December 3rd Week CA – 2019

Share:

உலகம்


பிரதமர் மோடியுடன் போர்ச்சுகல் பிரதமர் சந்திப்பு

  • அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை டிசம்பர் 19 இல் சந்தித்துப் பேசினார்.
  • மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தின கொண்டாட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று போர்ச்சுகல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா இந்தியா வந்துள்ளார்.
  • இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளதாவது; இந்த சந்திப்பின் போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆவது முறையாக பிரதமர் மோடியும், போர்ச்சுகல் பிரதமர் கோஸ்டாவும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போர்ச்சுகல் பிரதமர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பின்னர், முதல்முறையாக இந்தியாவுக்கு கோஸ்டா வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரம்புக்கு எதிரான பதவி நீக்க மசோதாக்கள் நிறைவேற்றம்

  • அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான 2 மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டன.
  • அமெரிக்க வரலாற்றில் அதிபருக்கு எதிராக பதவி நீக்கத் தீா்மானம் கொண்டு வரப்பட்டது இது 3 – ஆவது முறையாகும்.
  • நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சியினா் பெரும்பான்மையாக உள்ள செனட் சபையில் இந்த மசோதா முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், டிரம்ப்பின் பதவிக்கு ஆபத்தில்லை என்று கூறப்படுகிறது.
  • உக்ரைனில் தொழில் நடத்தி வரும் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனுக்கு எதிராக ஊழல் விசாரணை நடத்துமாறு அந்த நாட்டு அரசுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக, நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையில் 2 மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன.
  • இந்த விவகாரத்தில் டிரம்ப் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக ஒரு மசோதாவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மற்றொரு மசோதாவும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன.
  • அதிகார துஷ்பிரயோக மசோதாவுக்கு ஆதரவாக 230 வாக்குகளும், எதிராக 197 வாக்குகளும் பதிவாகின. நாடாளுமன்ற இடையூறு மசோதாவை ஆதரித்து 229 வாக்குகளும், எதிர்த்து 198 வாக்குகளும் பதிவாகின. அதையடுத்து, அந்த 2 மசோதாக்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
  • 243 ஆண்டு கால அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் அதிபருக்கு எதிராக பிரதிநிதிகள் சபை பதவி நீக்க மசோதா நிறைவேற்றுவது இது 3 – ஆவது முறையாகும்.
  • இதற்கு முன்னா், கடந்த 1868 – ஆம் ஆண்டில் 17 – ஆவது அதிபா் ஆண்ட்ரூ ஜான்ஸனும், அதன் பிறகு 1998 – ஆம் ஆண்டில் 42 – ஆவது அதிபா் பில் கிளிண்டனும் பிரதிநிதிகள் சபையால் பதவி நீக்கம் செய்யப்பட்டனா்.
  • இந்த நடவடிக்கை மூலம் அவா்களில் யாரும் பதவியிலிருந்து அகற்றப்படவில்லை. டிரம்ப்பின் பதவியைப் பறிக்க வேண்டுமென்றால், இந்த இரு மசோதாக்களுக்கும் மேலவையான செனட் சபையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினா்கள் ஒப்புதல் வழங்க வேண்டும்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்க்கு தூக்கு தண்டனை

  • இந்தியாவுடன் நடைபெற்ற கார்கில் போரில் பாகிஸ்தான் படுதோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிப்க்கும், ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
  • முஷாரப் கடந்த 2001 – ஆம் ஆண்டில் ராணுவ கிளர்ச்சியை ஏற்படுத்தி அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீபின் ஆட்சியை கவிழ்த்தார். பின்னர் தன்னை பாகிஸ்தான் அதிபராக அறிவித்துக் கொண்ட அவர் நாட்டில் ராணுவ ஆட்சியை நிறுவினார்.
  • தாம் அதிபர் பதவியில் இருப்பதற்காக நாடாளுமன்ற தேர்தலை முடக்கும் நோக்கில் 2007 ஆம் ஆண்டு முஷாரப் திடீரென அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். அத்துடன் அரசமைப்பு சட்டத்தையும் தற்காலிகமாக முடக்கினார். 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) அமோக வெற்றி பெற்றது
  • நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை முடக்கியதற்காகவும், அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்காகவும் அவர் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டது. இதனை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
  • விசாரணையை தவிர்ப்பதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு லண்டன் தப்பிச் சென்றார். பின்னர் துபாய்க்கு குடிபெயர்ந்த அவர் அதன் பின்னர் பாகிஸ்தான் திரும்பவே இல்லை.
  • சிறப்பு நீதிமன்ற நீதிபதி வகார் அகமது சேத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு 17.12.19 அன்று தீர்ப்பை வெளியிட்டது.
  • அரசியலமைப்பு சட்டத்தை தனது சுயலாபத்துக்காக, அரசியல் ஆதாயத்திற்காக பர்வேஸ் முஷாரப் முடக்கியிருக்கிறார். இதன் மூலம் அவர் தேச துரோகத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது தெளிவாகிறது.
  • 1973 தேசத் துரோக சட்டப்படி அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியாளராக இருந்த ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தியா


நிர்பயா நிதியை பயன்படுத்த பயன்படுத்தாத மாநிலங்கள்

  • டெல்லியில் 2012 ஆம் ஆண்டு மாணவி நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான செலவுகளுக்காக நிர்பயா நிதியை மத்திய அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு ஏற்படுத்தியது.
  • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1,649  கோடியில் ரூ. 147 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. மத்திய பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்
  • இந்த நிதியில் கர்நாடகா 7%, தமிழ்நாடு 3%, டெல்லி 5% பயன்படுத்தியுள்ளனர்.
  • மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான டாமன் டையூ ஆகியவை நிர்பயா நிதியை பயன்படுத்தவில்லை.

பாலியல் வன்கொடுமை வழக்குகளை துரிதமாக விசாரிக்க நீதிபதிகள் குழு

  • நாடு முழுவதும் விசாரிக்கபடாமல் நிலுவையிலுள்ள பாலியல் வன்கொடுமை வழக்குகளை துரிதமாக விசாரிக்கும் நோக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைந்துள்ளது.
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.
  • நாடு முழுவதும் உள்ள பாலியல் வன்கொடுமை வழக்குகளை துரிதமாக விசாரிக்கும் நோக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி, எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அமைத்துள்ளார்.

ஆளுமைமிக்க 10 பெண்களின் பெயர்களில் புதிய இருக்கைகள்

  • மத்திய பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் பல்வேறு துறைகளில்  ஆளுமைமிக்க பெண்களின் பெயர்களில் நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் புதிதாக 10 இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன
  • கணித அறிஞர் லீலாவதி, காஷ்மீர் கவிஞர் லால் டெட், வனப் பாதுகாவலர் அமிர்தா தேவி, மராட்டிய ராணி அகல்யா பாய்  ஹோல்கர், நாட்டின் முதல் பெண் மருத்துவர் ஆனந்திபாய் கோபால் ராவ் ஜோஷி, சமூக சீர்திருத்தவாதி ஹன்சா மேக்தா, ஹிந்தி கவிஞர் மகாதேவி வர்மா, உயிரி வேதியல் ஆராய்ச்சியாளர் கமலா சோஹனி,  சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி கெய்டின்லியு, கர்நாடக இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகிய 10  ஆளுமைமிக்க பெண்களின் பெயரில் இந்த இருக்கைகள் அமைக்கப்படுகின்றன
  • இருக்கைக்கான பேராசிரியர்களை பல்கலைக்கழகங்கள் குழு அமைத்து முன் மொழியலாம். பேராசிரியர்கள் 55 – 70 வயதில் இருக்க வேண்டும்.
  • பதவி காலம் 5 ஆண்டுகள் தேவைப்பட்டால் 10 ஆண்டுகள் வரை பதவிக் காலம் நீட்டிக்கலாம். இருக்கைக்கான நிதியை மத்திய பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும். இவ்வாறு  பல்கலைக்கழக மானியக் குழு  (யுஜிசி) தெரிவித்துள்ளது

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்


பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

  • ஒலியின் வேகத்தைவிட அதிவேகமாக பாயும் திறன் கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை ஒடிசாவில் டிசம்பர் 17ல் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  • இந்திய, ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணை கடந்த 2007ம் ஆண்டில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இதன்பின் நீர்மூழ்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள், போர் விமானங்களில் இருந்து ஏவும் வகையில் ஏவுகணையின் தரம் மேம்படுத்தப்பட்டது. முப்படைகளிலும் இந்த ஏவுகணை சேர்க்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில் தரையில் இருந்து தரை இலக்கை தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை ஒடிசாவின் சண்டிப்பூர் அருகே சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்தது. இது ஒலியை விட 3 மடங்கு வேகமாக சீறிப் பாயக்கூடியது. 50 கி.மீ. வரை இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது.

விண்வெளி செல்லும் சிதம்பரம் பள்ளி மாணவர்கள் பரிந்துரைத்த பொருட்கள்

  • தேசிய வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக் குழு (என்டிஆர்எப்) இந்திய அளவிலான செயற்கைக்கோள் வடிவமைப்பு போட்டியை இணையதளம் வாயிலாக நடத்தியது. இதில் செயற்கைக்கோளுடன் புவியில் இருந்து எடுத்துச் செல்லும் பொருட்களை பரிந்துரைக்க வேண்டும்; அது புதுமையாகவும் எளிமையானதாகவும் இருக்க வேண்டும். அந்தப் பொருள் 3.8 செ.மீ அளவிலான பெட்டியில் பொருந்தும் வண்ணம் அமைய வேண்டும் என்ற விதிமுறைகளை விதித்தது.
  • இதில் சிதம்பரத்தில் உள்ள அரசு உதவிபெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் பரிந்துரைத்த 9 பொருட்களில் 2 பொருட்கள் தேர்வு செய்யப்பட, அந்த மாணவர் குழுக்கள் இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
  • சிதம்பரம் பள்ளி மாணவர்களின் முதல் குழு சிமென்டை விண்வெளிக்கு அனுப்ப பரிந்துரை செய்தது. 2-வது குழு பென்சிலின் என்ற உயிர் எதிர்ப்பொருளை (ஆன்டிபயாடிக்) அதில் அனுப்ப பரிந்துரை செய்தது.

மின்வேதி டிரான்சிஸ்டர் சென்சார் தொழில்நுட்பம்

  • நீரிழிவு நோயாளிகள், தங்கள் சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இதற்கு தற்போதுள்ள தொழில்நுட்பத்தின்படி விரல் நுனியில் ஊசியால் குத்தி ரத்த மாதிரி எடுக்கப்படுகிறது. அல்லது ஊசி மூலம் குறிப்பிட்ட அளவு ரத்தம் எடுக்கப்பட்டு சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படுகிறது.
  • இதற்கு மாற்றாக உடலுக்குள் பயோ சென்சார்கள் பொருத்தி ரத்த சர்க்கரை அளவை அறியலாம். ஆனால், பயோ சென்சார்களை இயக்க உடலில் இருந்து மின்னாற்றல் பெறுவதில் சிக்கல் இருந்தது. இந்நிலையில், காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவன (சிக்ரி) ஆராய்ச்சியாளர் முனைவர் தமிழரசன் பழனிசாமி, சர்வதேச ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து மின்னாற்றல் பெறுவதற்கான மின்வேதி டிரான்சிஸ்டர் சென்சார் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளார்.
  • இதுகுறித்து தமிழரசன் பழனிசாமி கூறியது மின்வேதி டிரான்சிஸ்டர் சென்சார் தொழில்நுட்பத்தில் ஒரு எதிர்மின்னணுவை கடத்தும் குறைக்கடத்தி பாலிமரையும் ஒரு குறிப்பிட்ட நொதியையும் பயன்படுத்தி உடலில் உள்ள குளுக்கோஸை அளவிட முடியும்.
  • அதே நேரம் பாலிமரும், நொதியும் குளுக்கோஸை பயன்படுத்தி எரிமின் கலனில் மின்னாற்றலை உற்பத்தி செய்யலாம். இந்த மின்னாற்றல் மூலம் மின்வேதி டிரான்சிஸ்டர் சென்சாரை இயக்க முடியும். இந்த எரிமின் கலன் மூலம் உடலினுள் பொருத்தப்படும் வேறு மின்னணு சாதனங்களுக்கும் பயன்படுத்த முடியும்.
  • ரத்தத்தில் மட்டுமின்றி உமிழ் நீரில் உள்ள குளுக்கோஸ் அளவையும்கூட இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிய முடியும். உடலினுள் பொருத்தப்படக் கூடிய இத்தகைய சென்சார்கள் மூலம் உடலின் குளுக்கோஸ் அளவை தொடர்ச்சியாக கண்காணிக்க முடியும். இதன் மூலம் நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்ற குறைபாடுகளை முன்பே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றார்.

பொருளாதாரம்


இணைய பண பரிவர்த்தனை தொடர்பாக புகார் அளிக்க 21 புகார் மையங்கள்

  • மத்திய அரசு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு பணமில்லா பரிவர்த்தனையை அதிகளவில் ஊக்குவித்து வருகிறது
  • டெபிட், கிரெடிட் கார்ட் மற்றும் இ வேலட், யு பி ஐ உள்ளிட்டவை மூலம் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் தள்ளுபடி போன்றவை வழங்கப்பட்டு வரும் சூழ்நிலையில் மின்னணு பணப் பரிவர்த்தனை தொடர்பான ஏராளமான மோசடிகளும் நடைபெறுகின்றன.
  • இணையப் பண பரிவர்த்தனையால் பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட இணைய பரிவர்த்தனை மையங்களில் வாடிக்கையாளர் சேவை மையங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
  • அவர்களுக்கு தீர்வு காணப்படாத பட்சத்தில் தமிழகம் உட்பட 19 மாநிலங்களில் 21 சேவை மையங்களில் தனி அதிகாரி ஒருவர் மூலமாக புகார் தொடர்பாக விசாரித்து துரிதமாக தீர்வு காணப்படும்.
  • புகார் அளிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலோ அல்லது புகார் நடவடிக்கை மீது திருப்தி ஏற்படாமல் இருந்தாலோ இந்த மையத்தை அணுகலாம்.
  • விசாரணையின்போது  புகார்தாரர் வழக்கறிஞர் அல்லாத தங்களுக்கு நம்பிக்கைக்குரிய ஒருவரைக் கூட அனுப்பி தீர்வு காணலாம்
  • விசாரணையில் இரு தரப்பிற்கும் சமரசம் ஏற்படாத போது புகார்தாரர் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், புகார் அளித்ததற்கான செலவு என அனைத்துக்கும் சேர்த்து அதிகபட்சமாக ரூ. 20 லட்சம் வரை நஷ்ட ஈடு கோரலாம்.
  • இணைய பரிவர்த்தனையில் பிரச்சனை ஏற்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் அளித்த 13 மாதங்களில் புகார் மையத்தை அணுக வேண்டும்.
  • இந்த குறைதீர்ப்பு மையத்தில் வழங்கப்படும் தீர்வு திருப்தியாக இல்லாதபட்சத்தில் தீர்வு வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள் ரிசர்வ் வங்கியின் குறைதீர்ப்பாளர் (ombedsman) அணுக வேண்டும்.
  • அவர் அளிக்கும் தீர்விலும் திருப்தி ஏற்படாத பட்சத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம்.

மனித வளர்ச்சி பட்டியல் 2019

  • 2019 ஆம் ஆண்டிற்கான மனித வளர்ச்சி பட்டியலை ஐ.நா. வளர்ச்சித் திட்டக்குழு வெளியிட்டது.
  • 189 உலக நாடுகள் இடம்பெற்றிருந்த இந்த பட்டியலில் இந்தியா 129 ஆம் இடத்தில் உள்ளது. உலகின் 28 % ஏழைகள் (36.4 கோடி பேர்) இந்தியாவில் வாழ்வதாக ஐ.நா. வின் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

பாலின விகித பட்டியல்

  • உலக பொருளாதார கூட்டமைப்பு (WEF) வெளியிட்டுள்ள பாலின விகித பட்டியலில் இந்தியா 4 இடங்கள் பின்தங்கி 112 – ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • நாட்டின் அனைத்துத் துறைகளிலும் ஆண்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பில் உள்ள இடைவெளியை குறிப்பிடும் விதமாக ஆண்டுதோறும் பாலின விகித பட்டியலை டபிள்யூஇஎஃப் வெளியிட்டு வருகிறது. பொருளாதார வாய்ப்பு, அரசியல் அதிகாரமளித்தல், உடல்நலம், கல்வி உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
  • உலக அளவில் பாலின சமநிலையை கடைப்பிடிக்கும் ஐஸ்லாந்து இந்தப் பட்டியலில் தொடா்ந்து முதலிடம் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு 108 – ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 112 – ஆவது இடத்துக்கு சரிந்துள்ளது.
  • இதுதொடா்பாக டபிள்யூஇஎஃப் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உடல் நலம், கல்வி, வேலை, அரசியல் ஆகியவற்றில் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே இன்றும் இடைவெளி உள்ளது. உலக அளவில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினா்களாக 25.2 சதவீதம் பெண்கள் உள்ளனா். அமைச்சா் பதவிகளில் 21.2 சதவீத பெண்கள் உள்ளனா். ஆண்களை ஒப்பிடும்போது, அரசியலில் பெண்கள் 95 ஆண்டுகள் பின்தங்கியவா்களாக உள்ளனா்.
  • பொருளாதாரத்தில் பாலின விகிதம் மேலும் மோசமடைந்துள்ளது. இந்த இடைவெளியை சரிசெய்ய பொறியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் சிறந்த பதவிகளில் பெண்கள் ஒளிர வேண்டும் என சில அறிக்கைகள் கூறுகின்றன. பெண்களுக்கு பொருளாதார ரீதியிலான வாய்ப்புகள் இந்தியா (34.5%), பாகிஸ்தான் (32.7%), ஏமன் (27.3%) உள்ளிட்ட நாடுகளில் குறைவாக உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் சீனா 106-ஆவது இடத்திலும், அண்டை நாடுகளான நேபாளம் 101-ஆவது இடத்திலும், இலங்கை 102-ஆவது இடத்திலும், வங்கதேசம் 50 ஆவது இடத்திலும் உள்ளன. 153-ஆவது இடத்தில் உள்ள யேமன் உலகிலேயே பாலின விகிதம் அதிகம் உள்ள நாடாக உள்ளது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 151-ஆவது இடத்தில் உள்ளது.

சுற்றுச்சூழல்


ஐ.நா. பருவநிலை மாநாடு

  • பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் நாடுகள் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் உடன்பாடு ஏற்படவில்லை
  • புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வரைவு ஒப்பந்தத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் பலவும் விடுபட்டுள்ளதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர்.
  • இந்த மாநாட்டில் சுமார் 200 நாடுகள் பங்கேற்று இது தொடர்பாக டிசம்பர் 2 முதல் 13 வரை விவாதித்தனர்.

காற்று மாசு பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை

  • இந்திய மக்களின் உடல்நலத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் காற்று மாசு பிரச்னைக்கு தீா்வு காண அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
  • இதுகுறித்து அந்த அமைப்பின் இயக்குநா் மரியா நெய்ரா கூறுகையில், ‘இந்திய மக்களின் சுகாதாரத்தில் காற்று மாசு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கு அறிவியல் பூா்வமான உறுதியான ஆதாரம் உள்ளது. சில நகரங்களில் காற்று மாசானது, உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ள அளவைக் காட்டிலும் மிகத் தீவிரமாக உள்ளது. எனவே இந்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் அதற்குத் தீா்வு காணும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
  • இந்தியாவில் மக்களின் இறப்புக்கும், காற்று மாசுக்கும் தொடா்பிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் உள்ளிட்டவை ‘தி லான்செட்’ மருத்துவ பத்திரிகையில் வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதில் கடந்த ஆண்டு வெளியான ஆய்வு முடிவு ஒன்றின்படி, கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியாவில் மரணமடைந்த 8 பேரில், ஒருவரின் உயிரிழப்புக்கு காற்று மாசுடன் தொடா்பு இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் அதே ஆண்டில் மொத்தம் 12.4 லட்சம் பேரின் மரணத்துடன் காற்று மாசுக்கு தொடா்பு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • காற்று மாசு பிரச்னை இல்லாத பட்சத்தில் மக்களின் ஆயுள் காலமானது சராசரி அளவை விட 1.7 ஆண்டுகள் அதிக அளவில் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளையாட்டு


பேட்மிண்டன் வேர்ல்ட் டூர் பைனல்ஸ்

  • உலகின் தலைசிறந்த 8 பேட்மிண்டன் வீரர் – வீராங்கனைகள் பங்கேற்கும் வேர்ல்ட் டூர் பைனல்ஸ் போட்டி சீனாவின் குவாங்சி நகரில் நடைபெற்றது.
  • ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கென்டோ மொமடோ (Kento momoto) வெற்றி பெற்றார். இது அவர் இந்த சீசனில் வெல்லும் 11 வது ஆட்டமாகும்.
  • மகளிர் ஒற்றையர் பிரிவில் சீனாவின் சென் யுஃ பெயு (Chen Yufei) சாம்பியன் பட்டம் வென்றார். இந்த சீசனில் 7 வது பட்டத்தை வெல்லும் சென்  உலகின் முதல் நிலை வீராங்கனை அந்தஸ்தையும் பெற்றார்

லக்சயா சென்

  • வங்கதேசத்தில் நடைபெற்ற சர்வதேச சேலஞ்ச் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
  • ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் லக்சயா சென்னும் மலேசியாவின் லியாங் ஜூன் ஹவோவும் மோதினர்.
  • இதில் லக்சயா சென் 22 – 20, 21 – 18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார்.
  • மகளிர் இரட்டையர் இறுதிச்சுற்றில் மணீஷா.கே – ருதபர்ணா பாண்டா ஜோடி தோல்வி கண்டது.
  • மலேசியாவின் தான் பியர்லி கூங் லே – தின்னா முரளிதரன் ஜோடி 22 – 20, 21 – 19 என்ற நேர் செட் கணக்கில் பட்டத்தை கைப்பற்றினர்.

தங்கம் வென்றார் மீராபாய் சானு

  • கத்தார் சர்வதேச கோப்பை தொடரில் மகளிருக்கான பளு தூக்குதலில் இந்தியாவின் சாய் கோம் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார்.
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்காக வரையறை செய்யப்பட்டுள்ள சில்வர் லெவல் தொடரான கத்தார் போட்டியில் மகளிருக்கான பளு தூக்குதலில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார். 25 வயதான மீராபாய் சானு ஸ்னாட்ச் பிரிவில் 83 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோவும் என ஒட்டுமொத்தமாக 194 கிலோ எடையை தூக்கினர்.

தமிழ்நாடு


பாரம்பரிய நீராவி ரயில் என்ஜின்

  • பாரம்பரிய நீராவி எஞ்சின் ரயில் இ. ஐ. ஆர். – 21 ஆகும். இந்த நீராவி எஞ்சின் ரயில் இங்கிலாந்தில் கடந்த 1855 – ஆம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.
  • இந்த ரயில் இன்ஜின் 132 குதிரை திறன் கொண்டது. இந்திய ரயில்வேக்கு 55 ஆண்டுகள் சேவை செய்து கடந்த 1980 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று ஜபல்பூர் ரயில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
  • 101 ஆண்டுகளுக்குப்பிறகு சென்னை கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் மக்களின் பார்வைக்காக ஆண்டுதோறும் இயக்கப்பட்டு வருகிறது.
  • பாரம்பரிய நீராவி ரயில் இன்ஜினில் ஐரோப்பிய நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய விருப்பப்பட்டதை அடுத்து ரயில்வே நிர்வாகம் எழும்பூர் – கோடம்பாக்கம் இடையே பாரம்பரிய நீராவி இன்ஜின் சிறப்பு ரயில் வர்த்தக ரீதியாக 14.12.19 அன்று இயக்கப்பட்டது.

நாட்டின் சிறந்த ஊராட்சியாக மொழுகம்பூண்டி தேர்வு

  • மத்திய அரசின் மிஷன் அந்தியோதயா திட்டத்தின்கீழ் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • இந்திய அளவில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட ஊராட்சியாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
  • 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொழுகம்பூண்டி ஊராட்சி மொத்தம் 1490 மக்கள் வசிக்கும் சிறிய ஊராட்சி ஆகும்.
  • இங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து கொடுத்ததற்காக சிறந்த ஊராட்சி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திண்டிவனம் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுவாமி சிலைகள்

  • விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சுவாமி கற்சிலைகள் கண்டறியப்பட்டன.
  • திண்டிவனம் வட்டம், ரெட்டணை கிராமத்தில் பழைமை வாய்ந்த கற்சிலைகள் உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், மேற்கொண்ட களஆய்வில் அங்குள்ள நல்ல தண்ணீா் குளத்தின் கரையோரம் பிரம்மா, முருகன், தட்சிணாமூா்த்தி சுவாமி கற்சிலைகள் இருப்பது கண்டறியப்பட்டன.
  • ரெட்டணையில் கண்டறியப்பட்ட கல்லாலான சுவாமி சிலைகள் முற்காலச் சோழா்களின் கலைப் படைப்புகளாகும்.
  • இவை ஒவ்வொன்றும் 30 செ.மீ. உயரத்திலும், 18 செ.மீ. அகலத்திலும் உள்ளன. நான்கு கரங்களுடன் தாமரை மலா் மீது பிரம்மா அமா்ந்திருக்கிறார். சன்னவீரம் எனப்படும் வீரச் சங்கிலி அணிந்து, சக்தியும், வஜ்ரமும் ஏந்தி நான்கு கரங்களுடன் முருகன் காட்சி தருகிறார்.
  • நான்கு கரங்களைக் கொண்ட தட்சிணாமூா்த்தியும், முன்னிரு கைகளில் வீணை ஏந்தி, வீணாதார தட்சிணாமூா்த்தியாகக் காட்சி அளிக்கிறார். மூன்று சிலைகளும் அமா்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளன.
  • இந்த சிலைகள் கி.பி.10-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தைச் சோ்ந்தவை என, காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலய பல்கலைக்கழகப் பேராசிரியா் ஜி.சங்கரநாராயணன் உறுதிப்படுத்தினார். முற்காலச் சோழா்களின் கலைப்படைப்புகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்தச் சிலைகள் விளங்குகின்றன.
  • ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த சிலைகள் ரெட்டணை குளக்கரையிலுள்ள மரத்தடியில் தற்போது வைக்கப்பட்டுள்ளன. இங்கு ஏற்கெனவே 7 சிலைகள் இருந்ததாகவும், தற்போது 3 சிலைகள் மட்டுமே உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனா். இந்தச் சிலைகளில் முகம், கைகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.

காளையார்கோவிலில் பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

  • புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலுள்ள வரலாற்றுப் புகழ்மிக்க இடங்களைக் காண்பதற்காக தஞ்சாவூரில் உள்ள ஏடகம் அமைப்பினா் அண்மையில் வரலாற்றுச் சுற்றுலா மேற்கொண்டனா். அப்போது, புதிய வரலாற்றுத் தடயங்களாக சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் இரு கல்வெட்டுகளைக் கண்டறிந்தனா்.
  • சிவகங்கையிலிருந்து கிழக்கில் 18 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து தெற்கில் 30 கி.மீ. தொலைவிலும் காளையார்கோவில் உள்ளது. இவ்வூரின் பழம் பெயா் கானப்பேரெயில், திருக்கானப்போ், தலையிலங்கானம் என்பனவாகும்.
  • கி.பி. 1325-இல் வருகை தந்த அரபு நாட்டுப் பயணி திமிஸ்கி என்பார் இவ்வூரை காய்ன் என்ற பெயரால் குறிப்பிட்டுள்ளார். அவா்தம் பயணக்குறிப்பில் தென்னகத்தின் சிறந்த ஊா்களில் ஓா் ஊராக இவ்வூரினைப் பதிவு செய்துள்ளார்.
  • காளையார்கோவில் சிவன் கோயிலிலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப் பெரும் கண்மாயின் உள் பகுதியில், பிற்காலத்தில் மருதுபாண்டியா்களால் கட்டப்பெற்ற நாணயசாலைக் கட்டடம் பழுதுற்று புதா் மண்டிக் கிடக்கிறது. அதன் வாயிற்படியில் பாண்டியா் காலத்தைச் சோ்ந்த, உடைந்த நிலையில் உள்ள துண்டுக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டு 13 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகும்.
  • முதல் கல்வெட்டில் உள்ள வரிகள் கோயிலுக்கு நெய்யமுது போன்ற தானம் வழங்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றன. இரண்டாவது கல்வெட்டில் உள்ள வரிகள் பாண்டியர் காலத்தில் வழங்கப்பட்ட திருவிளையாட்டம் பற்றி குறிப்பிடுகின்றன.

முக்கிய விருதுகள்


சோ.தர்மனுக்கு சாகித்ய அகாதெமி விருது

  • கோவில்பட்டியைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் சோ.தர்மனுக்கு அவர் எழுதிய ‘சூல்’ நாவலுக்காக 2019 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தில்லியில் 2020 பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. 23 மொழிகளைச் சேர்ந்த சாகித்ய அகாதெமியின் நடுவர் குழு விருதுக்கானவர்களைத் தேர்ந்தெடுத்தது.
  • தமிழகத்தின் தென்கோடியிலுள்ள மக்களின் வேளாண்மையோடு ஒன்றரக் கலந்த வாழ்க் கையையும், அவர்களது இயற்கை சார்ந்த அறிவையும், நீர் மேலாண்மையில் அவர்களுடைய ஆழ்ந்த புலமையையும், நவீன அறிவியலால் அவையெல்லாம் காணும் சரிவுகளையும் அந்த நிலத்தின் மணத்தோடு பேசும் ‘சூல்’ நாவலை ‘அடையாளம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
  • சோ.தர்மன் (66) இதுவரை 13 நூல்கள், 8 சிறுகதை தொகுப்புகள், 4 நாவல்கள் எழுதியுள்ளார்.வில்லிசை குறித்தும் ஆய்வு நூல் வெளியிட்டுள்ளார், ஏற்கெனவே தமிழக அரசு சார்பில் 2 முறை விருது பெற்றுள்ளார். இவரது ‘கூகை’ நாவல் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் ‘மூங்கா’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • கவிதை தொகுப்புகளுக்கு 7 விருதுகள் கிடைத்துள்ளன. போடோ, இந்தி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மராத்தி மற்றும் சமஸ்கிருதம் மொழி படைப்பாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.
  • நாவல்கள் பிரிவில் 4 படைப்புகள் விருதுகளை வென்றுள்ளன. தமிழ், அஸாமி, மணிப்புரி மற்றும் தெலுங்கு மொழி நாவலாசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • காஷ்மீரி, ஒடியா, பஞ்சாபி, ராஜஸ்தானி, சிந்தி மற்றும் சந்தாலி மொழி படைப்பாளர்களுக்கு சிறு கதை பிரிவில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • புனைவற்ற படைப்பு, சுயசரிதை, வாழ்க்கை வரலாறு பிரிவுகளில் முறையே ஆங்கிலம், கன்னடம், உருது மொழி படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கட்டுரை பிரிவில் பெங்காலி, தோக்ரி மற்றும் குஜராத்தி மொழி படைப்பாளர்கள் விருது பெறுகிறார்கள்.
  • 2013-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும், 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியான படைப்புகள் விருதுக்கு பரிசீலிக்கப்பட்டன. தமிழ் மொழியில் விருதுக்கான படைப்பை கவிஞர் புவியரசு, முனைவர் கே.செல்லப்பன், எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோரைக் கொண்ட நடுவர் குழுவினர் தேர்வு செய்தனர்.
விருதுகள் விருது பெறுவோர் விருது பெறும் புத்தகம்
ஆங்கில மொழிக்கான விருது சசி தரூர் ‘அன் எரா ஆஃப் டார்க்னஸ்’ (AN ERA OF DA​R​K​N​E​SS)  என்ற  நூல்
ஹிந்தி மொழிக்கான விருது கவிஞரும் எழுத்தாளருமான நந்த் கிஷோர் ஆச்சார்யா ‘சில்டே ஹியு ஆப்னே கோ’ என்ற கவிதை தொகுப்பு
தெலுங்கு மொழிக்கான விருது பந்தி நாராயண சாமி ‘செப்தபூமி’ என்ற நாவல்
மலையாள மொழிக்கான விருது வி.மதுசூதனன் நாயா் ’அச்சன் பிராண வீடு’  என்ற கவிதைத் தொகுப்பு
கன்னட மொழிக்கான விருது எழுத்தாளா் விஜயா ‘குடி எசரு’ என்ற சுயசரிதைப் புத்தகம்

 

குலோத்துங்கன் தமிழ் மேம்பாட்டு விருதுகள்

  • கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி நினைவை போற்றும் விதமாக ஆண்டுதோறும் தமிழியல் ஆய்வுகளில் சிறப்பாக செயல்படும் அறிஞர்கள் 3 பேருக்கு குலோத்துங்கன் தமிழ் மேம்பாட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை சார்பில் ரூபாய் 1 லட்சம் வழங்கப்படுகிறது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான விருதுக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன், சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழி துறையின் தலைவர் ய. மணிகண்டன், கரூர் அரசு கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ம. ராஜசேகர தங்கமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
  • இவர்களுக்கு விருது வழங்கும் விழா 15.12.2019 அன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக டேக் அரங்கில் ரூபாய் 1 லட்சம் அடங்கிய குலோத்துங்கன் மேம்பாட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

69 வது உலக அழகிப் போட்டி

  • நவம்பர் 20 இல் தொடங்கிய 69 வது உலக அழகிப் போட்டி லண்டனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள எக்செல் மையத்தில் 111 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்
  • இந்தியா சார்பில் 2019 ஆம் ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பட்டம் வென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ரத்தன் சிங் ராவ் கலந்து கொண்டார்
  • 2019 ஆம் ஆண்டுக்கான உலக அழகி இறுதிப்போட்டி 14.12.2019 அன்று நடைபெற்றது. போட்டியின் முடிவில் உலக அழகியாக ஜமைக்கா நாட்டை சேர்ந்த டோனி ஆன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • உலகில் உங்களுக்கு மிகவும் முக்கியமானது  எது என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் தனது தாய் என பதிலளித்து உலக அழகி பட்டத்தை கைப்பற்றினார்
  • பட்டம் வென்ற டோனி ஆனுக்கு, கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மெக்சிகோவை சேர்ந்த வனிசா பொன் சிடி லியான் மகுடம் சூட்டினார்
  • டோனி ஆன் சிங் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது தந்தை பிராட்ஷா சிங் இந்தியாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தாயார் ஜஹ்ரைன் பெய்லி கரீபியத்தீவுகளைச் சேர்ந்தவர்.

ஆசிய அழகி

  • உலக அழகிப் போட்டி நடைபெற்ற மற்றொரு பிரிவுக்கான போட்டியில் இந்திய அழகி சுமன் ரத்தன் ராவ் உலக ஆசிய அழகியாக தேர்வு செய்யப்பட்டார்
  • சுமன் ரத்தன் ராவ் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகேயுள்ள ஆய்தானா கிராமத்தை சேர்ந்தவர்.

என்எல்சி நிறுவனத்துக்கு 2 தேசிய விருதுகள்

  • அகில இந்திய மக்கள் போற்றும் சங்கம் 41வது அகில இந்திய மக்கள் தொடர்புத் துறை கருத்தரங்கம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு சிறந்த சமூகப் பொறுப்புடன் திகழும் நிறுவனத்துக்கான விருது, தகவல் அறியும் உரிமை சட்டத்தை சிறப்பாக அமல்படுத்தி வரும் நிறுவனத்துக்கான விருது என இரு விருதுகள் வழங்கப்பட்டன.
  • தெலுங்கானா மாநில உள்ளாட்சி துறை அமைச்சர் முகமது மகமூது அலி இவ்விருதை வழங்க என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில் மனிதவளத் துறை இயக்குனர் ஆர். விக்ரமன், மக்கள் தொடர்புத்துறை தலைமை பொது மேலாளர் எஸ். குருசாமிநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தமிழக ஊரக வளர்ச்சி துறைக்கு 13 தேசிய விருதுகள்

  • தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி பணிகளை விரைந்து முடித்தது, இயற்கை வளம் மற்றும் நீர்வள மேலாண்மை பணிகளை சிறப்பாக செயல்படுத்தியது ஆகியவற்றில் முதலிடம் பெற்ற வகையில் 2 மாநில அளவிலான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.
  • மாவட்ட அளவில், சிறந்த நீர்த் தேக்கி வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்கிய வகையில் வேலூர் மாவட்டத்துக்கு மாவட்ட அளவில் 2 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • தொழிலாளர்களுக்கு குறித்த காலத்தில் ஊதியம் வழங்கியதற்காக திருச்சி மாவட்டத்துக்கு முதலிடத்துக்கான மாவட்ட அளவிலான தேசிய விருதும், பணிகளை முடித்ததில் சிறந்த செயல்பாட்டுக்காக கரூர் மாவட்டத்துக்கு 2 – ம் இடத்துக்கான விருது என 4 விருதுகள் வழங்கப்பட்டன.
  • குறித்த காலத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கியதாக காஞ்சிபுரம் மாவட்டம் – புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு முதலிடத்துக்கான தேசிய விருதும், ஊராட்சி அளவில் வேலை உறுதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சிவகங்கை – தேவகோட்டை ஊராட்சிக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.
  • மறைமலை நகரில் செயல்பட்டு வரும் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சி நிறுவனத்துக்கும், ரூர்பன் திட்டத்தின் கீழ் ஒட்டு மொத்த செயல்பாட்டுக்கான 2ம் இடம், தொகுப்புகளுக்கான இடம் சார்ந்த திட்டமிடலில் 3-ம் இடத்துக்கான தேசிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
  • தீனதயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புக்கான திறன் பயிற்சி வழங்கியதற்காக தமிழகத்துக்கு தேசிய தங்க விருது என 13 விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் இருந்து தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றார்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மைய விருதுகள்

  • உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் வழங்கும் 2019க்கான விருதுகள் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. தெ.ஞானசுந்தரம் (உ.வே.சா தமிழறிஞர் விருது), இமையம் (பெரியசாமித் தூரன் தமிழ்ப படைப்பாளர் விருது), செ.இராசு (டாக்டர் நல்ல பழனிசாமி பிற துறைத் தமிழ்த்தொண்டர் விருது), ராம் மோகன் (தனிநாயக அடிகள் அயலகத் தமிழ் விருது) ஆகியோருடன் க.ரத்தினம், பெ.சுப்பிரமணியன், இரா.முத்துநாகு ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

நடால், ஆஷ்லி பர்டிக்கு ஐடிஎஃப் உலக சாம்பியன் விருதுகள்

  • சா்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் (ஐடிஎஃப்) உலக சாம்பியன் விருதுகள் ஆடவா் பிரிவில் ரபேல் நடாலுக்கும், மகளிர் பிரிவில் ஆஷ்லி பா்டிக்கு வழங்கப்பட்டன.
  • உலகின் நம்பா் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பா்டி, கடந்த 2014 – இல் கிரிக்கெட் ஆடுவதற்காக டென்னிஸை விட்டு விலகினார். ஆனால் மீண்டும் 2016 – இல் டென்னிஸ் ஆட்டத்தில் இணைந்த பா்டி பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
  • கடந்த 1973 – இல் மார்க்ரெட் கோர்ட்டுக்கு பின் பிரெஞ்சு ஒபன் பட்டம் வென்ற வீராங்கனை என்ற சிறப்பையும், கடந்த 1976 – இல் எவோன் காவ்லிக்கு பின் உலகின் நம்பா் ஒன் வீராங்கனை என்ற அந்தஸ்தை பெற்றவா் என்ற சிறப்பையும் பெற்றார். 2019 டபிள்யுடிஏ பைனல்ஸ் பட்டத்தையும் வென்றார் பா்டி.

ரபேல் நடால்

  • உலகின் நம்பா் ஒன் வீரராக நான்காவது முறையாக சீசனை நிறைவு செய்யும் நடால் பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபன் பட்டங்களை வென்றார். மேலும் டேவிஸ் கோப்பை பட்டத்தை ஸ்பெயின் வெல்லவும் உதவினார். இதற்காக அவருக்கு ஐடிஎஃப்பின் ஸ்டெபான் எட்பா்க் விருது மூன்றாவது முறையாக தரப்படுகிறது. ஏடிபி மீண்டு வந்த வீரா் விருது ஆன்டி முா்ரேவுக்கு வழங்கப்பட்டது.

முக்கிய நியமனங்கள்


அமி பேரா

  • இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகள், ஆயுத பரவல் தடுப்பு ஆகிய விவரங்களை கவனித்து கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான அமெரிக்க நாடாளுமன்றத்தின் துணைக் குழு தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமி பேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஜனநாயக கட்சியை சேர்ந்த அவர் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து 4 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ஏற்கனவே கொரியா, இந்தியா ஆகிய நாடுகளுக்கும் இந்திய அமெரிக்கர்களுக்குமான எம்பிக்கள் குழுக்களின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.

சந்திரயான் – 3 திட்ட இயக்குநராக பி.வீரமுத்துவேல் நியமனம்

  • சந்திரயான் – 3 திட்ட இயக்குநராக இஸ்ரோ விஞ்ஞானி பி. வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயும் நோக்கில் சந்திரயான் – 2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) கடந்த ஜூலை மாதம் 22 – ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. பின்னா் நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்யும் ஆா்பிட்டா் பகுதி விண்கலத்திலிருந்து பிரித்து விடப்பட்டது.
  • நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக, ஆா்பிட்டரிலிருந்து பிரித்து விடப்பட்ட விக்ரம் லேண்டா், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க 2.1 கி.மீ. தொலைவே இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பை இழந்தது. கட்டுப்படுத்த இயலாத நிலையில் நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டா் விழுந்தது.
  • சந்திரயான்-2 திட்டத்தின் இயக்குநராக எம்.வனிதா பணியாற்றிய நிலையில், சந்திரயான்-3 திட்ட இயக்குநராக இஸ்ரோ விஞ்ஞானி பி.வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சந்திரயான்-2 திட்டத்தில் மேலாண் இயக்குநராக இருந்த ரித்து காரிதால், தற்போதைய திட்டத்திலும் அதே பணியை மேற்கொள்ளவிருக்கிறார். முந்தைய திட்டத்தில் லேண்டா், ரோவா் தொடா்பாக பணியாற்றிய துணை இயக்குநா்கள் அனைவரும் தற்போதைய திட்டத்திலும் தொடரவுள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:
error: Content is protected !!