December 4th Week CA – 2019

Share:

உலகம்


முதலீடுகளுக்கென்று தனி ஒப்பந்தம் – ஐரோப்பிய ஒன்றியம் விருப்பம்

  • வர்த்தகம் மற்றும் முதலீடு இரண்டும் ஒரே ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், முதலீடுகளுக்கு மட்டும் தனி ஒப்பந்த முறையை உருவாக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. இந்தியாவுடன் அவ்வகையான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அது விருப்பம் தெரிவித்துள்ளது.
  • தாராளவாத வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து (எஃப்டிஏ) முதலீடு தொடர்பான ஒப்பந்தங்களை பிரித்து, அதைத் தனி ஒப்பந்தமாக மாற்ற வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது.
  • சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் சிங்கப்பூருடன் இவ்வகையான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

தனித்தனி ஒப்பந்தங்கள்

  • முதலீடு செய்ய விருப்பம் இருந்தும் வர்த்தகம் தொடர்பான கோரிக்கையில் முரண்பாடு ஏற்பட்டால், முதலீடு செய்யும் வாய்ப்பும் கைவிட்டு போகிறது. இந்நிலையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஒரே ஒப்பந்தத்தின்கீழ் கொண்டு வராமல், தனித்தனி ஒப்பந்தமாக கொண்டு வர வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.
  • தாராளவாத வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே பரஸ்பர முடிவு எட்டப்படவில்லை. வாகனங்கள், ஒயின் போன்றவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கும், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போன்ற நிதி அமைப்புகளை இந்தியாவில் திறப்பதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி கோரியது.
  • இந்திய அரசு, இந்தியர்கள் பயன்பெறும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் விசா முறையை எளிமைப்படுத்த வேண்டும், குறிப்பாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்களை எளிமைப்படுத்த வேண்டும் என்றும், அவுட்சோர்ஸிங் பணிகளை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் கோரியது.
  • இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்படவில்லை. இதனால் முதலீடு தொடர்பான ஒப்பந்தங்களும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் முதலீடுகளுக்கு தனியாகவும், வர்த்தக உறவுக்கு தனியாகவும் ஒப்பந்த முறையை கொண்டு வர வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2020 – க்கான பட்ஜெட் ஐ.நா. நிறைவேற்றம்

  • அடுத்த ஆண்டுக்கான ஐ.நா. பட்ஜெட் டிசம்பர் 27ல் நிறைவேற்றப்பட்டது. 2019 – ஐ விட சற்று கூடுதலாக 307 கோடி டாலருக்கான (சுமார் ரூ.21,928 கோடி) அந்த பட்ஜெட்டில் மியான்மா், சிரியா ஆகிய நாடுகளின் போர்க் குற்றங்கள் குறித்த விசாரணைக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த நாடுகளின் போர்க் குற்ற விசாரணைகளுக்கு நன்கொடை மூலம் மட்டுமே நிதி திரட்டப்பட்ட நிலையில், தற்போது முதல் முறையாக அவற்றுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

‘எகோ’ பண முறை அறிமுகம்

  • எட்டு மேற்கு ஆப்ரிக்க நாடுகள் ‘எகோ’ என்ற ஒரே பண முறையைப் பின்பற்றப் போவதாக அறிவித்துள்ளன. பெனின், புர்கினா ஃபஸோ, கினியா – பிசாவ், ஐவரி கோஸ்ட், மாலி, நைஜர், செனிகல், டோகோ ஆகிய எட்டு ஆப்ரிக்க நாடுகள் அந்தப் பகுதியிலிருக்கும் பிரெஞ்சு ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளன.

இந்தியா


மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க ரூ.3,941 கோடி

  • மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 8,754 கோடியும் மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க ரூ.3,941 கோடியும் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை டிசம்பர் 24ல் அனுமதி வழங்கியது.
  • மக்கள் தொகை பதிவேட்டின் போது எவ்வித ஆவணங்களும் கேட்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளுக்கும் ஒரே தலைமை தளபதியை நியமிக்கவும் திவால் அவசர சட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் டிசம்பர் 24ல் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன. இதுகுறித்து மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
  • கடந்த 12-ம் தேதி மக்களவையில் திவால் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சட்டத்தில் (ஐபிசி) மேலும் திருத்தங்கள் செய்து அவசர சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ரயில்வே வாரியத்தை மறு சீரமைப்பு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்வே வாரியத்தில் தற்போது தலைவர் மற்றும் 7 உறுப்பினர்கள் உள்ளனர். மறுசீரமைப்புக்குப் பிறகு தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெறுவர்.

மாநிலங்கள் ஏற்பு

  • தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிப்பின்போது எவ்வித ஆவணங்களும் கேட்கப்படாது. மக்கள் அளிக்கும் தகவல்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படும். மொபைல் போன் செயலியின் மூலம் தகவல்கள் பதிவு செய்யப்படும். இந்த திட்டத்தை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன.
  • அசாமில் அண்மையில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டது. அந்த மாநிலத்தை தவிர்த்து இதர மாநிலங்களில் தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கப்படும்.

என்.ஆர்.சி. கிடையாது

  • அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) தயாரிக்கப்பட்டது. இப்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) புதுப்பிக்கப்படுகிறது. என்.பி.ஆர். பதிவேட்டில் இருந்து என்.ஆர்.சி. பதிவேடு தயாரிக்கப்படாது.
  • நாடு முழுவதும் வரும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை என்.பி.ஆர். புதுப்பிக்கும் பணி நடைபெறும். வரும் 2021-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த களப்பணிகளுக்காக 30 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.

என்பிஆர் பதிவேட்டில் சேகரிக்கப்படும் விவரங்கள்

  • தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) என்பது இந்திய குடிமக்களின் பதிவேடு ஆகும். இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை (குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்குதல்) இது கிராமம் / பேரூராட்சி, துணை மாவட்டம், மாவட்டம், மாநிலம், தேசிய வாரியாக தயாரிக்கப்படுகிறது. இந்திய குடிமக்கள் அனைவரும் இதில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
  • இந்தியாவில் கடந்த 6 மாதங்களாக தங்கியிருப்பவர்கள், அதற்கு மேல் தங்கியிருப்பவர்கள் அல்லது அடுத்த 6 மாதம், அதற்கு மேல் தங்க விரும்புகிறவர்கள், தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் வருவர்.

என்பிஆர்-ன் தற்போதைய நிலவரம்

  • 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடந்தபோது என்பிஆர் தகவல்களும் கடந்த 2010-ம் ஆண்டு சேகரிக்கப்பட்டன. 2015-ம் ஆண்டு வீட்டுக்கு வீடு சர்வே எடுத்ததன் மூலம் இந்த தகவல்கள் புதுப்பிக்கப்பட்டன. இந்த விவரங்களை டிஜிட்டல் முறையில் மாற்றும் பணி நடந்து முடிந்துள்ளது. மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணி 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். அசாமில் இது நடைபெறாது. இது தொடர்பான அறிவிப்பாணையை மத்திய அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

ஒரே பாரதம் உன்னத பாரதம் நிகழ்ச்சி

  • ஒரே பாரதம் உன்னத பாரதம் நிகழ்ச்சிக்கு செல்லும் மாணவா்கள், இளைஞா்களுக்கு 50 சதவீத ரயில் கட்டண சலுகையை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • தேசிய ஒருமைப்பாட்டை வளா்ப்பதற்காக, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்னும் திட்டத்தின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது.
  • மாநிலங்கள், யூனியன் பிரசேதங்கள், மத்திய அமைச்சகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
  • மொழி, இலக்கியம், பண்பாடு, விளையாட்டு, சுற்றுலா மற்றும் இதர முறைகள் மூலம் மக்களிடையே பரிவா்த்தனைகளை மேம்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
  • இத்திட்டத்தின் கீழ், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செல்லும் மாணவா்கள், இளைஞா்களுக்கு 50 சதவீத ரயில் கட்டண சலுகையை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

லக்னோவில் வாஜ்பாய்க்கு 25 அடி உயர சிலை

  • உ.பி. தலைநகர் லக்னோவில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். வாஜ்பாயின் 95வது பிறந்த நாள் டிசம்பர் 25ல் கொண்டாடப்பட்டது. இதையொட்டி லக்னோவில் உள்ள லோக் பவன் (முதல்வர் அலுவலக கட்டிடம்) நுழைவாயிலில் வாஜ்பாயின் 25 உயர வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். லக்னோவில் அடல் பிகாரி மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டிசம்பர் 24ல் நடைபெற்றது. இதில், இமாச்சல பிரதேசத்தில் ரோட்டங் கணவாயில் கட்டப்படும் சுரங்கப் பாதைக்கு வாஜ்பாய் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது.
  • ரோட்டங் கணவாயில் சுரங்கப் பாதை அமைக்கும் முடிவு கடந்த 2000 ஆண்டில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது எடுக்கப்பட்டது. 8.8 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப் பாதை 3 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீண்ட சுரங்கப் பாதை ஆகும். மணாலி – லே இடையே 46 கி.மீ தொலைவை இது குறைக்கிறது.
  • இது திறக்கப்பட்டால் லகால், ஸ்பிதி பள்ளத்தாக்கில் உள்ள தொலைதூரப் பகுதிகளுக்கு அனைத்து பருவ நிலையிலும் சென்று வர முடியும். எல்லைப்புற சாலைகள் நிறுவனம் கட்டுமான பணியை மேற்கொண்டுள்ளது.

அடல் நிலத்தடி நீர் திட்டம்

  • நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அடல் பூஜல் என்ற பெயரிலான அடல் நிலத்தடி நீர் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும், நிலத்தடி நீர் மேலாண்மை மூலம் திறம்பட நிர்வகிக்கும் வகையிலும் அடல் நிலத்தடி நீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • முதற்கட்டமாக உத்தர பிரதேசம், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆகிய மாநிலங்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த 7 மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களின் 8,350 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்கள் பயனடைவர். இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விஞ்ஞான் பவனில் டிசம்பர் 25ல் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

சிடி, எம் ஆர் ஐ ஸ்கேன் உள்ளிட்ட 8 உபகரணங்கள் மருந்து கட்டுப்பாட்டு வரம்புக்குள் வருகிறது

  • சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட 8 வகையான மருத்துவ உபகரணங்கள் மருந்து கட்டுப்பாட்டு வரம்புக்குள் கொண்டு வரப்படுகின்றன.
  • இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்கப்படுகிறது.
  • மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் உள்ளதாகத் தகவல் வெளியாகியது. இதையடுத்து, ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் இருக்கும் பல மருத்துவ உபகரணங்களை தரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.
  • அதன்படி, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ கருவிகள், இதயத் துடிப்பை சீராக்கும் மின் அதிர்வு கருவி, டயாலிசிஸ் கருவிகள், எக்ஸ்ரே கருவிகள், புற்றுநோயை கண்டறியும் பிஇடி கருவி, எலும்பு மஜ்ஜை செல்களை பிரிக்கும் கருவி ஆகிய 8 உபகரணங்களை மருந்துகள் என்ற வரையறையின் கீழ் வகைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
  • இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “இந்த நடவடிக்கையால் வருங்காலங்களில் விரும்பிய விலைக்கு அந்த மருத்துவ உபகரணங்களை உற்பத்தியாளர்கள் விற்பனை செய்ய முடியாது. தவறான மருத்துவ உபகரணங்கள் சந்தைக்கு வராமல் தடுக்க முடியும். பொது மக்களுக்கு மருத்துவ சேவைகளை தரமாக வழங்க முடியும். அந்த புதிய நடைமுறையானது 2021 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது” என்றனர்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை ஜனவரி 15 இல் அமல்

  • ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டம் வரும் 15-ம் தேதி அமலுக்கு வருகிறது. இதர மாநிலங்களிலும் படிப்படியாக இத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • வேலைவாய்ப்புக்காக மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயரும் தொழிலாளர்களின் நலன் கருதி தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த திட்டம் சில மாநிலங்களில் ஏற்கெனவே சோதனை அடிப்படையில் அமலில் உள்ளது.
  • புதிய திட்டத்துக்காக நாடு முழுவதுக்கும் பொதுவான வடிவமைப்பில் ரேஷன் அட்டைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதே வடிவமைப்பு முறையைப் பின்பற்றி அனைத்து மாநிலங்களும் ரேஷன் அட்டையை தயாரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பொது ரேஷன் அட்டை 10 இலக்கங்கள் கொண்டதாக இருக்கும். இதில் பயனாளிகள் பற்றிய குறைந்தபட்ச தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
  • முதல்கட்டமாக ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியாணா, ராஜஸ்தான், கோவா, மத்திய பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய 12 மாநிலங்களில் 15-ம் தேதி ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டம் அமலுக்கு வருகிறது.
  • இதன்மூலம் சுமார் 4 கோடி தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 79 கோடி மக்கள் பொது விநியோக திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகின்றனர். இதில் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரும் தொழிலாளர்கள் இனிமேல் எந்தவொரு மாநிலத்திலும் எந்தவொரு ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம்.
  • இந்த திட்டத்தில் முறைகேடுகளைத் தவிர்க்க அனைத்து மாநிலங்களின் பொது விநியோகத் திட்ட பயனாளிகளின் தொகுப்பு மையப்படுத்தப்பட்ட சர்வரில் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரே பயனாளி, இரு மாநிலங்களில் ரேஷன் அட்டை பெறுவது தடுக்கப்படும். தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இலவச திட்டங்கள் அமலில் உள்ளன. வெளிமாநில தொழிலாளர்கள் இந்த இலவச சலுகைகளை பெற முடியாது.

ஜூனில் நாடு முழுவதும் அமல்

  • நாடு முழுவதும் சுமார் 5.4 லட்சம் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இதில் 77 சதவீத கடைகளில் பிஓஎஸ் எனப்படும் இயந்திரங்கள் உள்ளன. இந்த இயந்திரம் இருந்தால் மட்டுமே ‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தை செயல்படுத்த முடியும். எனவே அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பிஓஎஸ் இயந்திரங்களை வழங்க மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்


மிக் – 27 போர் விமானங்கள் பிரியாவிடை

  • இந்திய விமானப் படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய மிக் – 27 ரக போர் விமானங்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டன. அவற்றுக்கு விமானப்படை வீரர்கள் பிரியாவிடை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
  • இந்திய விமானப்படையில் 1985-ம் ஆண்டு மிக் – 27 ரக போர் விமானங்கள் சேர்க்கப்பட்டன. இந்த போர் விமானங்கள் முதலில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்தன. பின்னர், இந்தியாவின் ‘இந்துஸ்தான் ஏரோ நாட்டிகல்’ நிறுவனமே இந்த விமானங்களை கட்டமைக்க தொடஙகியது.
  • பல நவீன அம்சங்களை கொண்டு விளங்கிய இந்த போர் விமானம், மணிக்கு 1,700 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் பெற்றது. அதுமட்டுமின்றி, ஒரே சமயத்தில் 4 டன் எடை கொண்ட ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடியதாகவும் விளங்கியது.
  • எதிரிகளின் இலக்குகளை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் இந்த மிக் – 27 போர் விமானங்கள், இந்தியாவின் கார்கில் போர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றின. இதன் காரணமாக, விமானிகளால் ‘பகதூர்’ (மகத்தானவர்) என இவை அழைக்கப்பட்டு வந்தன.
  • 34 ஆண்டுகள் பணி புரிந்ததால் இந்த ரக போர் விமானங்களுக்கு ஓய்வு வழங்க விமானப் படை முடிவு செய்தது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் மிக் – 27 ரக போர் விமானங்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டன. இருந்தபோதிலும், ராஜஸ்தானின் ஜோத்பூர் படைப் பிரிவில் மட்டும் மிக் – 27 ரகத்தைச் சேர்ந்த 7 விமானங்கள் பயன்பாட்டில் இருந்து வந்தன.
  • இந்நிலையில், அந்தப் படைப்பிரிவில் இருந்த மிக் – 27 போர் விமானங்களுக்கும் ஓய்வு வழங்கப்பட்டன. விடை பெறுவதற்கு முன்பு அந்த விமானங்கள் கடைசியாக விண்ணில் சீறி பாய்ந்து சாகசங்கள் செய்தன. தரையிறங்கிய அந்த விமானங்களுக்கு விமானப்படை வீரர்கள் ராணுவ மரியாதையுடன் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி

  • நிலத்தில் இருந்து வானில் உள்ள எதிரி இலக்கை தாக்கும் ஏவுகணையை (கியூஆர்எஸ்ஏஎம்) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வடிவமைத்துள்ளது. இவற்றின் இறுதிக் கட்டமைப்பு சோதனை ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் டிசம்பர் 23ல் நடைபெற்றது.
  • இதில் இரண்டு ஏவுகணைகளும் விண்ணில் உள்ள இலக்கை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்தன. இந்த ஏவுகணைகள் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட ராடார், வழிகாட்டும் கருவி என பல்வேறு நவீன தொழில் நுட்பங்களை கொண்டவை ஆகும். இவை சோதனையில் வெவ்வேறு திசையில் வெவ்வேறு உயரத்தில் உள்ள 2 இலக்குகளை மிக விரைவாக எதிர்வினையாற்றி தாக்கி அழித்தன.
  • எதிரி இலக்குகளைக் கண்காணிப்பதற்கும், ஏவுகணையின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கும் வெவ்வேறு ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை 360 டிகிரி கோணத்தில் சுழன்று கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை. எதிரிகளின் போர் விமானங்கள், ஹெலிகாப்டா்கள், ஆளில்லா சிறிய ரக விமானங்கள் (டிரோன்) உள்ளிட்டவற்றின் வேகம், செல்லும் திசை உள்ளிட்டவற்றைக் கண்காணித்து, தான் செல்ல வேண்டிய வேகம், திசையை ‘கியூஆா்-எஸ்ஏஎம்’ ஏவுகணை தானாகவே முடிவு செய்து கொள்ளும்.
  • இந்த ஏவுகணை திட எரிபொருள் மூலம் செயல்படக் கூடியது. இந்த ஏவுகணைகள் தரையில் இருக்கும் போது, எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து தப்பிக்கும் வகையில், இவற்றில் மின்னணு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏவுகணை பரிசோதனையின் போது, அதன் செயல்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். ‘கியூஆா்-எஸ்ஏஎம்’ ஏவுகணையானது வரும் 2021-ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
  • இந்திய ராணுவத்தில் தற்போது இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்பைடா் ரக ‘கியூஆா்-எஸ்ஏஎம்’ ஏவுகணைகள் இணைக்கப்பட்டுள்ளன. ‘கியூஆா்-எஸ்ஏஎம்’ ஏவுகணையை உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதற்கு ரூ.476 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த ஏவுகணையின் முதல் சோதனை கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம்


நிதி ஆயோக்கின் மாநிலங்கள் வளர்ச்சி அட்டவணை வெளியீடு

  • மாநிலங்களில் அதிக வளர்ச்சியை எட்டுவதில் கேரளம் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல மிக மோசமான மாநிலமாக பிகார் அடையாளம் காணப்பட்டுள்ளது. நிதி ஆயோக் வெளியிட்ட எஸ்டிஜி (Sustainable Development Goal – SDG) இந்தியா குறியீடு 2019-ல் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சி விகிதம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
  • உத்தரப் பிரதேசம், ஒடிஷா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மிகச் சிறந்த முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாகவும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் குஜராத் மாநிலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
  • கேரள மாநிலம் 70 புள்ளிகளுடன் முதலிடத்திலும், யூனியன் பிரதேசங்களில் சண்டீகர் 70 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளன.
  • இமாசலப் பிரதேசம் 2-ம் இடத்திலும், ஆந்திரா 3-ம் இடத்திலும், தமிழ்நாடு 3-ம் இடத்திலும் உள்ளன. பிகார், ஜார்க்கண்ட், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மிக மோசமான சூழல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஸ்திர மேம்பாட்டு இலக்கு (எஸ்டிஜி) ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களின் செயல்பாடு மதிப்பிடப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபை 2030-ம் ஆண்டுக்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. இதில் இந்தியாவை தவிர்த்து இலக்கை எட்ட முடியாது என்ற சூழல் உள்ளது. இதனால் மாநிலங்கள் அனைத்தும் எஸ்டிஜி இலக்கை ஆண்டுதோறும் ஆய்வு செய்து அட்டவணை வெளியிடுகிறது நிதி ஆயோக்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் எஸ்டிஜி இலக்கை எட்டுவதில் தீவிரமாக உள்ளதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
  • தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாக செயல்படுவதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்தார். குறிப்பாக சுகாதார மேம்பாடுகளில் இம்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாக அவர் கூறினார்.
  • ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்துள்ள அளவீடுகளின்படி ஒட்டு மொத்த இந்தியாவுக்கான புள்ளிகள் 2018-ம் ஆண்டில் 57 ஆக இருந்தது. அது 2019-ல் 60 ஆக உயர்ந்துள்ளது. சுகாதாரம், நீர் வளம், மின்சாரம், தொழில் பெருக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவின் புள்ளிகள் அதிகரித்துள்ளது.
  • இருப்பினும் ஊட்டச்சத்து குறைபாடு, பாலின பாகுபாடு ஆகியன இந்தியாவின் மதிப்பை குறைப்பவையாக உள்ளன. இவ்விரு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • மொத்தம் நிர்ணயிக்கப்பட்ட 12 இனங்களில் முதல் 5 இடங்களில் உள்ள மாநிலங்கள் மிகச் சிறப்பாகவே செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு, திரிபுரா, ஆந்திரா, மேகாலயா, மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாக எஸ்டிஜி அறிக்கை தெரிவிக்கிறது.
  • பசிக் கொடுமை இல்லாத மாநிலங்கள் பட்டியலில் கோவா, மிசோரம், கேரளா, நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் உள்ளதாக தெரிகிறது.
  • 2018-ம் ஆண்டிலிருந்து எஸ்டிஜி அட்டவணையை ஐக்கிய நாடுகள் சபையின் இலக்கு அடிப்படையில் நிதி ஆயோக் தயாரித்து வெளியிடுகிறது.

தேசிய அளவிலான சிறந்த நிர்வாக குறியீட்டு அறிக்கை

  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளான டிசம்பர் 25ம் தேதி ஆண்டுதோறும் தேசிய சிறந்த நிர்வாக தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வு துறை, சிறந்த நிர்வாகத்துக்கான மையம் ஆகியவை இணைந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆய்வு நடத்தின. இதில் கிடைத்த தரவுகள் ஒப்பிடப்பட்டு, தற்போது சிறந்த நிர்வாக குறியீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • விவசாயம், வணிகம் – தொழிற்சாலை, மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், பொது கட்டமைப்பு வசதிகள், பொருளாதார நிர்வாகம், சமுகநலம் மேம்பாடு, நீதி – பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மக்கள் பொது நிர்வாகம் ஆகிய 10 பிரிவுகளில் மாநிலங்களின் நிர்வாகத் திறன் மதிப்பிடப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • விவசாயத் துறையில் வேளாண் மற்றும் சார்பு பிரிவுகள், உணவு தானியம், தோட்டப் பயிர்கள், பால், இறைச்சி ஆகியவற்றின் உற்பத்தி வளர்ச்சி, பயிர் காப்பீடு ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. இதில் 18 பெரிய மாநிலங்களின் வரிசையில் தமிழகம் 0.45 புள்ளிகளுடன் 9 வது இடத்தில் உள்ளது. மத்திய பிரதேசம் (0.73) முதலிடம் பிடித்துள்ளது.
  • வணிகம், தொழிற்சாலைகள் பிரிவில் முதலிடத்தில் ஜார்க்கண்ட் (0.94), அடுத்தடுத்த இடங்களில் ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர் உள்ளன. இதில் தமிழகம் 14 வது (0.86) இடத்தில் உள்ளது.
  • கல்வி, மனிதவள மேம்பாட்டில் கேரளா (0.80) முதலிடத்திலும், தமிழகம் 0.80 புள்ளிகளுடன் 2 வது இடத்திலும் உள்ளன.
  • பொது சுகாதாரத்தை பொறுத்தவரை குழந்தைகள் பிறப்பு விகிதம், தாய்-சேய் இறப்பு, தடுப்பூசி இலக்கு, மருத்துவர்கள், இதர பணியாளர்கள் இருப்பு, பொது சுகாதார மையங்களின் செயல்பாட்டில் தமிழகம் 0.78 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
  • பொதுமக்களுக்கான கட்டமைப்பு வசதிகளில் குடிநீர், கழிப்பிட வசதி, கிராமப்புற இணைப்பு சாலை, சமையல் எரிவாயு இணைப்பு, மின்வசதி, தடையில்லா மின்சாரம், மின் தேவைக்கேற்ற இருப்பு, மின்நுகர்வு வளர்ச்சி ஆகியவை மதிப்பிடப்பட்டது. இதில் தமிழகம் 0.74 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
  • பொருளாதார நிர்வாகத்தில், மாநில உற்பத்தி, மாநில வரி வருவாய், வருவாய் செலவினம், வருவாய் பற்றாக்குறை, கடன் உள்ளிட்டவற்றை மதிப்பீடு செய்ததில் தமிழகம் 0.58 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.
  • சமூகநலம் வளர்ச்சி பிரிவில், பாலின பிறப்பு விகிதம், சுகாதார காப்பீடு, கிராமப்புற வேலைவாயப்பு, வேலை இல்லாதோர் எண்ணிக்கை, அனைவருக்கும் வீடு, மகளிர் பொருளாதாரம், ஆதி திராவிடர், ஓபிசி பிரிவினருக்கான சமூக நீதி, ஆதி திராவிடர் – பழங்குடியினருக்கு எதிரான வன்முறை வழக்குகள் நிலவரம் குறித்த மதிப்பீட்டில் சத்தீஸ்கர் (0.65) முதலிடம் பிடித்துள்ளது. இதில் தமிழகம் 0.49 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.
  • நீதி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தண்டனை விகிதம், போலீஸார் எண்ணிக்கை, பெண் போலீஸார் எண்ணிக்கை, நீதிமன்ற வழக்குகள் விவரம், நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலவரம் ஆய்வு செய்யப்பட்டன. இதில் தமிழகம் 0.56 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் கேரளா (0.55) உள்ளது.
  • சுற்றுச்சூழலை பொறுத்தவரை மாநிலத்தில் பருவகால மாற்றத்துக்கான செயல் திட்டங்கள், பசுமை பரப்பு வளர்ச்சி குறித்த மதிப்பீட்டில், மேற்கு வங்கம், கேரளாவை அடுத்து 0.58 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.
  • இந்த 10 பிரிவுகளின் மதிப்பீடுகள் அடிப்படையில், சிறந்த நிர்வாக குறியீடு தொடர்பான ஒட்டுமொத்த மதிப்பீடும் வெளியாகியுள்ளது. இதில் தேசிய அளவில் ஒட்டுமொத்த நிர்வாகத் திறன் பெற்ற மாநிலங்கள் வரிசையில் தமிழகம் 5.62 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களை மகாராஷ்டிரா (5.40), கர்நாடகா (5.10) பிடித்துள்ளன.
  • ஒருமுறை தூக்கி எறியப்படும் நெகிழிப் பைகளுக்கான தடை, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப மாநில அளவிலான செயல்திட்டம், வன எல்லை மாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் துறையில் சிறப்பான செயல்பாடுகளுக்காக இந்தியாவிலேயே தமிழகத்துக்கு 3வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
  • கல்வி அளிப்பதுடன் சிறப்பான திறன் பயிற்சி மூலமாக வேலை வாய்ப்பு அளிக்கும் மனிதவள மேம்பாட்டுத் துறைக்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம், நிதி மற்றும் கடன் சுமைகளை கட்டுக்குள் வைத்திருத்தல் போன்ற காரணிகளால் பொருளாதார மேலாண்மைத் துறைக்கும் ஐந்தாவது இடம் வழங்கப்பட்டுள்ளது.

 

சிறந்த நிர்வாகம்
வ.எண் மாநிலம் புள்ளி
1. தமிழகம் 5.62
2. மகாராஷ்டிரா 5.40
3. கர்நாடகா 5.10
4. சத்தீஸ்கர் 5.05
5. ஆந்திரா 5.05
6. குஜராத் 5.04
7. ஹரியாணா 5.00
8. கேரளா 4.98
9. மத்திய பிரதேசம் 4.85
10. மேற்கு வங்கம் 4.84

 

கட்டமைப்பு
வ.எண் மாநிலம் புள்ளி
1. தமிழகம் 0.74
2. குஜராத் 0.73
3. பஞ்சாப் 0.73
4. மகாராஷ்டிரா 0.73
5. ஹரியாணா 0.71

 

பாதுகாப்பு
வ.எண் மாநிலம் புள்ளி
1. தமிழகம் 0.56
2. கேரளா 0.55
3. சத்தீஸ்கர் 0.50
4. ராஜஸ்தான் 0.49
5. மகாராஷ்டிரா 0.40

 

இளைஞர்களின் நாடாகிறது இந்தியா

  • உலகில் மூவரில் ஒருவர் 1996-க்குப் பிறகு பிறந்தவர் என்கிறது மக்கள்தொகை ஆய்வுகள். 1996 – க்குப் பிறகு பிறந்தவர்கள் ‘ஜெனரேஷன் இஸட்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள். 2019 – இல் இஸட் தலைமுறையினரின் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 32%. ஐ.நா. 2014 – இல் வெளியிட்ட அறிக்கை, உலகின் மிகப் பெரிய இளைஞர் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இந்தியாவைக் குறிப்பிட்டிருந்தது.
  • இந்தியாவில் 10 முதல் 25 வரையிலான வயதினரின் எண்ணிக்கை 35.6 கோடியாக இருந்தது. 2020 – இல் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 15 முதல் 64 வரையிலான வேலைபார்க்கும் வயதினரின் எண்ணிக்கை 64% ஆக இருக்கும்.
  • 1980 தொடங்கி 1995 வரையில் பிறந்தவர்கள் ‘ஜெனரேஷன் ஒய்’ என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் காலம் செல்பேசிகளின் முன்னோடி என்றால், இஸட்களின் காலமோ செல்பேசியோடு சேர்ந்து வாழும் காலகட்டம்.
  • முந்தைய தலைமுறையினரைக் காட்டிலும் இஸட்கள் பல விஷயங்களில் சுட்டியாக இருக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சிக் காலகட்டத்தில் பிறந்ததால் 80-களில் பிறந்தவர்கள் தங்களது அனுபவங்களையே முதன்மையாக நினைத்தார்கள். ஆனால், 96-க்குப் பிறகு பிறந்தவர்கள் பொருளாதார நெருக்கடி நிலைகளோடு வளர்ந்தவர்கள் என்பதால் சேமிப்பதில் அவர்களுக்கு ஈடுபாடு அதிகமாக இருக்கிறது.

சுற்றுச்சூழல்


13 ஆயிரம் சதுர கி.மீ.வனப் பரப்பு அதிகரிப்பு

  • இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் வனப் பரப்பு சுமார் 13 ஆயிரம் சதுர கிலோ மீட்டா் அளவுக்கு அதிகரித்துள்ளது என மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவகால மாற்றம் துறையின் அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தார்.
  • குறிப்பாக கடந்த இரு ஆண்டுகளில் 5,188 ச.கி.மீ. வனப்பரப்பு அதிகரித்துள்ளதாகவும், இதன் மூலம் பாரீஸ் உடன்படிக்கையின் இலக்கை இந்தியா எட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
  • தில்லியில் ‘இந்தியா மாநில வன ஆய்வறிக்கை 2019’ வெளியிடும் நிகழ்வு டிசம்பர் 30ல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று ஆய்வறிக்கையை வெளியிட்டு அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் பேசியதாவது:
  • இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் வனம் மற்றும் மரங்கள் பரப்பு சுமார் 13 ஆயிரம் சதுர கிலோ மீட்டா் எனும் அளவில் அதிகரித்திருப்பது கடந்த இரு வனக் கணக்கெடுப்பு ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இவற்றில் மிக அடா்த்தி வனப் பகுதி, மிதமான அடா்த்தி வனப் பகுதி, திறந்தவெளி வனங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • கடந்த இரு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 5,188 ச.கி.மீ. வனப்பரப்பு அதிகரித்துள்ளது. நாட்டின் கார்பன் இருப்பு 2017 ஆம் ஆண்டு மதிப்பீட்டை ஒப்பிடும் போது, 42.6 மில்லியன் டன் அதிகரித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
  • பாரீஸ் உடன்படிக்கையின் கீழ் 2.5 முதல் 3 பில்லியன் டன் கூடுதல் கார்பன் குறைப்பை உருவாக்கும் லட்சியத்தை இந்தியா எட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.

தமிழ்நாடு


மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு என மாற்ற முடியாது

  • மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்ற மத்திய அரசு அளித்த பரிந்துரையை உயர் நீதிமன்ற முழு அமர்வு நீதிபதிகள் குழு ஏற்க மறுத்து விட்டது.
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு குழு கூட்டம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நடந்தது.

150 ஆண்டு பாரம்பரியம்

  • புதுச்சேரி மாநிலத்துக்கும் சேர்த்தே தமிழகத்தில் உயர் நீதிமன்றம் உள்ளதால், 150 ஆண்டு பாரம்பரியம் கொண்ட மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய முடியாது. மும்பை, கல்கத்தா உயர் நீதிமன்றங்கள் போல் மெட்ராஸ் உயர் நீதிமன்றமும் தொடர்ந்து அதே பெயரில் செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் குழு தீர்மானித்துள்ளது.

முன்மாதிரி மாவட்டமாக விளங்கும் அறந்தாங்கி சுகாதார மாவட்டம்

  • 2019 ஆண்டில் அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் தாய், சேய் இறப்பின்றி 10,065 பிரசவங்கள் நடைபெற்றுள்ளதன் மூலம் இம்மாவட்டம் தமிழகத்தில் முன்மாதிரி மாவட்டமாக சாதனை படைத்துள்ளது.
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகிய 2 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. இவற்றில், அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், கறம்பக்குடி மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
  • உயிருடன் பிறக்கும் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு எத்தனை தாய்மார்கள் இறக்கிறார்கள் என்பதையே பேறுகால மரணத்தின் குறியீடாக உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
  • இந்தியாவில் லட்சத்துக்கு 130 பேர் உயிரிழக்கின்றனர். இதை 2030-க்குள் 70 ஆக குறைக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், அதை விஞ்சும் விதமாக தற்போது தமிழகத்தில் 63 ஆக உள்ளது.

நாவலாசிரியர் செல்வராஜ் காலமானார்

  • சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாவலாசிரியர் டி.செல்வராஜ் டிசம்பர் 20 அன்று இரவு மதுரை மருத்துவமனையில் காலமானார்.
  • திருநெல்வேலி மாவட்டம், தென்கலம் கிராமத்தில் பிறந்த டி.செல்வராஜ் (87) திண்டுக்கல் நகரில் வசித்து வந்தார். பி.எல். பட்டம் பெற்ற இவர், சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணி புரிந்துள்ளார். தாமரை, ஜனசக்தி இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி உள்ளார். இவர் 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 70-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி உள்ளார்.
  • 2012-ம் ஆண்டு இவரது படைப்பான ‘தோல்’ என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
  • திண்டுக்கல் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் அவலநிலை குறித்து இந்த நாவலில் அவர் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.

விளையாட்டு


செஸ் சாம்பியன் பட்டம்

  • ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக மகளிர் ‘ரேபிட்’ செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றுள்ளார் இந்திய கிராண்ட்மாஸ்டர் கொனேரு ஹம்பி. சீனாவின் லீ டிங்ஜீயைத் தோற்கடித்து இந்தப் பட்டத்தை வென்றுள்ளார்

சீமாவுக்கு 4 ஆண்டு தடை

  • ஊக்க மருந்து பயன்படுத்தியதாக காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற பளு தூக்குதல் வீராங்கனை சீமாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு 4 ஆண்டு தடை விதித்துள்ளது.
  • இதுதொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விசாகப்பட்டினத்தில் நடந்த 34-ஆவது தேசிய மகளிர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியின் போது சீமாவுக்கு ஊக்கமருந்து சோதனை செய்யப்பட்டது.
  • அதில், அவா் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, அவருக்கு 4 ஆண்டுகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2017-ஆம் ஆண்டு காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற சீமா, கடந்த ஆண்டு கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் 75 கிலோ எடைப் பிரிவில் 6 ஆவது இடம் பிடித்தார்.

மேரி கோம்

  • டிசம்பர் 28ல் தில்லியில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் 36 வயத மேரி கோம், 23 வயது ஸரீனை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் மேரி கோமின் கையே ஓங்கி இருந்தது. 9-1 என்ற கணக்கில் மேரி கோம் வெற்றி பெற்றதாக நடுவரால் அறிவிக்கப்பட்டார். இந்தியா சார்பில் ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் பங்கு பெறுவதற்கு மேரி கோம் முறைப்படி தேர்வானார்.
  • 57 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற மற்றொரு தகுதிச் சுற்றில் உலக குத்துச் சண்டை சாம்பியன் ஷிப்பில் இரு முறை வெள்ளி வென்ற சோனியா லாதரை வீழ்த்தினார் சாக்ஷி சௌதரி.
  • 60 கிலோ எடைப் பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் எல்.சரிதா தேவி தேசிய சாம்பியன் சிம்ரன்ஜித் கௌரிடம் சரணடைந்தார்.
  • 69 கிலோ எடைப் பிரிவில் லால்லினா பார்கோஹைனும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற பூஜா ராணி 75 கிலோ எடைப் பிரிவிலும் வெற்றி பெற்று சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கு பெற இந்தியா சார்பில் தேர்வாகினர்.

ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்

  • மகாராஷ்டிர மாநிலம் நியூ பன்வேல் நகரில் நடைபெற்ற ஆர்.ஆர்.லக்ஷயா கோப்பை ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் சீனியர் பிரிவில் 18 வயது இளைஞர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்கம் வென்றார்.
  • மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், 50 மீட்டர் ஏர் ரைஃபிள் 3 பொசிஷனில் வென்றார். 252.3 புள்ளிக் கணக்கில் இவர் தங்கம் வென்றார். ராஜஸ்தானைச் சேர்ந்த 16 வயது இளைஞரான யஷ் வர்தன் 250.7 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார். அஸ்ஸாமைச் சேர்ந்த ஹிரிடே ஹஸரிகா வெண்கலம் வென்றார்.
  • போபாலில் டிசம்பர் 29ல் நடைபெற்ற தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் சண்டீகரைச் சேர்ந்த விஜய்வீர் சித்து தங்கம் வென்றார்.

விஸ்டன் சிறந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி

  • பிரசித்தி பெற்ற விஸ்டன் கிரிக்கெட் சிறந்த வீரா்கள் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலியும் இடம் பெற்றுள்ளார்.
  • கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் சிறப்பாக ஆடிய 5 வீரா்கள் பட்டியலை விஸ்டன் வெளியிட்டுள்ளது. ஆஸி. வீரா் ஸ்டீவ் ஸ்மித், தென்னாப்பிரிக்க வீரா்கள் டேல் ஸ்டெயின், டி வில்லியா்ஸ், எல்ஸி பொ்ரி ஆகியோர் பெயா்கள் இடம் பெற்றுள்ளன.
  • அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் பேட்டிங் சராசரி 50 வைத்துள்ள ஓரே பேட்ஸ்மேன் கோலி ஆவார். 10 ஆண்டுகளில் 5775 ரன்கள், 22 சா்வதேச சதங்களை தன்வசம் பெற்றுள்ளார் கோலி.
  • 2019-இல் மட்டுமே 2370 ரன்களை விளாசியுள்ளார். தொடா்ந்து நான்காவது முறையாக ஒரே ஆண்டில் 2000 ரன்களை எடுத்துள்ளார் கோலி. விஸ்டன் ஒருநாள் அணியிலும் தோனி, ரோஹித்துடன் இடம் பெற்றுள்ளார் கோலி.

ஜெர்மி லால்ரின்னுங்கா

  • கத்தார் தலைநகரான தோகாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவருக்கான 67 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஜெர்மி லால்ரின்னுங்கா 306 கிலோ (140 + 166) எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • இளையோர் உலகக் கோப்பையின் 3 சாதனைகள், ஆசிய இளையோர் போட்டியின் 3 சாதனைகள், காமன்வெல்த் விளையாட்டின் 6 சாதனைகள் என சர்வதேச அளவில் 12 சாதனைகளையும் தேசிய அளவில் 15 சாதனைகளையும் தகர்த்துள்ளார் ஜெர்மி லால்ரின்னுங்கா.

மைஸ்னம் மீராபா லுவாங்

  • வங்கதேச ஜூனியர் சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் மைஸ்னம் மீராபா லுவாங் சாம்பியன் பட்டம் வென்றார். வங்கதேச தலைநகர் டாக்காவில் இப்போட்டி நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் மீராபா 21-14, 21-18 என்ற செட் கணக்கில் மலேசிய வீரர் கென் யாங் ஆங்கை வீழ்த்தினார்.

லிவர்பூல் சாம்பியன்

  • சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து ப்ரீமியர் லீக்கில் முன்னணி அணியான லிவர்பூலும், பிரேசில் சாம்பியனுமான பிளேமிங்கோவும் டிசம்பர் 21ல் நடைபெற்ற இறுதிச் சுற்றில் மோதின. இரு அணிகளும் தொடக்கம் முதலே சமபலத்துடன் மோதியதால் ஆட்டம் பரபரப்பாக அமைந்தது.
  • கடந்த 1981-இல் இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியில் லிவர்புலை வென்றிருந்தது பிளேமிங்கோ. அதன் பின் 2012-இல் நடைபெற்ற கிளப் உலகக் கோப்பை போட்டியில் பிரேசிலின் கார்னித்தியன்ஸ் அணி லிவர்பூலை வீழ்த்தி பட்டம் வென்றிருந்தது.
  • வழக்கமான 90 நிமிட நேரத்தில் இரு அணிகளாலும் கோல் போட முடியவில்லை. இறுதியாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் லிவர்புல் வீரா ராபாடோ பிர்மினோ அடித்த ஒரே கோலே வெற்றிக் கோலாக மாறியது.
  • சாம்பியன்ஸ் லீக் கோப்பை, யுஇஎப்ஏ சூப்பர் கோப்பை போன்றவற்றுடன், கிளப் உலகக் கோப்பையையும் லிவர்பூல் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது, கிளப் அணிகள் பிரிவில் உலக சாம்பியனாக ஆகியுள்ளது லிவர்புல் அணி.

ரித்விக் சாம்பியன்

  • ஒடிசாவில் உள்ள புவனேஷ்வர் நகரில் 33-வது தேசிய சப் ஜூனியர் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுவர்கள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ரித்விக் சஞ்ஜீவி தங்கப் பதக்கம் வென்றார். இறுதி சுற்றில் ரித்விக் சஞ்ஜீவி 21-15, 21-14 என்ற நேர் செட்டில் ராஜஸ்தானின் பிரனே கட்டாவை வீழ்த்தினார்.
  • 17 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுவர்கள் பிரிவில் தேசிய அளவிலான தொடரில் தமிழகத்தை சேர்ந்த வீரர் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.
  • மகளிருக்கான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான இரட்டையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பிரணவி, சாருமதி ஜோடி வெள்ளிப் பதக்கம் பெற்றது. இறுதி சுற்றில் பிரணவி, சாருமதி ஜோடி 21-14, 18-21, 18-21 என்ற செட் கணக்கில் ஹரியாணாவின் தேவிகா சிஹாக், ரிதி கவுர் ஜோடியிடம் தோல்வி கண்டது.
  • கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் ஹரிஹரன் அம்சகருணன், பிரவீனா ஜோடி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. அதே வேளையில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுமிகள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் ஞானதா கார்த்திகேயன், சானியா சிக்கந்தர் ஜோடி இறுதி சுற்றில் 21-7, 21-15 என்ற நேர் செட்டில் கர்நாடகாவின் காயத்ரி ராணி, ஜெய்ஸ்வால் கர்னிகா ஸ்ரீ ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

மானு பாக்கர், அனிஷுக்கு தங்கம்

  • தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனியா், ஜூனியா் பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை மானு பாக்கா், அனிஷ் பன்வாலா இருவரும் அள்ளினா்.
  • புது தில்லியில் நடைபெற்ற இப்போட்டியில் மகளிர் 10 மீ. ஏா் பிஸ்டல் பிரிவில் மானு பாக்கரும், ஆடவா் 25 மீ. ரேபிட் பையா் பிஸ்டல் பிரிவில் அனிஷ் பன்வாலாவும் தங்கம் வென்றனா்.
  • ஹரியாணாவைச் சோ்ந்த மானு, சீனியா், ஜூனியா் தனி நபா், அணிகள் பிரிவில் 4 தங்கம் வென்றார். அனிஷ் பன்வாலாவும் அதே போல 4 தங்கப் பதக்கங்களை கைப்பற்றினார்.
  • மானு பாக்கா், அனிஷ் பன்வாலா இருவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். மகளிர் பிரிவில் தேவன்ஷி சா்மா, யஷ்ஹஸ்வினி சிங் வெள்ளி, வெண்கலம் வென்றனா். ஆடவா் பிரிவில் பவேஷ், விஜயவீா் சித்து முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனா்.

முக்கிய விருதுகள்


அபெல் பரிசு வென்ற முதல் பெண்

  • கணிதத்தில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு, துறையில் வலுவான தாக்கத்தைச் செலுத்தும் கணிதவியலாளர்களுக்கு உலக அளவில் வழங்கப்படும் மதிப்பு வாய்ந்த பரிசுகளில் முதன்மையானது அபெல் பரிசு (Abel Prize). ‘கணித நோபல்’ என்று அழைக்கப்படும் இந்தப் பரிசு, முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது.
  • அமெரிக்காவைச் சேர்ந்த கேரன் உஹ்லென்பெக் (Karen Uhlenbeck) என்ற பெண் கணிதவியலாளருக்கு, ‘வடிவியல் வகையீட்டுச் சமன்பாடு, புலக் கோட்பாட்டின் ஒரு பிரிவான தரமதிப்புக் கோட்பாடு ஆகியவற்றில் முன்னோடிச் சாதனைகள் மற்றும் கணித இயற்பியல், வடிவியல் ஆகியவற்றில் இவருடையப் பணிகளின் அடிப்படைத் தாக்கம்’ ஆகியவற்றுக்காக அபெல் பரிசு அறிவிக்கப்பட்டது.
  • பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் மூத்த ஆராய்ச்சியாளராகவும் மேம்பட்ட ஆய்வுக்கான நிறுவனத்தில் (IAS) வருகை தரும் பேராசிரியராகவும் பணியாற்றும் உஹ்லென்பெக், அறிவியல் – கணிதத்தில் பாலின சமத்துவத்துத்தின் தேவையைத் தொடர்ந்து அழுத்தமாக வலியுறுத்தி வருபவர்.

கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது

  • 66-வது ஆண்டு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லி விக்ஞான் பவனில் டிசம்பர் 23ல் நடைபெற்றது. விருதுகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கி சிறப்பித்தார்.
  • இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டன. திரைப்படத் துறையில் அளிக்கப்படும் உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டார்.
  • சிறந்த இந்தி படமாக ‘அந்தாதுன்’ தேர்வு செய்யப்பட்டது. மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநடி (தெலுங்கு, தமிழ் மொழிகளில் தயாரான படம்) படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இந்த விழாவில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றுக்கொண்டார்.
  • சிறந்த தேசிய நடிகர்களுக்கான விருதை இந்தி நடிகர்கள் விக்கி கவுஷல், ஆயுஷ்மான் குரானா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
  • ப்ரியா கிருஷ்ணஸ்வாமி இயக்கிய ‘பாரம்’ படம் சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்டது. விழாவில் பாரம் படக்குழுவினர் விருதை பெற்றுக் கொண்டனர்.
  • சிறந்த இயக்குநருக்கான விருதை ‘உரி’, ‘தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ இந்திப் படத்தை இயக்கியதற்காக ஆதித்யா தர் பெற்றார்.
  • பெண்களுக்கு சுயஅதிகாரம் வழங்குவதை வலியுறுத்திய ‘ஹெல்லாரோ’ குஜராத்தி படத்துக்கு விருது கிடைத்தது. சிறந்த பொழுதுபோக்கு படமாக பதாய் ஹோ படத்துக்கு விருது வழங்கப்பட்டது.
  • சிறந்த துணை நடிகர் விருது ஸ்வானந்த் கிர்கிரேவுக்கு (படம்: சம்பக்) வழங்கப்பட்டது. சிறந்த திரைக்கதை விருது – ராம் ராகவன், அரிஜித் பிஸ்வாஸ், பூஜா லதா சுர்ட்டி, ஹேமந்த் ராவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
  • சிறந்த இசையமைப்பாளருக்கான விருது சஞ்சய் லீலா பன்சாலிக்கு (படம்: பத்மாவத்) அளிக்கப்பட்டது. சிறந்த பின்னணிப் பாடகர் விருதை அரிஜித் சிங்கும், பாடகி விருதை பிந்து மாலினி நாராயணசாமியும் பெற்றனர்.
  • கன்னடப் படமான ‘ஒந்தல்ல எரடல்ல’ நர்கிஸ் தத் விருதைப் பெற்றது. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை பி.விரோஹித் (ஒந்தல்ல எரடல்ல), சமீப் சிங் ரணவத் (ஹர்ஜீத்தா), தல்ஹா அர்ஷத் ரேஷி (ஹமித்), நிவாஸ் போகலே (நால்) ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
  • தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பதிலாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கியுள்ளார்.
  • இந்திய திரைப்படத் துறையின் தந்தை என்று போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பெயரில் கடந்த 1969-ம் ஆண்டு விருது உருவாக்கப்பட்டது. திரைப்பட துறையில் வாழ்நாள் சாதனை புரியும் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விருதில் தங்கத் தாமரை பதக்கம், சால்வை, ரூ.10 லட்சம் அடங்கும்.

தேசிய ஐசிடி விருது

  • பள்ளி ஆசிரியா்கள் 43 பேருக்கு தேசியத் தகவல்தொடர்பு தொழில்நுட்ப (ஐசிடி) விருதுகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே வழங்கினார்.
  • பள்ளி ஆசிரியா்களுக்கான தேசியத் தகவல் தொடா்பு தொழில்நுட்ப (ஐசிடி) விருதுகள் வழங்கும் விழா டிசம்பர் 23 அன்று தில்லியில் அம்பேத்கா் சா்வதேச மையத்தில் நடைபெற்றது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சோந்த பள்ளி ஆசிரியா்கள் 43 பேருக்கு ஐசிடி விருதுகள் வழங்கப்பட்டன.
  • விருதுநகா் மாவட்டம், நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியா் ப.கருணைதாஸ், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புட்குழி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியா் ந.செல்வகுமார், விழுப்புரம் மாவட்டம், ஓமாந்தூா் ஓபிஆா் அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியா் வி.லாசா் ரமேஷ் ஆகியோரும் தேசிய விருது பெற்றனா்.
  • மாணவா்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆசிரியா்களின் பணிக்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ஐசிடி விருது பெற்றதன் மூலம் ஐசிடி தூதுவா்களாக செயல்படும் பொறுப்பு ஆசிரியா்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், திறன்மிக்க மனித பணிச்சக்தியை உருவாக்கும் பொருட்டு மாணவர்கள் மத்தியில் தொழில் முனைவு திறன்களையும் உருவாக்க வேண்டிள்ளது.
  • இந்த விருதை தில்லி, ஹரியாணா, ஆந்திரம், கேரளம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோந்த ஆசிரியா்கள் பெற்றனா். விருது பெற்றவா்களுக்கு விருதுடன் மடிக் கணினி, வெள்ளிப்பதக்கம், ஐடிசி கிட், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது.

விருது மங்கை த்ரிஷா

  • தமிழில் கடந்த ஆண்டு வெளியான ‘96’ படத்துக்காக 11 விருதுகளையும், மலையாளத்தில் வெளியான ‘ஹே ஜூட்’ படத்தக்காக 3 விருதுகளையும் பெற்று அதிக விருதுகள் பெற்ற தென்னிந்திய நடிகை பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறார் த்ரிஷா.

ஹரிவராசனம் விருது

  • மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாட்டுக்காகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு ‘ஹரிவராசனம்’ என்ற விருதை கேரள அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு, சான்றிதழ், கேடயம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • 2020-ம் ஆண்டுக்கான ‘ஹரிவராசனம்’ விருது, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜனவரி 15ம் தேதி மகர சங்கராந்தி (பொங்கல் பண்டிகை) நாளில் நடக்க உள்ள விழாவில் ‘ஹரிவராசனம்’ விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது என்று கேரள அரசின் முதன்மைச் செயலாளர் கே.ஆர்.ஜோதிலால் தெரிவித்துள்ளார். அதே நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ‘வணக்கத்துக்குரிய இசைஞானி’ என்ற பட்டமும் வழங்கப்பட உள்ளது.

முக்கிய நியமனங்கள்


ஜார்க்கண்ட் முதல்வரானார் ஹேமந்த் சோரன்

  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜக 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி சார்பில் முதல்வர் பதவிக்கு அக்கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார். அவரை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் திரவுபதி முர்மு அழைப்பு விடுத்தார்.
  • ராஞ்சியில் உள்ள மொரஹாபதி மைதானத்தில் டிசம்பர் 29ல் பதவியேற்பு விழா நடந்தது. இவ்விழாவில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல்வராக ஹேமந்த் சோரன் (44) பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

முப்படையின் முதல் தளபதி

  • நாட்டின் முப்படை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். ராணுவ தளபதி பதவியில் இருந்து டிசம்பர் 31ல் ஓய்வு பெறும் இவர், புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.
  • நம் நாட்டில் இப்போது ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு தனித்தனியாக தளபதிகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த கார்கில் போரில் நமது ராணுவம் வெற்றி பெற்றது. எனினும், இந்தப் போரின்போது முப்படைகளை ஒருங்கிணைப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் எழுந்தன.
  • இதுகுறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு, வளர்ந்த நாடுகளில் இருப்பது போல முப்படைக்கும் தளபதி (Chief of Defence Staff CDS) பதவியை உருவாக்க வேண்டும் என பரிந்துரை வழங்கியது.
  • கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் புதிதாக முப்படை தளபதி பதவி உருவாக்கப்படும் என அறிவித்தார்.

அமைச்சரவை ஒப்புதல்

  • பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் கடந்த டிசம்பர் 24 ம் தேதி நடைபெற்றது. இதில் புதிதாக முப்படை தளபதி பதவியை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து, முப்படை தளபதிக்கான அதிகாரங்கள் மற்றும் கடமைகளை அரசு வெளியிட்டது. முப்படை தளபதி பதவியில் 4 நட்சத்திர அந்தஸ்து கொண்ட அதிகாரி நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
  • முப்படை தளபதி 65 வயது வரை பணியாற்றும் வகையில் முப்படைக்கான விதிகளில் அரசு திருத்தம் செய்தது.
  • தற்போது மூன்று படைகளின் தளபதிகளும், நியமனம் செய்யப்பட்டது முதல் 3 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை (இது எது முதலில் வருகிறதோ அதுவரை) பணியில் நீடிப்பர். முப்படைகளின் தளபதிகளும் சம அதிகாரம் கொண்டவர்களாக இருப்பர். இவர்களுக்கு தளபதியாக முப்படைத் தளபதி செயல்படுவார். படைகளின் செயல்பாடு தொடர்பான அதிகாரங்கள் அந்தந்த படைத் தளபதிகளிடமே தொடர்ந்து இருக்கும்.
  • இந்நிலையில், முப்படை தளபதியாக ராணுவ தளபதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் நாட்டின் முதல் முப்படை தளபதி என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

ராணுவ தலைமைத் தளபதி

  • இந்திய ராணுவத்தின் 28-ஆவது தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே டிசம்பர் 31ல் பொறுப்பேற்றார்.
  • ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த விபின் ராவத் டிசம்பர் 31ல் ஓய்வு பெறும் நிலையில், ராணுவ துணைத் தளபதியான முகுந்த் நராவனே அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். முன்னதாக நராவனே, சீனாவுடனான எல்லையை பாதுகாக்கும் இந்திய ராணுவத்தின் கிழக்கு படைப் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார்.
  • கடந்த 37 ஆண்டுகளாக ராணுவ பணியில் இருக்கும் நராவனே, ஜம்மு-காஷ்மீா் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளா்ச்சியை கட்டுப்படுத்துவது, அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படைப் பிரிவு மற்றும் காலாட் படையின் கமாண்டராக இருந்துள்ளார்.
  • தேசிய பாதுகாப்பு அகாதெமி, இந்திய ராணுவ அகாதெமி ஆகியவற்றில் பயிற்சி முடித்த முகுந்த் நராவனே, கடந்த 1980-ஆம் ஆண்டு சீக்கிய காலாட் படையில் இணைந்து தனது ராணுவப் பணியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தகவல் தொடர்பு ஆணையத்துக்கு இந்திய அமெரிக்கர் நியமனம்

  • அமெரிக்க தகவல் தொடர்பு ஆணையத்தின் (எஃப்சிசி) முதல் பெண் தலைமை தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) மோனிஷா கோஷ் என்ற இந்திய அமெரிக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தனக்கு அடுத்த நிலையில் உள்ள எஃப்சிசி தலைவர் அஜித் பை மற்றும் எஃப்சிசி அமைப்பின் பிற துறைகளுக்கும் ஆலோசனைகளை வழங்குவார்.
  • அமெரிக்காவின் சக்தி வாய்ந்த அமைப்பான எஃப்சிசி, மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் ஒளிபரப்பாகும் உள்நாட்டு மற்றும் சர்வதேச வானொலி, தொலைக்காட்சி, செயற்கைக்கோள் ஒளிபரப்பு, கேபிள் சேவை அகியவற்றை முறைப்படுத்தும் அமைப்பாக உள்ளது. அமெரிக்காவில் தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட சட்ட விதிகளை இந்த அமைப்புதான் அமல்படுத்தி வருகிறது.
  • கடந்த 1986 இல் இந்தியாவில் கரக்பூர் ஐஐடியில் பி.டெக் முடித்த மோனிஷா கோஷ் 1991இல் தெற்கு கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் மின் பொறிறியல் துறையில் பிஎச்.டி. பட்டம் பெற்றார்.

43 ஆண்டுளுக்குப் பிறகு கியூபாவுக்குப் பிரதமர்

  • கியூபாவின் பிரதமராக அந்த நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் மானுவல் மரேரோ நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இதுதொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் அதிபர் மிகுவேல் டியாஸ் – கனேல் கூறியதாவது: மானுவல் மரேரோவை நாட்டின் பிரதமராக நியமிக்க பரிந்துரைத்திருந்தேன். அந்தப் பரிந்துரைக்கு கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார் அவர்.
  • அதையடுத்து, அந்த பரிந்துரை தொடர்பான மசோதாவை நாடாளுமன்றம் ஒருமனதாக ஏற்றுக் கொண்டது. அதன் தொடர்ச்சியாக, மானுவல் மரேரோவுக்கு முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ கைகுலுக்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
    புரட்சியின் மூலம் கியூபாவின் ஆட்சியை கடந்த 1956-ஆம் ஆண்டு கைப்பற்றிய ஃபிடல் காஸ்ட்ரோ, அந்த நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், அந்த நாட்டை அதிபர் ஆட்சி முறைக்கு மாற்றிய அவர், 1976-ஆம் ஆண்டில் அதிபராகப் பொறுப்பேற்றார்.
  • அதற்குப் பிறகு, கியூபாவில் பிரதமர் பதவியே இல்லாமல் இருந்து வந்தது.
    இந்த நிலையில், 43 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக அந்த நாட்டுக்குப் பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நாட்டில் அதிகாரங்களை பரவலாக்கவும், கம்யூனிஸ ஆட்சியை வலுப்படுத்தவும் அதிபர் மிகுவேல் டியாஸ்-கனேல் மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:
error: Content is protected !!