January 1st Week CA – 2020

Share:

உலகம்


புத்தாண்டு தினத்தில் குழந்தைகள் பிறப்பு

  • புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிகபட்சமாக 67,385 குழந்தைகள் இந்தியாவில் பிறந்துள்ளன.
  • ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப்அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் புத்தாண்டு தினத்தில் பிறக்கும் குழந்தைகள் குறித்த புள்ளி விவரத்தை வெளியிடுகிறது. 2020 புத்தாண்டு தினத்தில், ஜனவரி 1 ஆம் தேதி பிறந்த குழந்தைகள் பற்றி தகவலை வெளியிட்டுள்ளது.
  • ஐ.நா. சபை அளித்துள்ள தகவலில் ஜனவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் 3,92,078 குழந்தைகள் பிறந்தன என்றும், இந்தியா அதிகபட்சமாக 67,385 குழந்தைகள் பிறந்தன என்றும் கூறியிருக்கிறது.
  • இதுவரை குழந்தை பிறப்பு விகிதத்தில் முதலிடத்தைப் பிடிக்கும் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. உலகில் புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகளில் 17 சதவீதம் குழந்தைகள் இந்தியாவில் பிறந்தவை.
  • இந்தியாவுக்கு அடுத்து சீனாவில் 46,299 குழந்தைகளும், நைஜீரியாவில் 26,039 குழந்தைகளும், பாகிஸ்தானில் 16,787 குழந்தைகளும், இந்தோனேசியாவில் 13,020 குழந்தைகளும், அமெரிக்காவில் 10,452 குழந்தைகளும் பிறந்திருக்கின்றன.
  • ஐரோப்பிய நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ளதாக ஐ.நா.வின் புள்ளி விவரத்தில் தெரிய வருகிறது. 2020 ஆம் ஆண்டின் முதல் குழந்தை பிஜி நாட்டில் பிறந்துள்ளதாவும், புத்தாண்டு தினத்தின் கடைசி குழந்தை அமெரிக்காவில் பிறந்ததாகவும் ஐ.நா. கூறியுள்ளது.
  • பல நாடுகளில் புத்தாண்டு தினத்தில் குழந்தை பிறப்பது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. சில நாடுகளில் உள்ள பெண்கள் புத்தாண்டில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளனர் எனவும் ஐ.நா. தெரிவிக்கிறது.

ஆஸ்திரேலிய பிரதமரின் இந்தியப் பயணம் ரத்து

  • ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவி வரும் நிலையில், அந்நாட்டு பிரதமா் ஸ்காட் மோரிசன் இந்திய சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டார்.
  • ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 20 போ் உயிரிழந்து விட்டனா். 500 வீடுகள் எரிந்து விட்டன. விக்டோரியா மாகாணத்தின் மல்லகூட்டா பகுதியில் சுற்றுலாப் பயணிகள் உள்பட சுமார் 4,000 போ் சிக்கி தவித்து வருகின்றனா்.
  • காட்டுத் தீ காரணமாக நாட்டில் அசாதாரணமான சூழல் நிலவுவதால், தனது இந்தியச் சுற்றுப் பயணத்தை ஆஸ்திரேலிய பிரதமா் மோரிசன் ரத்து செய்துவிட்டதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
  • முன்னதாக, ஆஸ்திரேலிய பிரதமருடன் தொலைபேசியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, காட்டுத் தீயில் உயிரிழந்தவா்களுக்கு இந்திய மக்களின் சார்பில் இரங்கல் தெரிவிப்பதாக கூறினார். அத்துடன், இந்த இயற்கை பேரிடரை துணிவுடன் எதிர்கொண்டு வரும் ஆஸ்திரேலிய மக்களுக்கு இந்தியா ஆதரவு தெரிவிப்பதாகவும் அவா் கூறினார்.

அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி உயிரிழப்பு

  • ஈரானில் அணு ஆயுதம் தயாரிக்கப்படுவதாக கூறி அந்நாட்டின் மீது 1979 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளான ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதில்லை என உறுதியளித்தது.
  • அந்நாட்டின் அணுசக்தி சார்ந்த செயல்பாடுகளில் சில கடுமையான விதிமுறைகளை விதித்த வல்லரசு நாடுகள், அதன் மீது இருந்த பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றன. இது தொடர்பான ஒப்பந்தம், அமெரிக்க முன்னாள் அதிபர் ஓபாமா தலைமையில் 2015ம் ஆண்டு கையெழுத்தானது.
  • 2017ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து விட்டார். இதன் விளைவாக, ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை விழுந்தது. இதனால் அதிருப்தியடைந்த ஈரான், 2015ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரிக்க தொடங்கியது.
  • அது முதலாகவே, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. ஈரானை அச்சுறுத்தும் வகையில், அதன் அண்டை நாடான இராக்கில் தமது ராணுவப் படைகளை அமெரிக்கா குவித்து வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இராக்கில் தமது ராணுவப் படைகளை ஈரானும் குவிக்கத் தொடங்கியது.
  • இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது ஈரான் ஆதரவுப் படையான ‘கடாயெப் ஹிஸ்புல்லா’ கடந்த வாரம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். அமெரிக்கா, இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஈரான் ராணுவ முகாம் மீது கடந்த டிசம்பர் 30 அன்று வான்வெளி ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவத்தினர் 25 பேர் கொல்லப்பட்டனர்.
  • அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த ஈரான் ராணுவப் படைகள், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குள் டிசம்பர் 30 அன்று அத்துமீறி நுழைந்து கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. எனினும் அமெரிக்க பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் இராக் போலீஸாரின் எதிர் நடவடிக்கை காரணமாக அங்கு எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. ஆனால், தங்கள் நாட்டு தூதரகத்துக்குள் ஈரான் படையினர் நுழைந்ததை தமக்கு ஏற்பட்ட அவமானமாக அமெரிக்கா கருதியது.
  • தங்கள் நாட்டு ராணுவப் படையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதற்கு மூளையாக செயல்பட்ட ஈரான் ராணுவத் தலைமை தளபதி காசிம் சுலைமானியை குறி வைத்தது. இவர் ஈரான் ராணுவத்தின் ஓர் அங்கமான இஸ்லாமியப் புரட்சிப் பாதுகாப்புப் படையின் தலைமை தளபதி ஆவார்.
  • சிரியாவிலிருந்து இராக்குக்கு காசிம் சுலைமானி வருவதாக அமெரிக்க ராணுவத்துக்கு ஜனவரி 2 இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அன்று அதிகாலை பாக்தாத் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த காசிம் சொலேமானி, அங்கிருந்து வெளியே செல்வதற்காக காரில் ஏறினார்.
  • அப்போது தயார் நிலையில் இருந்த அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லாத விமானங்கள், தாழ்வாக பறந்து வந்து அவரது காரை குறிவைத்து ஏவுகணைகளை வீசின. இதில் அவரது கார் சுக்கு நூறாக சிதறியது. இந்த தாக்குதலில் காசிம் சுலைமானி, இராக் ராணுவ துணைத்தளபதி அபு மஹ்தி அல்முஹாந்திஸ் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
  • இந்த தாக்குதலானது அமெரிக்க அதிபரின் உத்தரவின் பேரிலேயே நடத்தப்பட்டதாக அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
  • இதனிடையே காசிம் சுலைமானியின் மரணத்துக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஈரான் முதன்மை தலைவர் அலி காமனேய் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பதிலடி காத்திருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

2020 செவிலியர்கள், தாதிகளுக்கான ஆண்டு

  • ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் 200-ம் பிறந்த நாளை நினைவு கூரும் விதமாக, 2020-ம் ஆண்டைச் செவிலியர்கள், தாதிகளுக்கான ஆண்டாக உலகச் சுகாதார மையம் (WHO) அறிவித்துள்ளது.
  • இதையொட்டி, ‘உலகச் செவிலியர்களின் நிலை’ அறிக்கையை முதன்முறையாக உலகச் சுகாதார மையம் தயாரித்து வருகிறது. உலகில் செவிலியர்கள், சுகாதார ஊழியர்களுக்கான தேவை 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாக உலகச் சுகாதாரம் மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா


முப்படை தளபதி தலைமையில் ராணுவ விவகாரங்கள் துறை

  • முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தலைமையில், ‘ராணுவ விவகாரங்கள் துறை’ என்ற புதிய துறையை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது.
  • கடந்த மாதம் 24ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. முப்படை தலைமை தளபதியின் தலைமையில் செயல்படுவதற்காக, ‘ராணுவ விவகாரங்கள் துறை’ என்ற புதிய துறையையும் மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது.
  • இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: ‘ராணுவ விவகாரங்கள் துறை’ என்ற புதிய துறையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதற்கு, முப்படை தலைமை தளபதியே தலைவராக இருப்பார். இந்த துறை ராணுவம் கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று படைகள் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும். படைகளுக்கு தேவையான தளவாடங்கள், ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் பணிகளும் இந்த துறை மூலம் மேற்கொள்ளப்படும்.
  • குறிப்பாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட படைக்கருவிகளை பயன்படுத்துவதை இந்த துறை ஊக்குவிக்கும். பாதுகாப்பு அமைச்சகத்தில் சமீபத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பாதுகாப்புத் துறை, ராணுவ விவகாரங்கள் துறை, பாதுகாப்பு உற்பத்தி துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை, முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை என 5 துறைகளாக பாதுகாப்பு அமைச்சகம் மாற்றப்பட்டு உள்ளது.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிஹார் அரசுடன் வாபேக் ரூ.1,187 கோடியில் ஒப்பந்தம்

  • நீர் சுத்திகரிப்பு மற்றும் மேலாண்மை நிறுவனமான வாபேக், ரூ.1,187 கோடி மதிப்பீட்டில் பிஹார் மாநிலத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்துககு ஒப்புதல் பெற்றுள்ளது. கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தின்கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தன்படி வாபேக் நிறுவனம் பாட்னாவில் உள்ள திகா மற்றும் கங்கர்பாக் ஆகிய இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க உள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட வாபேக், பல்வேறு நாடுகளில் நீர் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • இந்நிறுவனம், ஒரு நகரம் ஒரே ஆபரேட்டர் என்ற திட்டத்தை துருக்கியில் செயல்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து பெரு நகரங்களிலும் செயல்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த திட்டத்தின்கீழ், கங்கையை சுத்தப்படுத்துவதற்கு உத்தரப்பிரதேச அரசு இந்நிறுவனத்துடன் ரூ.1,477 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா – பாக். இடையே அணுமின் நிலையங்கள் பட்டியல் பரிமாற்றம்

  • இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த 1988 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளிலும் உள்ள அணுமின் நிலையங்கள் குறித்த தகவல்கள் இரு நாடுகளுக்கிடையே ஜனவரி 1 அன்று பரிமாறிக் கொள்ளப்பட்டன.
  • இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால், போரின் போது இரு நாடுகளிலும் உள்ள அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 1988 ஆம் ஆண்டு டிசம்பா் 31 ஆம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த 1991 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி அமலுக்கு வந்தது.
  • ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதி இரு நாடுகளிலும் உள்ள அணுமின் நிலையங்கள் குறித்த பட்டியல் பரிமாறிக் கொள்ளப்படுகிறது. தொடா்ந்து 29 ஆவது ஆண்டாக இந்த ஆண்டு ஜனவரி 1 அன்று தகவல்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டன.
  • தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலும், பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்திலும் ஒரே நேரத்தில் நிகழ்ச்சிகள் தொடங்கின. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களின் பட்டியல் பாகிஸ்தான் தூதரிடம் ஒப்படைக்கப்பட்டது. இஸ்லாமாபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தானில் உள்ள அணுமின் நிலையங்கள் குறித்த தகவல்கள் இந்திய தூதரிடம் ஒப்படைக்கப்பட்டன என்று இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகங்களும் தெரிவித்தன.

கடந்த ஆண்டில் பாக்.ராணுவம் 3,200 முறை அத்துமீறல்

  • ஜம்மு – காஷ்மீா் எல்லைப் பகுதியில் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக கடந்த 2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
  • கடந்த ஆண்டு மட்டும் 3,200 க்கும் மேற்பட்ட முறை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
  • ரோஹித் சௌதரி என்ற சமூக ஆா்வலா் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயக்குநா் சுலேகா அளித்துள்ள பதிலில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் மேலும் கூறியிருப்பதாவது:
  • ஜம்மு – காஷ்மீரில் இந்திய – பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்திய கிராமங்கள் மீதும், ராணுவ நிலைகள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக 3,289 முறை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு 9 முறை இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
  • ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட கடந்த ஆகஸ்ட் மாதத்துத்துக்குப் பிறகு 1,565 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. அதிகபட்சமாக, கடந்த ஆண்டு அக்டோபரில் மட்டும் 398 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
  • கடந்த 2018 ஆம் ஆண்டில் 2,936 முறையும், கடந்த 2017 ஆம் ஆண்டில் 971 முறையும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது என்று அந்தத் தகவலில் இடம் பெற்றுள்ளது.

பயணிகள் ரயில் சேவையில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த நிதி ஆயோக் பரிந்துரை

  • இந்திய ரயில்வே துறையில் ரயில் சேவைகளை தனியாருக்கு விடுவதற்கான ஆலோசனையை நிதி ஆயோக் அளித்துள்ளது. தனியாருக்கு விடுவதன் மூலம் ரூ.22,500 கோடி அளவுக்கு முதலீடுகள் ரயில்வே துறைக்கு வரும் என்றும் 100 மார்க்கங்களில் 150 ரயில் சேவையை நடத்தலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
  • பயணிகள் ரயில் சேவையில் தனியார் பங்களிப்பு என்ற ஆய்வு கடிதத்தை ரயில்வே துறைக்கு நிதி ஆயோக் அனுப்பியுள்ளது. பயணிகள் அடர்வு அதிகம் உள்ள 100 மார்க்கங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • ரயில் சேவையில் தனியார் ஈடுபடுத்தப்படும் பட்சத்தில் சந்தை நிலவரத்துக்கேற்ப பயணிகள் கட்டணத்தை நிர்ணயித்தக் கொள்ளலாம். அதே போல ரயில் பெட்டிகளில் பயணிகளின் அடர்வு மற்றும் முன்பதிவுக்கேற்ப மாற்றங்கள் செய்து கொள்ளலாம். மேலும் எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்வது என்பதையும் நிறுவனங்களே திட்டமிட்டு முடிவு செய்து கொள்ளலாம்.
  • பயணிகள் ரயில் சேவையில் தனியாரை ஈடுபடுத்துவதன் மூலம் நவீன தொழில் நுட்பங்களை புகுத்த முடியும். பயணிகளுக்கு கூடுதல் சவுகர்யமும் கிடைக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பயணிகள் அடர்வு உள்ள பகுதியில் கூடுதல் ரயில் சேவைகளை இயக்கவும் இது வழி வகுக்கும். ‘ரயில் சேவையில் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட முன் வரும் பட்சத்தில் அவற்றையும் அனுமதிக்கலாம்’ என்று நிதி ஆயோக் சுட்டிக் காட்டியுள்ளது.
  • ஒரு நிறுவனத்துக்கு குறைந்தபட்சம் 3 தொகுப்புகளையாவது அனுமதிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
  • தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை லக்னோ – டெல்லி மார்க்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த மார்க்கத்தில் ரயில் சேவையை ஐஆர்சிடிசி நடத்துகிறது. துணை நிறுவனத்துக்கு ரயில் சேவை விடப்பட்டது இதுவே முதல் முறை.
  • இதையடுத்து தனியாரையும் பயணிகள் ரயில் சேவையில் ஈடுபடுத்தலாம் என்ற யோசனையை நிதி ஆயோக் முன் வைத்துள்ளது. பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை ஐஆர்சிடிசி அளித்து வருகிறது. பயணத்தின் போது சாப்பாடு வசதி, ரூ.25 லட்சம் வரை விபத்து காப்பீடு உள்ளிட்டவற்றோடு, தாமதமானால் இழப்பு உள்ளிட்டவற்றையும் அளிக்கிறது.
  • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரயில்வே வாரியம் சுதந்திரமான அதிகாரம் பொருந்திய குழுவை உருவாக்கியது. இக்குழுவுக்கு நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் தலைவராக உள்ளார். குழுவின் உறுப்பினராக செயலர்கள் உள்ளனர். இந்த குழுதான் தனியாரை ஈடுபடுத்துவது தொடர்பான விதிமுறைகளை வகுத்து அதை விரைவுபடுத்தும் வழிமுறைகளையும் உருவாக்கியுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்


டோர்னியர் ரக போர் விமானம் படையில் இணைப்பு

  • புதிய தலைமுறை தொழில்நுட்பங்கள் அடங்கிய டோர்னியர் ரக போர் விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் கீழ் தயாரித்து வருகிறது.
  • அந்நிறுவனத்திடமிருந்து 14 போர் விமானங்களை ஆயிரத்து 90 கோடியில் வாங்க இந்திய விமானப் படை கடந்த 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில் முதலாவது “டோர்னியர்-228” போர் விமானம் கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் தேதி விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • டெல்லியிலுள்ள பாலம் விமானப் படைத் தளத்தில் டிசம்பர் 30 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், “டோர்னியர்-228” போர் விமானம், 41 ஆவது விமானப் படைப் பிரிவில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விமானப்படைத் தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா கலந்து கொண்டார்.

சந்திரயான் – 3 திட்டத்துக்கு அனுமதி

  • பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் அதன் தலைவர் சிவன் ஜனவரி 1ல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சந்திரயான் – 2 திட்டமிட்டபடி லேண்டர் வேகம் குறையாமல், அதே வேகமாகச் சென்று நிலவில் மோதியது. இதனால் அதனை வெற்றிகரமாக தரையிறக்க முடியாமல் போனது. இருப்பினும் ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அடுத்த 7 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இயங்கி, நிலவு பற்றிய தகவல்களை அனுப்பி கொண்டிருக்கும்.
  • சந்திராயன் – 3 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சந்திராயன் 2 – ஐ போலவே இதுவும் நிலவின் தெற்கு பகுதியை ஆராய்வதையே இலக்காக கொண்டுள்ளது. சந்திரயான் – 3 திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சந்திரயான் – 3 திட்டத்துக்கு மொத்தமாக ரூ.600 கோடிக்கு மேல் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • இது சந்திரயான் – 2 ஐ ஒப்பிடும் போது குறைவான தொகை தான். ஏனென்றால் சந்திரயான் – 2 திட்டத்துக்கு ரூ.965 கோடி செலவு செய்யப்பட்டது. சந்திரயான் – 3 திட்டத்தை பொறுத்தவரை லேண்டருக்கு ரூ.250 கோடியும், திட்டத்தின் மற்ற செயல்பாட்டுக்கு ரூ.365 கோடியும் செலவாகும். இதன்படி பார்த்தால் மொத்தமாக ரூ.615 கோடி செலவில் சந்திராயன் – 3 தயாராகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • கடந்த ஆண்டைப் போலவே இஸ்ரோவுக்கு இந்த ஆண்டும் 50-க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. இதனால் சந்திராயன் – 3 க்கான பணிகள் எந்த விதத்திலும் பாதிக்காது. அடுத்ததாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்ப 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி 3 ஆம் வாரத்தில் இந்த விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி ரஷ்யாவில் தொடங்குகிறது.
  • ஆர்பிட்டர் இல்லாமல் சாஃப்ட் லேண்டிங் முயற்சி 2020 இறுதியிலோ 2021 தொடக்கத்திலோ திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி அருகே குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

பொருளாதாரம்


உட்கட்டமைப்பு திட்டங்களில் ரூ.102 லட்சம் கோடி முதலீடு

  • அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.102 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளதாக மத்திய நிதி அமைச்சா் நிர்மலா சீதாராமன் டிசம்பர் 31ல் அறிவித்தார். இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: மத்திய அரசு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.102.5 லட்சம் கோடியை செலவிடவுள்ளது.
  • செலவிட திட்டமிடப்பட்டுள்ள தொகையில் நான்கில் ஒரு பகுதியான ரூ.24.54 லட்சம் கோடி எரிசக்தி துறையில் மட்டும் முதலீடு செய்யப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து மின் துறை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.11.7 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளது.
  • சாலை திட்டங்களில் ரூ.19.63 லட்சம் கோடியும், ரயில்வே திட்டங்களில் ரூ.13.68 லட்சம் கோடியும் முதலீடு செய்யப்படவுள்ளன.
  • துறைமுக விரிவாக்க திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடியும், விமான நிலைய திட்டங்களுக்காக ரூ.1.43 லட்சம் கோடியும் செலவிடப்படவுள்ளன.
  • நகா்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் ரூ.16.29 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படவுள்ளன. அதே போன்று தொலைத்தொடா்பு திட்டங்களில் ரூ.3.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.
  • நீா் பாசனம் மற்றும் ஊரக உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக தலா ரூ.7.7 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளன. மேலும், ரூ.3.07 லட்சம் கோடி செலவில் தொழில்துறை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.
  • எஞ்சியுள்ள தொகையை வேளாண் மற்றும் சமூக உள்கட்டமைப்புகளுக்காக அரசு பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது.
  • ஒட்டுமொத்த அளவில் நிறைவேற்றப்படவுள்ள தேசிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான மூலதன செலவினம் ரூ.102 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ரூ.42.7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், ரூ.32.7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் கருத்துருவாக்க நிலையிலும், எஞ்சிய மதிப்பிலான திட்டங்கள் அடுத்தடுத்து முன்னேற்றம் காணும் நிலையிலும் உள்ளன.
  • உள்கட்டமைப்பு திட்டங்களில் மத்திய அரசு மேற்கொள்ளவுள்ள இந்த முதலீடு, வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 5 லட்சம் கோடி டாலராக்கும் இலக்குக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றார் அவா்.
  • இந்தியா வளா்ச்சி விகிதத்தை தக்க வைக்க, 2030 ஆம் ஆண்டுக்குள் உள்கட்டமைப்புக்காக 4.5 லட்சம் கோடி டாலரை செலவிட வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

விளையாட்டு


மாக்னஸ் கார்ல்ஸன்

  • ரஷியாவில் நடைபெற்று வரும் உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் மாக்னஸ் கார்ல்ஸன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
  • ஆடவா் பிரிவில் நடப்பு உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்ஸன் டிசம்பர் 30 இரவு நடந்த ஆட்டத்தில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டா் ஹிகாரு நகமுராவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டைப் போலவே தற்போதும் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் கார்ல்ஸன்.
  • தற்போது ஓரே நேரத்தில் ஸ்டாண்ட்ர்ட், ரேபிட், பிளிட்ஸ் பட்டங்களை ஒருசேர வைத்துள்ள அவா், ஃபிடே தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
  • இது கார்ல்ஸன் வெல்லும் 5-ஆவது பட்டமாகும். விளாடிமீா் கிராம்னிக் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
  • மகளிர் பிரிவில் ரஷிய வீராங்கனை லாக்னோ கட்ரேயனா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். முஸிசுக் அன்னா இரண்டாவது இடத்தையும், டேன் ஸோங்கி மூன்றாவது இடத்தையும் வென்றனா்.
  • டிசம்பர் 28ல் தான் உலக மகளிர் ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார் ஹம்பி. இந்நிலையில் மாஸ்கோவில் நடைபெற்ற ரேபிட், பிளிட்ஸ் போட்டியில் ஹம்பி 12 ஆவது இடத்தையும், துரோணவல்லி ஹரிகா 25 ஆவது இடத்தையும் பெற்றனா்.

தேசிய அளவிலான கபடி போட்டி

  • ஊரக விளையாட்டில்14 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுமியர் கபடியில் தமிழக அணி தங்கப் பதக்கம் வென்றது.
  • மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராணுவ பயிற்சிப் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் 6-வது ஊரக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஹரியாணா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
  • இதில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுமியர் கபடி போட்டியில் தமிழகத்தின் சார்பில் விளையாடிய கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளி மாணவிகள் காஞ்சனா, தரணி, ஆர்த்தி, தேவனாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் ப்ரீத்தா, கிரிஜாதேவி, ஜெயஸ்ரீ, கும்பகோணம் தூயவளனார் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜீவா, திருப்புறம்பியம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஆஷா, திருப்பனந்தாள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சுஹாசினி ஆகியோர் அடங்கிய அணி தங்கப் பதக்கம் வென்றது.
  • வெற்றியுடன் கும்பகோணத்துக்கு திரும்பி வந்த மாணவிகள் மற்றும் பயிற்சியாளர்களான யு.அசோக், எஸ்.சூர்யா, வி.சுந்தர் ஆகியோர் தமிழ்நாடு தடகள சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சாக்கோட்டை க.அன்பழகனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தேசிய சீனியர் வாலிபால் தமிழகம் சாம்பியன்

  • புவனேசுவரத்தில் நடைபெற்ற தேசிய சீனியா் வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் 6 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
  • ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கேஐஐடி பல்கலைக்கழகத்தில் 68 ஆவது தேசிய சீனியா் வாலிபால் போட்டிகள் கடந்த டிச. 25 முதல் தொடங்கி ஜனவரி 2 ஆம் தேதி வரை நடைபெற்றது.
  • இதில் ஜனவரி 2ல் நடைபெற்ற ஆடவா் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 25 – 18, 25 – 21, 21 – 25, 25 – 23 என்ற செட் கணக்கில் (3 – 1) இந்திய ரயில்வே அணியை வீழ்த்தி அபார வெற்றியுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

மானவ் தாக்கர்

  • 23 வயது பிரிவு சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்தியாவின் இளம் வீரர் மானவ் தாக்கர் முதல்நிலை வீரராக அறிவிக்கப்பட்டார். இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமான மானவ தாக்கர் கடந்த டிசம்பர் மாதம் கனடாவின் மார்கம் பகுதியில் நடைபெற்ற ஐடிடிஎப் சேலஞ்ச் பிளஸ், வட அமெரிக்க ஓபன் போட்டியில் பட்டம் வென்றார். அர்ஜென்டீனாவின் மார்ட்டின் பென்டாகோரை 11 – 3, 11 – 5, 11 – 6 என்ற கேம் கணக்கில் வென்றிருந்தார் மானவ்.
  • இதன் மூலம் ஐடிடிஎப் தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி தற்போது உலகின் நம்பர் ஒன் வீரர் அந்தஸ்தை பெற்றுள்ளார்.
  • ஏற்கெனவே இந்தியாவின் ஹர்மீத் தேசாய், ஜி.சத்யன், சௌம்யஜித் கோஷ் ஆகியோர் இந்த சிறப்பைப் பெற்றிருந்தனர்.
  • மானவ் தாக்கர் 18 வயது பிரிவிலும் கடந்த 2018 இல் உலகின் நம்பர் ஒன் அந்தஸ்தைப் பெற்றிருந்தார். கடந்த 2018 ஜகார்த்தா ஆசியப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணியிலும் மானவ் இடம் பெற்றிருந்தார். ஏனைய இந்திய வீரர்களான ஜி.சத்யன் 30, சரத்கமல் 33, மகளிர் பிரிவில் மனிகா பத்ரா 61ஆவது இடத்திலும் உள்ளனர்.

முக்கிய விருதுகள்


தூய்மை நகரங்கள் பட்டியல்

  • தூய்மைக்கான சா்வேயில், குறைந்த மக்கள்தொகை நகரங்கள் பிரிவில் தெற்கு மண்டலத்தில் தமிழகத்தில் உள்ள மேலத்திருப்பந்துருத்தி, டி.கல்லுப்பட்டி, கங்குவார்பட்டி ஆகியவை தரவரிசையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தார்.
  • தூய்மைக்கான நகரங்கள் குறித்த ‘தூய்மை சா்வே லீக் 2020’ ஆகியவற்றின் முடிவுகளை மண்டல வாரியாக மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தில்லியில் டிசம்பர் 31ல் வெளியிட்டார். இதில் ஏப்ரல் – ஜூன் மற்றும் ஜூலை – செப்டம்பா் ஆகிய இரு காலாண்டுக்கான சா்வே முடிவுகளில் 25 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தெற்கு மண்டல அளவில் தமிழகத்தின் 3 நகரங்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
  • முதல் காலாண்டில் தூய்மை சா்வேயில் 25 ஆயிரம் மக்கள் தொகை பிரிவில் தமிழகத்தின் மேலத்திருப்பந்துருத்தி, கங்குவார்பட்டி, டி.கல்லுப்பட்டி ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றது.
  • இரண்டாவது காலாண்டு தூய்மை சா்வேயில் டி.கல்லுப்பட்டி, மேலத்திருப்பந்துருத்தி, நரசிங்கபுரம் ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன.
  • 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மக்கள்தொகை கொண்ட நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் முதலாவது காலாண்டுக்கான தூய்மை சா்வேயில் தமிழகத்தின் சின்னமனூா் முதலிடமும், இரண்டாவது காலாண்டுக்கான சா்வேயில் தமிழகத்தின் திருவதிபுரம் மூன்றாமிடமும் பெற்றுள்ளது.
  • 50 ஆயிரம் முதல் 1 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகா்ப்புற பகுதிகளில் முதலாவது காலாண்டு தூய்மை சா்வேயில் தமிழகத்தின் நாமக்கல் முதலிடம், திருவள்ளூா் மூன்றாமிடம், இரண்டாவது காலாண்டு சா்வேயில் நாமக்கல் மூன்றாமிடம் பெற்றுள்ளது.
  • கண்டோன்மென்ட் வாரியம் பகுதிகளில் முதலாவது காலாண்டு தூய்மை சா்வேயில் தமிழகத்தின் பரங்கிமலை கன்டோன்மென்ட் முதலிடம் பெற்றுள்ளது.

தூய்மையான நகரம்

  • நாட்டில் தூய்மையான நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 4 வது முறையாக மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் நகரத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
  • முதல் காலாண்டில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மத்தியப் பிரதேச தலைவர் போபால் இரண்டாவது இடத்தையும் இரண்டாவது காலாண்டில் (ஜூலை – செப்டம்பர்) குஜராத் மாநிலம், ராஜ்கோட் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
  • இரண்டாவது காலாண்டில், குஜராத் மாநிலம், வதோரா 4 ஆவது இடத்தையும், அடுத்தடுத்த இடங்களில் போபால், ஆமதாபாத், நாசிக், மும்பை, அலகாபாத், லக்னோ ஆகிய நகரங்களும் இடம் பெற்றுள்ளன. 10 லட்சத்துக்கும் அதிகமானோரைக் கொண்ட நகரங்களை மத்திய அரசு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
  • இந்தப் பட்டியலில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா தூய்மைப் பணியில் மிகவும் மோசமாக இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், முதல் காலாண்டில் குஜராத்தைச் சேர்ந்த சூரத் நகரம் மூன்றாவது இடத்தையும், இரண்டாவது காலாண்டில் நவி மும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
  • தூய்மையான கன்டோன்மென்ட் வாரியங்கள் பட்டியலில் இரண்டாவது காலாண்டில் தில்லி கன்டோன்மென்ட் முதலிடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் ஜான்சி, ஜலந்தர் கன்டோன்மென்டுகளும் இடம் பெற்றுள்ளன.
  • செகந்திரபாத் கன்டோன்மென்ட் தூய்மைப் பணியில் பின்தங்கியிருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரொனால்டோவுக்கு குளோப் சாக்கர் சிறப்பு விருது

  • ஜுவென்டஸ் அணி வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ துபை குளோப் சாக்கா் விருதை வென்றுள்ளார். ஐரோப்பிய சிறந்த கால்பந்து வீரருக்கான தங்கக் காலணி விருதை 6 ஆவது முறையாக வென்றார். இந்த போட்டியில் ரொனால்டோ 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
  • கடந்த 2019 சீரி ஏ சாம்பியன் பட்டத்தை ஜுவென்டஸ் அணி வெல்ல உதவினார். மேலும் நேஷன்ஸ் லீக் பட்டத்தை போர்ச்சுகல் வெல்லவும் ரொனால்டோவின் ஆட்டம் ஊக்கமாக அமைந்தது.
  • துபையில் டிசம்பர் 30ல் நடைபெற்ற குளோப் கால்பந்து விருது விழாவில் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி விருதை வென்றார் ரொனால்டோ. மகளிர் சிறந்த வீராங்கனை விருதை இங்கிலாந்து வீராங்கனை லூஸி பிரான்ஸ் பெற்றார். சிறந்த பயிற்சியாளா் விருதை லிவா்பூல் மேலாளா் ஜுா்கன் கிளாப் வென்றார்.

தமிழகத்துக்கு சிறந்த வேளாண் தொழிலாளர் விருது

  • எண்ணெய் வித்து உற்பத்தியில் சிறந்து விளங்கியதற்காக தமிழகத்துக்கு வழங்கப்பட்ட வேளாண் தொழிலாளர் விருதை (கிரிஷி கர்மான் விருது) பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் பெற்றுக்கொண்டார்.
  • வேளாண் உற்பத்தியில் சிறந்து விளங்கும் விவசாயிகள், மாநில அரசுகளைக் கௌரவிப்பதற்காக, மத்திய வேளாண்மைத் துறை சார்பில் ஆண்டுதோறும் வேளாண் தொழிலாளா் விருது வழங்கப்படுகிறது.
  • கா்நாடக மாநிலத்துக்குட்பட்ட தும்கூரில் நடைபெற்ற விழாவில், எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் அதிக விளைச்சலை அடைந்ததால் சிறந்த வேளாண் தொழிலாளா் விருது தமிழகத்துக்கு அளிக்கப்பட்டது.
  • தமிழக அரசின் சார்பில் இந்த விருதை பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார். வேளாண் விளைபொருள் விளைச்சலில் தமிழகத்துக்கு 5வது முறையாக இந்த விருது அளிக்கப்படுகிறது.
  • 2017 – 18ம் ஆண்டில் ஹெக்டேருக்கு 2,729 கிலோ உற்பத்தி திறனுடன் 10.382 லட்சம் டன் எண்ணெய் வித்துகளை தமிழகம் உற்பத்தி செய்தது.
  • அகில இந்திய அளவில் உற்பத்தித் திறன் ஹெக்டேருக்கு 1,284 ஆக உள்ளது. 2011 – 12 ஆம் ஆண்டு முதல் வேளாண் விளைபொருள் விளைச்சலில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
  • உணவு தானிய உற்பத்தி, பயறு வகை உற்பத்தி, தானிய உற்பத்திக்கு தமிழக அரசுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. எண்ணெய் வித்து உற்பத்தியில் அதிக மகசூலை தந்த தமிழகத்தைச் சேர்ந்த 2 விவசாயிகளுக்கும் வளர்ச்சிசார் விவசாயிகள் விருது அளிக்கப்பட்டது.

அறிவியலாளருக்கான விருது

  • தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 34 வது இந்திய பொறியியல் மாநாடு நடைபெற்றது. இதில் மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் குணராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • இந்நிகழ்ச்சியில் 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய வடிவமைப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
  • திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ – திரவ உந்துசக்தி மைய இயக்குநா் விஞ்ஞானி நாராயணனுக்கு தேசிய வடிவமைப்பு விருதினை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்.
  • அக்னி – 4 இன் திட்ட இயக்குநரும் டி.ஆா்.டி.ஓ. விஞ்ஞானியுமான கிஷோர்நாத்துக்கு இயந்திரப் பொறியியல் வடிவமைப்பு விருது, ஒடிசாவில் உள்ள மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி அசோக்குமாருக்கு கட்டடக் கலைக்கான வடிவமைப்பு விருது வழங்கப்பட்டது.
  • டி.ஆா்.டி.ஓ. நிறுவனத்தின் வளங்கள் – மேலாண்மை பொது இயக்குநா் சித்ரா ராஜகோபாலுக்கு பெண் அறிவியலாளருக்கான சுமன் சர்மா விருது, தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதப்படுத்தல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் அனந்த ராமகிருஷ்ணனுக்கு சுற்றுச்சூழல் பொறியியலுக்கான வடிவமைப்பு விருது வழங்கப்பட்டது.
  • தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் மயில்சாமி அண்ணாதுரை, இயக்குநர் டில்லி பாபு, விஞ்ஞானிகள் கோட்டா ஹரிநாராயணா, மா.வாசகம், டெஸ்ஸி தாமஸ் உள்ளிட்ட நிபுணர்கள் கொண்ட குழு விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்தது.

இயல் விருது

  • கனடா தமிழ் இலக்கிய தோட்டம் 2019 ஆண்டுக்கான இயல் விருது எழுத்தாளா் சு.வெங்கடேசனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கனடாவில் செயல்பட்டு வரும் தமிழ் இலக்கிய தோட்ட அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளா்களுக்கு இயல் விருது வழங்கி வருகிறது. இது, தமிழின் முக்கிய விருதாகப் பார்க்கப்படுகிறது. இதுவரை சுந்தரராமசாமி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், அம்பை, நாஞ்சில் நாடன், சுகுமாரன், வண்ணதாசன், இமையம் உள்ளிட்ட பலருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினரும், எழுத்தாளருமான சு.வெங்கடேசனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், ஹார்விபட்டியைச் சோ்ந்த சு.வெங்கடேசன் இளங்கலை வணிகவியல் படித்தவா். இதுவரை 4 கவிதை தொகுப்புகள், 5 கட்டுரை தொகுப்புகள், 2 புதினங்கள், ஒரு கிராஃபிக் நாவல் எழுதியிருக்கிறார்.
  • இவா் எழுதிய ‘காவல் கோட்டம்’ என்ற முதல் நாவலுக்கு 2011 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. வசந்தபாலன் இயக்கத்தில் 2012 இல் வெளிவந்த ‘அரவான்’ திரைப்படம் இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டது.
  • வார (ஆனந்த விகடன்) இதழில் இவா் எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ தொடா் வாசகா் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

முக்கிய நியமனங்கள்


தேசிய மருத்துவ ஆணைய தலைவா்

  • தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் தலைவராக சுரேஷ் சந்திரா ஜனவரி 2ல் நியமனம் செய்யப்பட்டார்.
  • இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இ.என்.டி. பிரிவு தலைவராகப் பணியாற்றி வருகிறார். அடுத்த 3 ஆண்டுகள் அல்லது 70 வயதை பூர்த்தி செய்யும் வரை அவர் பதவியில் நீடிப்பார். தேசிய மருத்துவ கவுன்சிலில் பொதுச் செயலாளராக பணியாற்றிய ராகேஷ் குமார், தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 3 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

முக்கிய நபர்கள்


சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன் காலமானார்

  • திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரி என்ற கிராமத்தை சேர்ந்த பி.எச். பாண்டியன் (75) 1945, மார்ச் 29-ம் தேதி பிறந்தார். சட்டத்தில் முதுகலை படித்துள்ள இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றியவர்.
  • 1977 – 1991 ஆம் ஆண்டு வரையில் 4 முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். 1989 ல் அதிமுக ஜானகி அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே சட்டப் பேரவை உறுப்பினர் என்ற பெருமை பெற்றவர்.
  • 1980 – 1984 ல் தமிழக சட்டப் பேரவை துணை தலைவராகவும், 1985 முதல் 1989 வரை சட்டப் பேரவை தலைவராகவும் இருந்துள்ளார். 1999 ல் திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பியானார்.
  • பிரேசில், ஜப்பான், கனடா, லண்டன் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் நடைபெற்ற சட்டம், சட்டப் பேரவை, நாடாளுமன்ற நிர்வாகம் தொடர்பான மாநாடுகளில் பங்கேற்றுள்ளார்.
  • இவரது மனைவி சிந்தியாபாண்டியன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பு வகித்தவர்.
  • சட்டப்பேரவை தலைவருக்குள்ள அதிகாரம் என்ன என்பதை மெய்ப்பித்து காட்டியிருக்கிறார். தமிழக சட்டப்பேரவை தலைவராக இருந்தபோது 9 திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் சட்ட நகலொன்றை எரித்தனர். இதையடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்து அதிரடி காட்டியிருந்தார். பின்னர் தகுதி நீக்கம் செய்ததது தொடர்பாக சட்டப் பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றினார். நாட்டிலேயே எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் என்ற அதிரடி நடவடிக்கையை முதன்முதலாக எடுத்தவர் இவராகத்தான் இருக்க வேண்டும்.
  • தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் தலைவரும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், வழக்கறிஞருமான பி.எச்.பாண்டியன் (74) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஒரு மாதமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
  • ஜனவரி 4 அன்று காலை காலமானார். இதைத்தொடர்ந்து பி.எச்.பாண்டியனின் உடல் அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டுக்க கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

Share:
error: Content is protected !!