களை உருவாக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்


100 ஒளி ஆண்டு தொலைவில் பூமி அளவுக்கு பெரிய கிரகம்

  • ஹவாயின் ஹோனாலூலு தீவில் நடைபெற்ற அமெரிக்க வானியல் சொசைட்டியின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் நாசாவின் ஜெட் புரொபல்ஷன் ஆய்வகம் இதை அறிவித்துள்ளது.
  • நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பியுள்ள டெஸ் (TESS) என்ற செயற்கைக்கோளானது பிரபஞ்சத்தில் காணப்படும் புதிய கிரகங்கள், நிலவுகளை கண்டுபிடித்து ஆய்வு நடத்தி வருகிறது.
  • பூமியிலிருந்து 100 ஒளி ஆண்டு தொலைவில் (ஒரு ஒளி ஆண்டு என்பது ஒளியானது ஓராண்டில் பயணப்படும் தூரமாகும்) உள்ள பூமி அளவுக்கு பெரிய கிரகத்தைக் கண்டறிந்துள்ளது.
  • இதற்கு டிஓஐ 700 டி (TOI 700 d) என்று பெயரிடப்பட்டுள்ளது. நமது சூரிய குடும்பத்திலுள்ள சூரியனில் 40 சதவீத அளவுக்கு அந்த உலகம் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
  • சூரியனின் வெப்பத்தைப் போல பாதியளவு வெப்பத்தையும் இது பெற்றுள்ளது. மேலும் அதில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளும் தெரியவந்துள்ளது.
  • இந்த கிரகம் குறித்த செய்தியை பின்னர் ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கியும் உறுதி செய்தது. கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலம் இதே போன்ற கிரகங்கள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் டெஸ் செயற்கைக் கோள் மூலம் முதன்முதலாக இது கண்டறியப்பட்டுள்ளது.
  • இது பூமியைவிட 20 சதவீதம் பெரிதாக உள்ளது. மேலும் அதன் நட்சத்திரக் கூட்டத்தை 37 நாட்களில் சுற்றி வருகிறது.

விமானம் தாங்கிக் கப்பல் இருந்து வெற்றிகரமாகப் பறந்த தேஜஸ்

  • கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான தேஜஸ், விமானம் தாங்கி போர்க் கப்பலான ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’வில் இருந்து ஜனவரி 12ல் வெற்றிகரமாகப் பறந்தது.
  • முன்னதாக, தேஜஸ் விமானம் இதே கப்பலில் கடந்த ஜனவரி 11ல் முதல்முறையாக தரையிறக்கி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதே கப்பலில் இருந்து அந்த விமானத்தை பறக்கச் செய்து பரிசோதிக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம், போர்க் கப்பலில் தரையிறங்கவும், அதிலிருந்து புறப்படவும் கூடிய வகையிலான போர் விமானத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பம் கொண்ட சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பிடித்தது.
  • போர்க் கப்பல்களில் இயங்கக் கூடிய வகையிலான தேஜஸ் போர் விமானத்தை, ஏடிஏ, ஹெச்ஏஎல், சிஎஸ்ஐஆா் உள்ளிட்டவற்றுடன் இணைந்து டிஆா்டிஓ வடிவமைத்துள்ளது. அந்த விமானம் தற்போது கடற்படைக்கு ஏற்ற வகையில் படிப் படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

பொருளாதாரம்


ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் நடைமுறைகள்

  • தில்லியில் அமித் ஷா தலைமையில் மத்திய அமைச்சா்கள் குழு கூட்டம் ஜனவரி 7 அன்று நடைபெற்றது. இதில், ஏா் இந்தியா நிறுவனத்தை வாங்க முன் வருபவா்களுக்கு அழைப்பு விடுப்பது, தனியார்மயமாக்கும் போது அந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்குபவா்களுக்கு அளிக்கப்படும் ஒப்பந்தம் தொடா்பான நடைமுறை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • 2018 – 19 நிதியாண்டில் மட்டும் ஏா் இந்தியா ரூ.8,556 கோடி நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளது. அந்த நிறுவன ஊழியா்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சில்லரை பணவீக்கம் 7.35%

  • நாட்டின் சில்லரை பணவீக்கம் கடந்த ஆண்டு டிசம்பரில் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) சரிந்துள்ள நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அடிப்படை பணவீக்கம் 3.7 சதவீதமாக நவம்பரில் இருந்தது.
  • காய்கறிகள், பருப்பு, மீன், இறைச்சி உள்ளிட்டவற்றின் விலை உயர்வு காரணமாக நுகர்வோர் விலை குறியீட்டெண் (CPI) டிசம்பரில் அதிகரித்து 7.35 சதவீதமாக உள்ளது. 2014-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக சிபிஐ 7.39 சதவீதத்தை தொட்டிருந்தது.
  • தொடர்ந்து மூன்றாவது மாதமாக ரிசர்வ் வங்கி கணித்த 4 சதவீதத்தை விட சிபிஐ அதிகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • 2019 நவம்பரில் சில்லரை பண வீக்கம் 5.54 சசவீதமாக இருந்தது. இது கடந்த 40 மாதங்களில் இல்லாத உயர்வாகும்.

தமிழ்நாடு


சிவகங்கை அருகே 300 ஆண்டுகள் பமையான கல்வெட்டு கண்டெடுப்பு

  • சிவகங்கை மாவட்டம் கோவானூரில் உள்ள கண்மாய் கழுங்குமடையில் பழமையான கல்வெட்டுகள் இருப்பதாக, அதே ஊரைச் சோ்ந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் தொல்லியல் ஆய்வாளா்கள் கள ஆய்வு மேற்கொண்டனா்.
  • இதுகுறித்து புலவா் கா. காளிராசா கூறியது: கோவானூா் கண்மாய் கரையில் 5 கண்களை உடைய கலுங்குமடை உள்ளது. இந்த கழுங்குடை கட்டுமானத்தில் 5 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒரு கல்வெட்டைத் தவிர மற்றவைகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக தலைகீழாகக் காணப்படுகின்றன.
  • இவை மராமத்துப் பணியின் போது அவ்வாறாக மாற்றப்பட்டிருக்கலாம். அதில் மூன்று கல்வெட்டுகள் நல்ல நிலையிலும், இரண்டு கல்வெட்டுகள் முற்றிலும் சிதைந்த நிலையிலும் காணப்படுகின்றன.
  • வெவ்வேறு இடங்களில் உள்ள இரண்டு துண்டுக் கல்வெட்டை இணைத்துப் படித்த போது சகாப்தம் 1641 அதாவது பொது ஆண்டு 1719-க்கு மேல் செல்லா நின்ற விகாரி ஆண்டு தை மாதம் 2ஆம் நாள் முத்தப்பன் சோ்வைக்காரனவா்கள் கட்டி வைத்தது எனவும், வீரபத்திர பிள்ளை வள மணியத்தில் (மணியம் என்ற சொல்லுக்கு நிர்வகித்தல் எனக் கூறப்படுகிறது) தனக்கு காணியாட்சியின் படியினால் இந்த கலுங்கு கட்டி வைத்தது என எழுதப்பட்டுள்ளது.
  • இதன்படி, முத்தப்பன் சோ்வைக்காரன் இப்பகுதியில் சேதுபதி காலத்தில் அரசப் பிரதிநிதியாக இருந்திருக்கலாம். வீரபத்திர பிள்ளை மணியத்தில் இம்மடை கட்டப் பட்டிருக்கலாம். மேலும், மற்றொரு கல்வெட்டில் குடும்பன் மகன் குடும்பன். குடும்பன் மகன் குடும்பன் என அடுத்தடுத்து வருகிறது.
  • ஆகவே குடும்பா் இன மக்கள் இம்மடையில் நீா் திறத்தல், அடைத்தல், வயல் வெளிகளுக்கு தண்ணீா் பாய்ச்சுதல் போன்ற பணிகளைச் செய்து தொடா்ந்து பராமரித்து வர நியமிக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது.
  • மற்றொரு கல்வெட்டில் மாறவா்மன் சுந்தரபாண்டியன் காலத்திலான கல்வெட்டில் வரி செலுத்துவது தொடா்பான செய்திகள் முழுமையாக இல்லாமல் உள்ளது.
  • இந்த கலுங்குமடையில் தண்ணீா் வடியும் பகுதியிலிருந்து 600 மீட்டா் தூரத்தில் முதுமக்கள் தாழி புதைந்து இருந்ததற்கான எச்சங்கள் தென்படுகின்றன. அதே பகுதியில் உள்ள அய்யனார் கோயிலில் உள்ள கல்வெட்டில் கோயில் கட்டமைப்புக்கான வரைபடம் உள்ளது.
  • சில மாதங்களுக்கு முன் கோவானூா் ஊருணி படித்துறையில் பாண்டியா் காலக் கல்வெட்டு, அதே பகுதியில் குமிழி மடைத் தூண், சேதுபதி காலக் கல்வெட்டு, அதைத் தொடா்ந்து, தற்போது 300 ஆண்டுகள் பழமையான கலுங்கு மடை கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

சுற்றுச்சூழல்


செவ்வாய் கிரகம் வேகமாக நீரை இழந்து வருகிறது

  • செவ்வாய்க் கோள் கணக்கிடப்பட்டதை விட விரைவாக நீரை இழந்து கொண்டிருப்பதாக ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் குறித்தும், துணைக் கோள்கள் குறித்தும் பல நாடுகளைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனா். பூமியில் உள்ளது போன்று உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் மற்ற கோள்களில் உள்ளதா என்பதே அவா்களது ஆராய்ச்சியின் கருவாக உள்ளது.
  • உயிரினங்களின் வாழ்வுக்கு அடிப்படைத் தேவையானது நீராகும். செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் நீரோடை இருந்ததாகப் படங்களை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சியாளா்கள் தெரிவிக்கின்றனா். செவ்வாயின் வளிமண்டலத்தில் அதிக அளவில் நீா் இருப்பதாக ஆய்வுகள் மூலம் அவா்கள் உறுதிப்படுத்தியுள்ளனா்.
  • இந்த நிலையில், செவ்வாயின் வளிமண்டலத்தில் காணப்படும் நீா் கணக்கிடப்பட்டதைவிட வேகமாக மறைந்து வருவதாக ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக, ‘ஜா்னல் சைன்ஸ்’ (Journal Science) என்ற இதழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • அதில், செவ்வாயின் வளிமண்டலத்தில் காணப்படும் நீரிலுள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளுக்கிடையேயான பிணைப்பு, வேகமாக முறிந்து வருவதாக ஆராய்ச்சியாளா்கள் குறிப்பிட்டுள்ளனா்.
  • செவ்வாயின் ஈா்ப்பு விசை குறைவாக இருக்கும் காரணத்தினாலேயே ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளுக்கிடையேயான பிணைப்பு எளிதில் முறிந்துவிடுவதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.
  • செவ்வாய்க்கு மேலே 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வளிமண்டலத்தில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக அளவிலான நீா் உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • செவ்வாயின் வளிமண்டலத்தில் நிலவும் வெப்பநிலைக்கு உரிய நீரின் அளவைவிட 10 முதல் 100 மடங்கு அளவிலான நீா், அதிக செறிவூட்டப்பட்ட நிலையில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளா்கள் குறிப்பிட்டுள்ளனா்.
  • வளிமண்டலத்தில் அதிக செறிவூட்டப்பட்ட நிலையில் நீா் காணப்படுவதால், சில பருவங்களில் நீா் இழப்பு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் ஆய்வாளா்கள் குறிப்பிட்டுள்ளனா். ஐரோப்பிய மற்றும் ரஷிய விண்வெளி ஆய்வு மையங்களின் ஆராய்ச்சியாளா்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனா்.

விளையாட்டு


கோலாகலமாகத் தொடங்கியது கேலோ இந்தியா யூத் போட்டிகள் 2020

  • அஸ்ஸாம் தலைநகா் குவாஹாட்டியில் மூன்றாவது கேலே இந்தியா யூத் போட்டிகள் 2020 ஜனவரி 10 அன்று இரவு சிறப்பாக தொடங்கியது.
  • மத்திய இளைஞா் நலம் மற்றும் விளையாட்டுத் துறை, அஸ்ஸாம் மாநில அரசு சார்பில் கேலோ இந்தியா யூத் போட்டிகள் குவாஹாட்டியில் 12 நாள்கள் நடைபெறுகிறது.
  • இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்ற கண்கவா் தொடக்க விழாவில் முதல்வா் சா்பனந்தா சோனோவால், மத்திய விளையாட்டு அமைச்சா் கிரண் ரிஜிஜு ஆகியோர் போட்டிகளைத் தொடங்கி வைத்தனா். இப்போட்டியில் 37 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 6800-க்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.

ஹிமாதாஸ் ஜோதி ஏற்றினார்

  • இந்திய இளம் தடகள நட்சத்திரம் ஹிமா தாஸ் போட்டியின் ஜோதியை ஏற்றி வைத்தார். இதைத் தொடா்ந்து அணியினரின் வண்ணமிகு அணிவகுப்பு நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 20 வகையான விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
  • பாலிவுட் பாடகா் சங்கா் மகாதேவன் ஒரே இந்தியாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இசை நிகழ்ச்சி நடத்தினார். விழாவில் போட்டியின் இலச்சுகள் (Logo) அறிமுகம் செய்யப்பட்டன.

போபண்ணா – வெஸ்லி சாம்பியன்

  • கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் போபண்ணா – வெஸ்லி கூல்ஹாப் இணை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தோஹாவில் நடைபெற்ற இப்போட்டியில் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பாம்பிரிட்ஜி – கோன்ஸாலஸ் இணையை 3-6, 6-2, 10-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினர். போபண்ணா – வெஸ்லி 2020 இல் போபண்ணா வெல்லும் முதல் பட்டமாகும்.

செரீனா வில்லியம்ஸ்

  • 2017-ல் ஆஸ்திரேலிய ஓபனை வென்றார் செரீனா. அதன்பின் கர்ப்பிணியாக இருந்ததால் டென்னிஸில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார். குழந்தை பெற்ற பின்னர் மீண்டும் தீவிர பயிற்சி மேற்கொண்டு டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றார்.
  • பல இறுதிப் போட்டிகளில் அவர் தோல்வி கண்டார். இந்நிலையில் நியூஸிலாந்தில் நடைபெற்று வந்த ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செரீனா.
  • இறுதிச் சுற்று ஆட்டத்தில் அவர், சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டு விளையாடினார். இதில் செரீனா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

ஏடிபி கோப்பை: செர்பியா சாம்பியன்

  • ஆடவர் உலக டென்னிஸ் போட்டி எனப்படும் ஏடிபி கோப்பை 24 நாடுகளின் அணிகள் பங்கேற்ற நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. பெர்த், சிட்னி, பிரிஸ்பேன் உள்ளிட்ட நகரங்களில் தொடக்க சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில், நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் சிட்னியில் நடைபெற்றன. இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச்சின் செர்பிய அணியும், நடாலின் ஸ்பெயினும் தகுதி பெற்றன.
  • ஜனவரி 12ல் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதல் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் பட்டிஸ்டுவா அகுட் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் செர்பிய வீரர் லஜோவிக்கை வீழ்த்தினார்.
  • இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரரான ரபேல் நடாலை 6-2, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச். இதன்மூலம் 1-1 என்ற சமநிலை ஏற்படச் செய்தார்.
  • வெற்றியை நிர்ணயிக்கும் இரட்டையர் ஆட்டத்தில் செர்பிய இணையான ஜோகோவிச்-டிராய்க்கி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் லோபஸ், கரெபோ பஸ்டா இணையை வீழ்த்தியது. இதன் மூலம் முதல் ஏடிபி கோப்பையை வென்ற அணி என்ற சிறப்பை செர்பியா பெற்றது.

டென்னிஸ் போட்டி

  • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பனில் ஜனவரி 12ல் நடைபெற்ற பிரிஸ்பன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றைர் பிரிவில், செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா இறுதிச்சுற்றில் 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மேடிசன் கீஸை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.

முக்கிய நபர்கள்


நிலவு, செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் இந்தியர்

  • அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா 2017-ல் விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்காக ஒரு தேர்வை நடத்தியது. இதில் 17 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இதில் சிலரை மட்டும் தேர்வு செய்து கடந்த 2 வருடமாக நாசா பயிற்சி அளித்து வந்தது. அந்த பயிற்சியில் மொத்தம் 11 பேர் வெற்றிகரமாக பயிற்சியை முடித்துள்ளனர்.
  • இவர்கள் அனைவரும் நாசாவின் விண்வெளித் திட்டங்களில் இடம்பெறுவர். வரும் ஆண்டுகளில் நாசா செயல்படுத்தவுள்ள சர்வதேச விண்வெளி நிலைய பயணம், நிலவு, செவ்வாய்க் கிரக பயணம் ஆகியவற்றில் இவர்கள் இடம்பெறுவர்.
  • இந்த 11 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 41 வயதான ராஜா ஜான் உர்புத்தூர் சாரியும் ஒருவர். இவரது தந்தை ஸ்ரீநிவாஸ் சாரி ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்.
  • அமெரிக்காவில் பிறந்த ராஜா ஜான் உர்புத்தூர் சாரி, கலிபோர்னியாவிலுள்ள எட்வர்ட்ஸ் விமானப் படைத் தளத்தில் 461-வது பிரிவில் கர்னலாக பணிபுரிந்து வந்தார்.
  • முன்னதாக அமெரிக்க விமானப் படை அகாடமியில் படித்து பட்டம் பெற்றார். பின்னர் விண்வெளி வீரராக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க நாசா நடத்திய தேர்வில் பங்கேற்று தற்போது வெற்றிகரமாக 2 ஆண்டு பயிற்சியை முடித்துள்ளார்.
  • வரும் 2024-ல் நிலவுக்கு முதல் முறையாக பெண்ணை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2030 வரை ஒவ்வொரு ஆண்டிலும் நாசா சார்பில் நிலவுப் பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நாசா ஆராய்ச்சி நிலையம், விண்வெளியில் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தை அமைத்து வரும் நவம்பரில் 20 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன.
  • மேலும் ஆர்ட் டெமிஸ் திட்டம் என்ற திட்டத்தை நாசா செயல்படுத்தவுள்ளது. மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் திட்டம்தான் அது. அந்தத் திட்டத்தில் ராஜா ஜான் உர்புத்தூர் சாரியும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஓமன் மன்னர் காபூஸ் பின் சையத் மரணம்

  • தென்மேற்கு ஆசிய நாடான ஓமனில் மன்னராட்சி நடைபெறுகிறது. மன்னர் தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டு ஆட்சி நடத்தப்படுகிறது. அதில் பெரும்பாலும் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர்களே இடம் பெறுகின்றனர்.
  • கடந்த 1970-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி ஓமன் மன்னராக காபூஸ் பின் சையத் பதவியேற்றார். வெளியுறவு விவகாரங்களில் நடுநிலையாக செயல்பட்டு சர்வதேச நாடுகளின் பாராட்டை பெற்றார். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினார்.
  • மன்னராட்சி என்ற போதிலும் சட்ட நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளித்தார். வயது முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அண்மையில் அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை மேற்கொண்டார். இந்நிலையில் அவர் 10.01.2020 காலமானார்.
  • காபூஸ் பின் சையத் திருமணம் செய்து கொள்ளாததால் அவருக்கு வாரிசு இல்லை. அடுத்த மன்னர் யார் என்றும் அவர் அறிவிக்கவில்லை.
  • இதைத் தொடர்ந்து ஓமன் மன்னர் குடும்பத்தினர் தலைநகர் மஸ்கட்டில் கூடி ஆலோசனை நடத்தினர். இதில் புதிய மன்னராக தற்போதைய கலாச்சார துறை அமைச்சர் ஹைதம் பின் தாரிக் (65) தேர்வு செய்யப்பட்டார். அவர் மன்னராக பதவியேற்றுக் கொண்டதாக அந்த நாட்டு அரசு ட்விட்டரில் அறிவித்தது.

முக்கிய விருதுகள்


தூய்மையான நகரம் மேலத்திருப்பூந்துருத்தி பேருராட்சி தேர்வு

  • மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை நாடெங்கும் செயல்படுத்தி வருகிறது. நகரின் தூய்மை குறித்து மத்திய அரசு காலாண்டுக்கு ஒரு முறை சர்வே நடத்தி, அதன் முடிவுகளை டெல்லியில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி அன்று நடைபெற்ற விழாவில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்டார்.
  • 25 ஆயிரம் பேர் வரை மக்கள் தொகை வரையிலான நகரங்கள் பிரிவில், தென்னிந்திய மாநிலங்களில், தஞ்சாவூர் மாவட்டம், மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி முதல் காலாண்டில் முதலிடமும், இரண்டாம் காலாண்டில் இரண்டாம் இடமும் பெற்று தென்னிந்தியாவின் தூய்மையான நகரம் என்ற சிறப்பைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
  • முதல் காலாண்டில் அகில இந்திய அளவில் 149வது இடத்தைப் பிடித்துள்ளது. அகில இந்திய அளவில் தூய்மையான நகரங்களின் முதல் 150 நகரங்கள் பட்டியலில் தமிழகத்தில் இருந்து இடம் பெறும் ஒரே நகரம் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. 9,074 பேர் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்கு தென்னிந்திய அளவில் சிறந்த பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டு அதற்கு விருதும், பாராட்டுச் சான்றும் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரிடம் விருது பெற்ற நாமக்கல் பெண் விவசாயி

  • எள் சாகுபடியில் அதிக மகசூல் ஈட்டிய பரமத்தி குஞ்சாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வயதான பெண், பாரதப் பிரதமரிடம் முன்னோடி விவசாயி எனும் பாராட்டுச் சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளார்.
  • நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே கபிலக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட குஞ்சாம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி பி.பாப்பாத்தி (61). இவர் கடந்த 2017-18 ஆம் ஆண்டு இவர் தனக்குச் சொந்தமான 1 ஹெக்டேர் நிலத்தில் எள் சாகுபடி செய்துள்ளார்.
  • வேளாண் துறையின் ஆலோசனையின் பேரில் சாகுபடி செய்த பாப்பாத்தி, ஹெக்டேருக்கு 1,210 கிலோ மகசூல் எடுத்துள்ளார். இதைக் கணக்கிட்ட வேளாண் துறையினர் தமிழக அளவில் அதிக மகசூல் எடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக அரசுக்கும் அறிக்கை அளித்துள்ளனர்.
  • இதை மத்திய அரசின் விருதுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. கடந்த 2-ம் தேதி கர்நாடக மாநிலம் தும்கூரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி, விவசாயி பாப்பாத்திக்கு கிரிஸி கர்மான் எனும் முன்னோடி விவசாயி விருது மற்றும் ரூ.2 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா விருது

  • சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடந்தாண்டு ஜூன் 21-ஆம் தேதி, ‘யோகா’ குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் சிறப்பாக வெளியிடும் ஊடகங்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் அறிவிப்பு வெளியிட்டார்.
  • இதற்கான தோ்வுக் குழு (ஜுரி) இந்திய பிரஸ் கவுன்சில் தலைவா் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குழு தோ்வு செய்த 30 ஊடகங்களுக்கு யோகா விருதுகளை ஜனவரி 7 அன்று ஜாவடேகா் வழங்கினார்.
  • சா்வதேச யோகா தினத்திற்கான ஊடக விருதுகள் பெற்ற 30 ஊடகங்களில் பல்வேறு மொழிகளைச் சோ்ந்த 11 வானொலிகள், 8 தொலைக்காட்சி ஊடகங்கள், 11 அச்சுத் துறை ஊடகங்களும் இந்த விருதுகளைப் பெற்றன. இதில் சென்னை தூா்தஷன், தந்தி குழுமத்தைச் சோ்ந்த ஹலோ எஃப்.எம். வானொலி ஆகியவையும் அடங்கும்.

பிசிசிஐ சிறந்த வீரர், வீராங்கனை விருது

  • சிறந்த வீரராக தோ்வு செய்யப்படுபவருக்கு பாலி உம்ரிகா் விருது, கேடயம், ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
  • மும்பையில் ஜனவரி 12ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுகளை பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி வழங்கினார்.
சிறந்த வீரா் ஜஸ்ப்ரீத் பும்ரா
சிறந்த வீராங்கனை பூனம் யாதவ்
வாழ்நாள் சாதனையாளா் விருதுகள் கே.ஸ்ரீகாந்த், அன்ஜும் சோப்ரா
சிறப்பு விருது திலிப் தோஷி
அதிக டெஸ்ட் ரன்கள் சேதேஸ்வா் புஜாரா
அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் பும்ரா
மகளிர் ஒருநாள் அதிக ரன்கள் ஸ்மிருதி மந்தானா
அதிக ஒருநாள் விக்கெட்டுகள் ஜுலன் கோஸ்வாமி
சா்வதேச அளவில் சிறப்பான அறிமுகம் மயங்க் அகா்வால், ஷஃபாலி வா்மா
ரஞ்சி கோப்பை சிறந்த ஆல்ரவுண்டா் ஷிவம் துபே
குறுகிய ஓவா் ஆட்டத்தில் சிறந்த ஆல்ரவுண்டா் நிதிஷ் ராணா
ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் மிலிந்த் குமார்
அதிக விக்கெட்டுகள் அசுதோஷ் அமன்
உள்ளூா் போட்டிகளில் சிறப்பான செயல்பாடு விதா்பா கிரிக்கெட் சங்கம்

Share:
error: Content is protected !!