December 1st Week CA – 2019

Share:

உலகம்


ஸ்வீடன் மன்னர் கார்ல் 16-ம் குஸ்டாஃப் இந்தியா வருகை

 • ஸ்வீடன் மன்னர் கார்ல் 16-ம் குஸ்டாஃப், அரசி சில்வியா ஆகியோர் இந்தியாவில் 5 நாள் அரசுமுறைப் பயணமாக 02.12.19 அன்று டெல்லி வந்தனர்.
 • அரச தம்பதியரை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடியுடன் அரச தம்பதியர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு நாடுகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
 • இந்தியா – ஸ்வீடன் இடையிலான வர்த்தக உறவு கடந்த சில ஆண்டுகளாக மேம்பட்டு வருகிறது. கடந்த 2018-ல் இரு தரப்பு வர்த்தக மதிப்பு 337 கோடி டாலராக இருந்தது.
 • ஸ்வீடன் மன்னருடன் அந்நாட்டு உயர்நிலை வர்ததக குழு இந்தியா வந்துள்ளது. துருவப் பகுதி ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி, கடல்சார் விவகாரங்கள் ஆகிய துறைகளில் இந்தியா-ஸ்வீடன் இடையே 02.12.19 இல் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மாலத்தீவின் வளா்ச்சிக்கு இந்தியா உதவுமென பிரதமர் மோடி உறுதி

 • மாலத்தீவின் கடற்படையை வலுப்படுத்துவதற்காக இந்தியா சார்பில் ரோந்து கப்பல் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், இந்திய அரசின் உதவியுடன் மாலத்தீவில் செயல்படுத்தப்படவிருக்கும் முக்கிய வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடியும், மாலத்தீவு அதிபா் இப்ராஹிம் முகமது சோலியும் இணைந்து காணொளி காட்சி வழியாக தொடக்கி வைத்தனா்.
 • தில்லியில் 04.12.19 நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி மூலம் அந்நாட்டு அதிகாரிகளுடன் பிரதமா் மோடி உரையாற்றினார்.
 • இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டுவது ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது முக்கியம். எதிர்காலத்தில் இந்தியாவின் உதவியுடன் மாலத்தீவில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. மாலத்தீவின் வளா்ச்சிக்கு உதவுவதில் இந்தியா எப்போதும் உறுதியாக உள்ளது என்றார் மோடி.

நேட்டோ உச்சி மாநாடு

 • நேட்டோ நாடுகளின் கூட்டணி அமைந்து 70 ஆண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடும் நிகழ்ச்சி லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் டிசம்பர் 3ல் நடைபெற்றது. இதையொட்டி 2 நாள் உச்சி மாநாடு நடைபெற்றது.
 • இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நெதர்லாந்து தலைவர் மார்க் ரூட் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
 • இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சோவியத் யூனியனின் வல்லாதிக்கத்தைத் தடுத்து நிறுத்தவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பு நேட்டோ.
 • உருவாக்கப்பட்ட நாள் – 04 ஏப்ரல்  1949
 • மொத்த உறுப்பினர்கள் – 29 நாடுகள்

இந்தியா


இ-சிகரெட் தடை மசோதா

 • இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் 02.12.19 அன்று நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இ-சிகரெட் தடை மசோதா நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.
 • இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பா் மாதம் பிறப்பித்தது. இப்போது, அவசர சட்டத்துக்கு மாற்றாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
 • இதன்படி, இந்தியாவில் இ-சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, விநியோகம், விற்பனை, இ-சிகரெட் சார்ந்த புகைப் பிடிக்கும் கருவிகள் தொடா்பான விளம்பரங்கள் ஆகிவற்றை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
 • இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு முதல் முறை ரூ.1 லட்சம் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக அதே குற்றத்தைச் செய்தால் 3 ஆண்டு சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

சிறப்பு பாதுகாப்புப்பபடை (எஸ்.பி.ஜி) சட்டத் திருத்த மசோதா

 • பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமருக்கு மட்டும் சிறப்பு பாதுகாப்புப் படை (Special Protection Guard – SPG) பாதுகாப்பு அளிக்க வகை செய்யும் எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையிலும் நிறைவேறியது.
 • எஸ்.பி.ஜி அமைப்பானது 1985 ஆம் ஆண்டு  உருவாக்கப்பட்டது
 • இதன் தற்போதைய தலைவர் அனில் குமார் சின்கா, ஐபிஎஸ்

டாமன்- டையூ, தாத்ரா- நாகா் ஹவேலி இணைப்பு மசோதா

 • குஜராத்துக்கு அருகே அமைந்துள்ள டாமன்-டையூ மற்றும் தாத்ரா-நாகா் ஹவேலி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களை ஒன்றாக இணைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் 3.12.19ல் நிறைவேறியது.
 • ‘தாத்ரா-நாகா் ஹவேலி மற்றும் டாமன்-டையூ (யூனியன் பிரதேசங்கள் இணைப்பு) மசோதா, 2019’ மக்களவையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கடுத்த நாளே மக்களவையில் அந்த மசோதா நிறைவேறியது.
 • புதிய யூனியன் பிரதேசம், ‘தாத்ரா-நாகா் ஹவேலி மற்றும் டாமன்-டையூ’ என்று அழைக்கப்படவுள்ளது. புதிய யூனியன் பிரதேசத்துக்கான நீதிமன்றமாக மும்பை உயா்நீதிமன்றம் செயல்படும்.
 • ஜம்மு-காஷ்மீா் மாநிலம், ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிரிக்கப்பட்டது. அவை கடந்த மாதம் 31-ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்தன. அதன் மூலம் யூனியன் பிரதேசங்களின் மொத்த எண்ணிக்கை 9-ஆக உயா்ந்தது.
 • தற்போது, தாத்ரா-நாகா் ஹவேலி, டாமன்-டையூ யூனியன் பிரதேசங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதால், யூனியன் பிரதேசங்களின் மொத்த எண்ணிக்கை 8-ஆகக் குறைந்துள்ளது.
 • தாத்ரா-நாகா் ஹவேலி, டாமன்-டையூ ஆகிய பகுதிகள், நீண்ட காலமாக போர்ச்சுக்கீசியா்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த 1961-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 10-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாக தாத்ரா-நாகா் ஹவேலி பகுதி யூனியன் பிரதேசமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
 • 12-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் டாமன்-டையூ பகுதி, யூனியன் பிரதேசமாக இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.

ஆராய்ச்சி திட்டத்தில் தேர்வான கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு

 • நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ‘இந்தியாவின் வளரும் பொருளாதார ஒழுங்கு ஆராய்ச்சி திட்டம்’ (ஸ்ட்ரெய்டு) என்ற திட்டத்தை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கடந்த ஜூலையில் அறிமுகம் செய்தது.
 • அதன்படி நடப்பாண்டு ஸ்ட்ரெய்டு திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 16 பல்கலைக்கழகங்கள் மற்றும் 19 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 • இதில் தமிழகத்தில் இருந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக் கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன,
 • வ.உ.சி. கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 • தேர்வு செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வசதியாக நிதியுதவி வழங்கப்படும். இத்தகவலை பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் முதல்முறையாக சந்தாளி மொழி

 • மாநிலங்களவையில் 06.12.19 முதல்முறையாக சந்தாளி மொழி ஒலித்தது. ஒடிஸாவைச் சோ்ந்த பிஜு ஜனதா தளம் உறுப்பினா் சரோஜினி ஹேம்பிராம் சந்தாளி மொழியில் பேசினார்.
 • சந்தாளி என்பது ஆஸ்திரோ – ஆசிய கூட்டு மொழியாகும். இது முண்டா மொழிக் குடும்பத்தைச் சோ்ந்தது. அஸ்ஸாம், பிகார், ஒடிஸா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 7.6 லட்சம் பேரால் பேசப்படும் மொழியாகும். அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழியாகவும் உள்ளது.
 • சந்தாளி மொழியில் சரோஜினி பேசியதை வரவேற்ற மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, ‘தனது பிராந்திய மொழியை உறுப்பினா் பயன்படுத்துவது பாராட்டுக்குரியது. சந்தாளி மொழி மாநிலங்களவையில் முதல்முறையாக ஒலிக்கிறது’ என்றார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்


பிருத்வி-2 ஏவுகணையின் இரவு நேர சோதனை 

 • அணுஆயுதங்களுடன் நிலத்திலிருந்து புறப்பட்டு நிலத்திலுள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்த பிருத்வி-2 ஏவுகணை, கடந்த மாதம் 20-ஆம் தேதி இரவிலும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டிருந்தது.
 • இந்நிலையில், ஒடிஸா மாநிலம், சந்திப்பூரில் உள்ள சோதனை தளத்தில் பிருத்வி-2 ஏவுகணையின் இரவு நேர சோதனை 03.12.19 மேற்கொள்ளப்பட்டது.
 • 500 கிலோ முதல் 1,000 கிலோ வரையிலான அணுஆயுதங்களுடன் 350 கி.மீ. வரை பாயும் திறன்கொண்ட இந்த ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை பிருத்வி-2 ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்தச் சோதனையை, ராணுவ உயரதிகாரிகளும், பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகளும் கூட்டாக மேற்கொண்டனா்.

நிலவில் விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டுபிடித்தது நாசா

 • நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜூலை 22ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது.
 • நிலவின் தென்துருவத்தில் இறங்கும் விக்ரம் லேண்டர் அதில் இருந்து வெளியே வந்து நிலவின் தரைப்பகுதியில் நகர்ந்து சென்று ஆய்வு செய்யும் பிரக்யான் என்ற ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலம் ஒன்றரை மாத பயணத்துக்குப் பிறகு செப்டம்பரில் நிலவை நெருங்கியது.
 • அதில் இருந்து ஆர்பிட்டர் கலம் வெற்றிகரமாக பிரிந்தது. ஆனால், விக்ரம் லேண்டர் கலம், நிலவில் திட்டமிட்டபடி செப்டம்பர் 7ம் தேதி தரையிறங்கவில்லை.
 • இது குறித்து ஆய்வு செய்ய இஸ்ரோவின் திரவ உந்துசக்தி எரிபொருள் ஆய்வு மைய இயக்குநர் வி.நாராயணன் தலைமையில் விஞ்ஞானிகள், அறிவியல் அறிஞர்கள் அடங்கிய தேசிய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது.
 • கடைசி நேரத்தில் லேண்டர் கட்டுப்பாட்டு கருவியின் மென்பொருளில் ஏற்பட்ட கோளாறால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லேண்டர் கலம் திட்டமிட்டதைவிட வேகமாக சென்று தரையிறங்கியுள்ளது. அதில் உள்ள கருவிகள் சேதமடைந்ததால் தகவல் தொடர்பை மீட்க முடியவில்லை என்று அந்த குழு தெரிவித்தது.
 • நிலவின் தரைப்பகுதியை எல்ஆர்ஓ விண்கலம் புகைப்படம் எடுத்து தொடர்ந்து அனுப்பி வருகிறது. அதன் அடிப்படையில் லேண்டரை கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது. எல்ஆர்ஓ விண்கலம் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு, நாசாவின் இணையதளத்தில் செப்டம்பர் 26ம் தேதி வெளியிடப்பட்டது.
 • அறிவியல் அறிஞர்கள், விண்வெளி ஆர்வலர்கள் உட்பட பலரும் இதை பதிவிறக்கம் செய்து, விண்கலம் விழுந்த இடம் குறித்து தகவல் கிடைக்கிறதா என்று ஆராய்ந்தனர். அதில் சண்முக சுப்ரமணியன் என்பவர் லேண்டரின் சிதறிய பாகங்கள் இருப்பதை அடையாளம் கண்டு நாசா குழுவுக்கு தகவல் கொடுத்தார்.
 • அதன் அடிப்படையில், லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பும், வேகமாக தரையில் மோதிய பிறகும் நிலவின் தரைப்பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களை புகைப்படங்கள் உதவியுடன் விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தது.
 • முதல்கட்ட புகைப்படங்களில் வெளிச்சம் குறைவாக இருந்ததால் அடையாளம் காண்பதில் சிரமம் இருந்தது. அக்டோபர் 14, 15, நவம்பர் 11 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்ட அடுத்தகட்ட புகைப்படங்கள் மூலம் லேண்டர் இருப்பிடம், அதன் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன.
 • சண்முக சுப்ரமணியன் குறிப்பிட்டபடி, லேண்டர் விழுந்த இடத்தில் இருந்து வடமேற்கில் 750 மீட்டர் (முக்கால் கி.மீ) தூரம் தள்ளி அதன் உடைந்த பாகங்கள் கிடந்தது தெரிய வந்தது. இவ்வாறு நாசா தெரிவித்துள்ளது.

பொருளாதாரம்


15-ஆவது நிதிக் குழு அறிக்கை

 • 2020 – 21 ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் 15-ஆவது நிதிக் குழுவின் தலைவா் என்.கே. சிங் 05.12.19 அன்று சமா்ப்பித்தார்.
 • அரசமைப்புச் சட்டத்தின் 280-ஆவது பிரிவின்படி, நிதி தொடா்பான பரிந்துரைகள் வழங்குவதற்காகவும், வரி வருவாயை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கிடையே பங்கிட்டு கொள்வது தொடா்பான முடிவுகளை மேற்கொள்வதற்காகவும் நிதிக் குழு அமைக்கப்படுகிறது.
 • 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான பரிந்துரைகளை வழங்குவதற்காக 15-ஆவது நிதிக்குழுவை கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பா் 27-ஆம் தேதி குடியரசுத் தலைவா் அமைத்தார்.
 • இந்தக் குழுவின் தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்.கே. சிங் நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவின் பதவிக்காலம் கடந்த அக்டோபா் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், நிதித் துறை சீா்திருத்தம் தொடா்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக 2020ம் ஆண்டு அக்டோபா் 30-ஆம் தேதி வரை இந்த குழுவின் பதவிக்காலத்தை மத்திய அரசு நீட்டித்தது.

சுற்றுச்சூழல்


நாட்டில் புலிகளின் எண்ணிக்கை 2,976

 • புலிகளின் எண்ணிக்கை குறித்து மக்களவையில் 02.12.19 கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் புலிகளின் எண்ணிக்கை 2,226 ஆக இருந்தது. தற்போது 750 அதிகரித்து 2, 976-ஆக உள்ளது.
 • அதைத் தொடா்ந்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ‘வடகிழக்கு மாநிலங்களில் 75 சதவீதம் வனப்பகுதி உள்ளது. ஆனால் அங்கு காடுகள் அழிக்கப்பட்டு விவசாயம் மேற்கொள்ளும் பிரச்சனை அதிகரித்து வருகிறது.
 • நாட்டில் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு வருவது குறித்து இந்த மாத இறுதியில் அறிக்கை வெளியாகவுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வனப்பகுதியை காப்பாற்றும் பொருட்டு 5 ஆண்டு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
 • நாட்டின் வனப்பகுதி கடந்த 2007-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 2017-இல் 17,384 சதுர கி.மீ அதிகரித்துள்ளது. எனினும், கடந்த 2 ஆண்டுகளில்தான் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
 • மேற்குவங்கம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்கள் வனப்பகுதிகளின் அளவை அதிகரித்துள்ளன. நாட்டின் மொத்த வனப்பகுதி அளவு 7.08 லட்சம் சதுர கி.மீ ஆக உள்ளது. இது நாட்டின் பரப்பளவில் 21.54 சதவீதமாக உள்ளது’ என்றார்.

2020-களில் இதுவரை இல்லாத வெப்பம்

 • வரும் 2020-ஆம் ஆண்டுடன் நிறைவடையவிருக்கும் பதின்ம ஆண்டில்தான் புவியின் வெப்பம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
 • இதுகுறித்து அந்த அமைப்பின் வானியல் பிரிவான ‘உலக வானிலை அமைப்பு’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததைவிட உலகின் வெப்பநிலை இந்த ஆண்டில் இதுவரை 1.1 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக உள்ளது.
 • இதன் மூலம், இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே அதிக புவி வெப்பம் கொண்ட 3 ஆண்டுகளில் ஒன்றாக 2019-ஆம் ஆண்டு ஆகியுள்ளது.
 • பெட்ரோலியப் பொருள்களை எரிப்பது, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது, பயிர் வளா்ப்பு, சரக்குப் போக்குவரத்து ஆகிய செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கார்பன் பொருள்கள் இந்த ஆண்டு கலக்கவிருக்கின்றன.
 • இதன் காரணமாக, புவியின் வெப்பம் மேலும் அதிகரிக்கும். எனவே, பதின்ம ஆண்டுகளிலேயே 2020-ஆம் ஆண்டில் முடியும் பதின்ம ஆண்டில்தான் புவியின் வெப்பம் மிக அதிகமாக இருக்கவுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 5 – உலக மண்வள தினம் 

 • 2050ம் ஆண்டுக்குள் விவசாயத்துக்குப் பயன்படும் மேல்பட்ட மண்ணில் 90 சதவீதம் இயற்கைச் சீற்றத்தாலும், செயற்கை வேளாண் அணுகுமுறைகளாலும் சுரண்டப்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா.வின் உலக உணவு நிறுவனம் எச்சரித்துள்ளது.
 • மண் அரிப்பைத் தடுத்து நம் எதிர்காலத்தை சேமிப்போம் என்ற கோட்பாட்டுடன் இந்த ஆண்டு உலக மண்வள தின விழா கொண்டாட அறிவுறுத்தி உள்ளது.
 • அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம் மண். பயிர்கள் வளர மண்ணில் அங்ககச் சத்து அதிகமாக இருக்க வேண்டும். அதில் கரிமச்சத்து, தழைச்சத்து 24:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.
 • அதிக அளவில் ரசாயன உரம் பயன்பாட்டால் மண்ணில் கரிம – தழைச்சத்தின் விகிதம் 10:04 எனக் குறைந்துள்ளது. ஒரு சதுர அடி மண்ணில் இருக்க வேண்டிய 5 கோடிக்கும் அதிகமான நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.
 • தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்ட அளவை தாண்டிய உரங்களையும், பூச்சி மருந்துகளையும் பயன்படுத்துவதால் மண் மலடாகிறது. எனவே, மண்ணைக் காக்க வேண்டியது அவசியம் என சர்வதேச ஒருங்கிணைந்த மண்ணியல் ஒன்றியம், ஐ.நா.வின் உலக உணவு நிறுவனத்திடம் 2002ல் வலியுறுத்தியது.
 • உலக மண் வளதினம் கொண்டாடுவதன் அவசியத்தையும், மண்ணை பாதுகாக்கும் முயற்சியை முதன்முதலில் எடுத்தவரான தாய்லாந்து மன்னர் பூமிபோள் அதுல்யதேஜின் நினைவாக, அவரது பிறந்த நாளான டிசம்பர் 5ம் தேதியை உலக மண்வள தின விழாவாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தியிருக்கிறது.
 • அதன்படி 2014ம் ஆண்டு முதல் உலக மண்வள தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 2019 ஆம் ஆண்டு மண் அரிப்பை தடுத்து நம் எதிர்காலத்தை சேமிப்போம் என்ற கோட்பாட்டுடன் மண்வள தினம் கொண்டாடப்படுகிறது.

தமிழகம்


ஆசிய வங்கியுடன் ஒப்பந்தம்

 • தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கிழக்கு கடற்கரை பொருளாதார மண்டலத்தில் ஒரு பகுதியாக சென்னை கன்னியாகுமரி தொழிலியல் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு ஆசிய மேம்பாட்டு வங்கியுடன் இணைந்து மின் இணைப்புகளை வலுப்படுத்துவதற்காக 450 மில்லியன் டாலர் (சுமார் 3200 கோடி) கடன் ஒப்பந்தத்தில் மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் துணைச்செயலாளர் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய அலுவலக இயக்குனர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்
 • சென்னை கன்னியாகுமரி தொழிலியல் இணைப்பு திட்டத்தில் மின்சார இணைப்பை வலுப்படுத்துவதன் மூலமாக தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளை இணைக்க இயலும்
 • இத்திட்டத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உள்ளிட்ட புதிய மின்சார அமைப்புகளிடமிருந்து மின்சாரத்தை  மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் பயன்படுத்த இயலும்

 ஐந்தாவது முறையாக உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்

 • டெல்லியில் 30 11 2019 அன்று நடைபெற்ற உடல் உறுப்பு தான விழாவில் தமிழகம் உடல் உறுப்பு தானத்திற்கான முதன்மை மாநில விருதை ஐந்தாவது முறையாக பெற்றது. இந்த விருதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பெற்றுக்கொண்டார்
 • உடல் உறுப்பு தானத்தில் மிக சிறப்பாக செயல்படும் மருத்துவமனைக்கான விருதை சென்னை அரசு பொது மருத்துவமனை பெற்றது
 • நாட்டிலேயே முதல்முறையாக கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்த சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் டாக்டர்  ரமாதேவிக்கும் இந்த ஆண்டு விருது வழங்கப்பட்டது
 • நாட்டிலேயே முதல் முறையாக கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட திண்டுக்கல் நாராயணன் தனக்கு புதிதாகப் பொருத்தப்பட்ட கைகளால் இந்த விழாவின் குத்துவிளக்கை ஏற்றினார்  என்பது குறிப்பிடத்தக்கது

நாட்டமறி தேர்வு 

 • அரசு பள்ளி மாணவர்களின் வேலைவாய்ப்பு இருக்கும் உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதற்கு  உதவி செய்யும் வகையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை திறனறி தேர்வு முறையை அறிமுகப்படுத்த உள்ளது
 • நம் நாட்டில் பிளஸ் டூ படித்து விட்டு உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதற்கு மாணவர்கள் பல சிரமங்களை அனுபவிக்கின்றனர் எனவே பள்ளிகளிலேயே மாணவர்களின் திறன்களை கண்டறிய வேண்டும் என கல்வியாளர்கள் கூறி வந்தனர்
 • தற்போது இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் என்சிஇஆர்டி உதவியுடன்   டமன்னா என்ற திறனறிவுத் தேர்வு முறையை வடிவமைத்துள்ளது இதில் வாய்மொழி திறன், மொழித்திறன் என ஏழு தலைப்புகளில் கணினி வழியாக தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இத்தேர்வு முறையை மற்ற மாநிலங்களுக்கும் அறிமுகப்படுத்த  மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது
 • தமிழகத்தில் என்சிஇஆர்டி வடிவமைத்த  தேர்வு முறையில் சில மாற்றங்களை மேற்கொண்டு 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு இத்தேர்வு நடத்தப்பட உள்ளது
 • இத்தேர்வில் மொழி கணக்கு, அறிவியல் மற்றும் பொது அறிவு என பல தலைப்புகளில் ஒரு மணி நேர தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 • இத்தேர்வு நடத்துவதற்கு மாவட்ட மற்றும் வட்டார அளவில் குழுக்கள்  அமைக்கப்படும்

தொழில் வளர் மாநாடு

 • தமிழக தொழில் துறை  சார்பாக தொழில் வளர் தமிழ்நாடு என்ற பெயரில் முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு மாநாடு தமிழக முதல்வர் தலைமையில் 30.10.19 அன்று சென்னை கிண்டியில் நடைபெற்றது
 • 2 ஆயிரத்து 55 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் பதினோரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
 • ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 3 அமெரிக்க நிறுவனங்களையும், 60 கோடி மதிப்பில் 3 உயர்நிலை திறன் மேம்பாட்டு மையங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். மேலும் திறன் மேம்பாட்டு ஆய்வறிக்கை மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்களை வெளியிட்டார்
 • தமிழ்நாடு தொழில் வழிகாட்டி  நிறுவனத்தின் புதிய பெயர் மற்றும்  சின்னம் வெளியிட்டதுடன் தொழில் நிறுவனங்களுக்கான குறை தீர்க்க உதவும் “தொழில் நண்பன்” என்ற இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்

விளையாட்டு


தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

 • நேபாளத் தலைநகா் காத்மாண்டுவில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 2019 (எஸ்ஏஜி) டிசம்பா் 1-ஆம் தேதி தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 • காத்மாண்டுவின் தசரத் ரங்கசாலா மைதானத்தில் தொடக்க விழா நடைபெற்றது.
 • முதன்முறையாக பாரா கிளைடிங், கோல்ஃப், கராத்தே போன்றவை சோ்க்கப்பட்டுள்ளன. 8 ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட்டும் இடம் பெறுகிறது.
 • தெற்காசியாவைச் சோ்ந்த இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை, பூடான், மாலத்தீவுகள் உள்ளிட்ட 7 நாடுகள் இப்போட்டியில் கலந்து கொள்கின்றன.
 • 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஏற்கெனவே இந்தியாவின் அபூர்வி சந்தேலா 252.9 புள்ளிகள் குவித்து உலக சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இதை விட மெஹுலி கோஷ் 0.4 புள்ளிகள் அதிகமாக எடுத்த போதிலும் இது உலக சாதனையாக கருதப்படவில்லை. ஏனெனில் தெற்காசிய விளையாட்டு போட்டி முடிவுகளை சாதனைகள் நோக்கத்தின் அடிப்படையில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் சங்கம் அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 • ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சர்வேஷ் அனில் குஷாரே 2.21 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்ததுடன் தங்கப் பதக்கம் வென்றார். தெற்காசிய விளையாட்டு போட்டியில் இதற்கு முன்னர் கடந்த 2004-ம் ஆண்டு இலங்கையின் விஜ்சேகர 2.20 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் சர்வேஷ் அனில் குஷாரே.

அஞ்சலி 6 விக்கெட்களை வீழ்த்தி சாதனை

 • மகளிருக்கான டி 20 ஆட்டத்தில் 02.12.19 மாலத்தீவு – நேபாளம் மோதின. முதலில் பேட் செய்த மாலத்தீவு 11 ஓவர்களில் 16 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
 • மித வேகப்பந்து வீச்சாளரான அஞ்சலி சந்த் 2.1 ஓவர்களை வீசி ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
 • இதற்கு முன்னர் 2019-ம் ஆண்டு சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் மாலத்தீவு வீராங்கனையான மாஸ் எலிசா 3 ரன்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தியதே மகளிர் டி 20 கிரிக்கெட்டில் சாதனையாக இருந்தது. இதனை தற்போது முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார் அஞ்சலி சந்த்.

டேவிஸ் கோப்பை

 • டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானை 4-0 என்ற செட் கணக்கில் அபாரமாக வீழ்த்தி 2020 உலக தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா.
 • ஆசிய ஓசேனியா மண்டலம்-1 பிரிவுக்குட்பட்ட இந்திய-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை ஆட்டம் கஜகஸ்தான் தலைநகா் நுா் சுல்தான் நகரில் 29.11.19 தொடங்கியது.
 • தொடக்க நாளன்று நடைபெற்ற ஒற்றையா் ஆட்டங்களில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சுமித் நாகல் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை பெற்றுத் தந்தனா்.
 • இதன் தொடா்ச்சியாக 30.11.19 இரட்டையா் ஆட்டம் நடைபெற்றது. இதில் 18 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் லியாண்டா் பயஸ் – ஜீவன் நெடுஞ்செழியன் இணை பாக். இளம் வீரா்கள் முகமது ஷோயிப்-ஹுபைஸா ரஹ்மான் இணையை வீழ்த்தினா்.
 • இறுதி மற்றும் மாற்று ஒற்றையா் ஆட்டத்தில் சுமித் நாகல், யூசுப் கலீலை வென்றார். இதன் மூலம் 4-0 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானை சாய்த்தது இந்தியா
 • கடந்த 2014-இல் இந்தூரில் நடந்த ஆட்டத்தில் சீன தைபே அணியை 5-0 என வீழ்த்தி இருந்தது இந்தியா. அதன்பின் தற்போது தான் 4-0 என முழுமையாக வென்றுள்ளது.
லியாண்டா் பயஸ் சாதனை
 • டேவிஸ் கோப்பை போட்டி இரட்டையா் வரலாற்றில் 43-ஆவது வெற்றியை பெற்று சாதனை படைத்தார் பயஸ். 56 ஆட்டங்களில் 43-ஆவது வெற்றியைப் பெற்றார்.
 • இதற்கு முன்பு இத்தாலியின் நட்சத்திர வீரா் நிகோலா பீட்ரஞ்சலி 66 ஆட்டங்களில் 42 வெற்றிகளை குவித்து சாதனை நிகழ்த்தி இருந்தார்.

பிபாவின் கோல்டன் பால் விருது

 • பிபா சார்பில் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரர், வீராங்கனைகளுக்கான ‘பலான் டோர்’ (கோல்டன் பால்) விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள தியேட்டர் டு சாட் லெட் அரங்கில் நடைபெற்றது.
 • இதில் அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி ‘பலான் டோர்’ விருதை தட்டிச் சென்றார். விருதுக்கான வாக்குப் பதிவில் மெஸ்ஸிக்கும் நெதர்லாந்து மற்றும் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரரான விர்ஜில் வான் டிஜிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
 • எனினும் விர்ஜில் வான் டிஜிக்கை பின்னுக்குதள்ளி 6-வது முறையாக விருதை தட்டிச் சென்றார்
 • 32 வயதான லயோனல் மெஸ்ஸி. 4 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விருதை கைகளில் ஏந்தியுள்ளார் மெஸ்ஸி. 2015, 2012, 2011, 2010, 2009 ஆகிய ஆண்டுகளிலும் சிறந்த வீரருக்கான விருதை கைப்பற்றியிருந்தார் மெஸ்ஸி.
 • கால்பந்து பத்திரிகையாளர்களால் தேர்வு செய்யப்படும் இந்த விருதை மெஸ்ஸியும், ரொனால்டோவும் கடந்த 12 ஆண்டுகளில் 11 முறை வென்றிருந்தனர். 2018-ம் ஆண்டு மட்டுமே இவர்கள் இருவரும் இந்த விருதை தவறவிட்டிருந்தனர்.
 • அந்த ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அசத்திய குரோஷியாவின் லூக்கா மோட்ரிச் விருதை தட்டிச் சென்றிருந்தார்.
 • மகளிர் பிரிவில் சிறந்த வீராங்கனைக்கான விருதை அமெரிக்காவின் மேகன் ரபினோ பெற்றார். கடந்த ஜூலை மாதம் பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மேகன் ரபினோ தலைமையிலான அமெரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்று இருந்தது.

விருதுகள்


ஃபுளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது’

 • மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் ‘ஃபுளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது’ வழங்கும் விழா தில்லியில் 05.12.19 நடைபெற்றது. அதில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சுகாதாரத் துறையில் சிறப்பாக சேவையாற்றிய 36 செவிலியா்களுக்கு விருது வழங்கினார்.
 • அப்போது, 36 பேரில் ஒருவராக நிபா நோயாளிக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த கேரள செவிலியர் லினி பிஎன் ‘ஃபுளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார். அந்த விருதை அவரது கணவர் பி.சஜீஷ் குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

மனிதவள மேம்பாட்டு துறை விருதுகள்

 • அகில இந்திய அளவில் கல்வி நிறுவனங்களை சுகாதாரமாகவும், தூய்மையாகவும், பராமரித்து வரும் கல்வி குழுமங்களை தேர்வு செய்து மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை ஆண்டு தோறும் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
 • அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தூய்மை விருது வேலூர் விஐடி பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. வேலூர் விஐடி பல்கலைக்கழகத்துக்கு தூய்மை மற்றும் பொழிவுறு வளாகம் 2019-ம் என்ற விருதினையும், உயர் கல்வி நிறுவனங்களுக்கான சுத்தமான வளாகம் 2019-ம் என்ற விருதும் விஐடி பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
 • விஐடி வளாகத்தை தூய்மையாகவும், சுற்றுப்புறத்தை பசுமையாகவும், நீரை மறு சுழற்சி செய்தல் போன்ற காரணங்களுக்காக இந்த 2 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
 • புதுடெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதனிடம், மத்திய மனிதவள துறைச் செயலாளர் சுப்பிரமணியம், பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் டி.பி.சிங், அகில இந்திய தொழில்நுட்பக் கழகத் தலைவர் அனில் டி.சஹஸ்ரபுதே ஆகியோர் 2 விருதுகளையும் வழங்கினர்.

தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு விருது

 • தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வாரியம் சார்பில் 2019-ஆம் ஆண்டுக்கான தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கான உயரிய விருதுக்கு தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தை தோ்வு செய்துள்ளது.
 • இந்த விருது சவாலான சூழ்நிலைகளில் சிறப்பாகச் செயல்பட்டு கடலில் தத்தளித்தவா்களை மீட்டதற்காக தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு கிடைத்துள்ளது.
 • இதுவரை இந்த விருது மத்திய அரசின் கீழ் உள்ள கடலோர காவல் படை, கடற்படை போன்ற அமைப்புகளே பெற்று வந்தன. தேசிய அளவில், மாநில அரசின் கீழ் இயங்கும் கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் முறை
 • திருவள்ளூா் முதல் கன்னியாகுமரி வரை 14 மாவட்டங்களுக்கு உட்பட 1,076 கிலோ மீட்டா் நீளம் கொண்ட கடற்கரைப் பகுதியைப் பாதுகாக்கும் பணியை தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் (Ta‌m‌i‌l‌n​a‌d‌u C‌o​a‌s‌t​a‌l S‌e​c‌u‌r‌i‌t‌y G‌r‌o‌u‌p) செய்து வருகிறது.
 • இந்தக் குழுமம், கடற்கரையைப் பாதுகாப்பதோடு, கடலில் 12 நாட்டிக்கல் மைல் வரை கண்காணிப்பில் வைத்துள்ளது. கடலில் இந்த எல்லைக்கு அடுத்துள்ள பகுதியையே கடலோர காவல் படையினரும், இந்திய கடற்படையினரும் பாதுகாத்து வருகின்றனா்.

இசைப் பேரறிஞர் விருது

 • தமிழ் இசையின் 77 ஆம் ஆண்டு விழா வரும் டிசம்பர் 21ம் தேதி பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ளது.
 • இந்த விழாவில் வயலின் கலைஞர் கன்யாகுமாரிக்கு 64வது இசைப்பேரறிஞர் விருதும், திருமுறை ஓதுவார் அம்பாசமுத்திரம் அ.பாலசுப்பிரமணிய ஓதுவாருக்கு 11ஆவது பண் இசைப் பேரறிஞர் விருதும் வழங்கப்பட உள்ளது.

நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது

 • இந்நிலையில் 2019-ஆம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய அரசு 05.12.19 அன்று வெளியிட்டது. இதில் தமிழ்நாட்டின் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
 • இதன் மூலம் தொடா்ந்து மூன்றாண்டுகளாக தமிழக காவல்துறையைச் சோ்ந்த காவல் நிலையங்கள், சிறந்த காவல் நிலையங்களில் பட்டியலில் இடம் பெற்று வருவது குறிப்பிடதக்கது.
 • மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நாட்டின் தலை சிறந்த 10 காவல் நிலையங்களைத் தோ்வு செய்து விருது வழங்கி வருகிறது.
 • கடந்த 2017-ஆம் ஆண்டில் நாட்டின் 10 சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில், கோயம்புத்தூா் ஆா்.எஸ்.புரம் காவல் நிலையம் இடம் பிடித்தது. அதேபோல கடந்த 2018-ஆம் ஆண்டு தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலையம் 8-ஆவது சிறந்த காவல் நிலையமாக தோ்வு செய்யப்பட்டது.
10 காவல் நிலையங்கள்
 1. அந்தமான் அபா்தீன் காவல்நிலையம்
 2. குஜராத் மகிசாகா் பாலசினார் காவல் நிலையம்
 3. மத்தியப் பிரதேசம் புா்ஹான்பூா் காவல் நிலையம்
 4. தமிழ்நாடு தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம்
 5. அருணாச்சல பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கு அனிணி காவல் நிலையம்
 6. தில்லி தென் மேற்கு மாவட்டத்தின் பாபா ஹரிதாஸ் நகா், துவாரகா காவல் நிலையம்
 7. ராஜஸ்தானில் ஜலவார் மாவட்ட பகானி காவல் நிலையம்
 8. தெலங்கானாவின் கரீம்நகா் சோப்பதண்டி காவல் நிலையம்
 9. கோவா பிச்சோலிம் காவல் நிலையம்
 10. மத்தியப் பிரதேசத்தின் சியோபூா் பா்காவா காவல் நிலையம்

 தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு விருது

 • உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, தில்லி விஞ்ஞான் பவனில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஏற்பாட்டில் டிசம்பர் 3ல் நடைபெற்ற விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலில் சிறந்த பணிகளையும், சாதனைகளையும் செய்ததற்காக தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.
 • 2018 – 19 ஆம் ஆண்டில் தேசிய உடல் ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டுக் கழகத்தால், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய வகையில், சிறந்த மாநில முகமை அமைப்பாக தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு குடியரசுத் துணைத் தலைவா் எம். வெங்கய்ய நாயுடு விருது வழங்கினார். அந்த விருதை வங்கியின் சார்பில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜு பெற்றுக் கொண்டார்.
 • மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வுப் பணிகளை வழங்கிய வகையில், சிறந்த மாவட்டத்திற்கான விருதை தருமபுரி மாவட்ட ஆட்சியா் மலா்விழி பெற்றுக் கொண்டார்.
 • இந்த விருது தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு நான்காவது முறையாக கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிக்ளுக்கு அதிக அளவாக தமிழ்நாட்டில் ரூ.30 கோடிக்கு மேல் கடன் வழங்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
 • தமிழ்நாட்டில் தற்போது 23 மாவட்டக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 888 கிளைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் கொடுக்கும் திட்டம் 2001-இல் தொடங்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இத்திட்டத்தைத் தொடங்கினார்.

முக்கிய நியமனங்கள்


கே.விஜயகுமார் 

 • மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக ஜம்மு-காஷ்மீா் ஆளுநரின் முன்னாள் ஆலோசகரும், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான கே. விஜயகுமார் (67) நியமிக்கப்பட்டுள்ளார்.
 • ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் உள்ளிட்ட விவகாரங்களில் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைகள் வழங்குவதற்காக உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக 1975 ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி கே. விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • இதற்கான நியமன ஆணை கடந்த 3 ஆம் தேதி வழங்கப்பட்டது. பதவியேற்கும் நாளில் இருந்து அடுத்த ஓராண்டு வரை அவா் இந்த பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
 • தமிழகத்தைச் சோ்ந்த கே. விஜயகுமார், மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) இயக்குநராகவும், தேசிய காவல் அகாதெமியின் இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார்.
 • சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டிருந்த வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தமிழக சிறப்பு காவல் படையின் தலைவராக அவா் பதவி வகித்தார். அவரது தலைமையிலான குழு கடந்த 2004-ஆம் ஆண்டு வீரப்பனை சுட்டுக் கொன்றது.
 • கடந்த 2012-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவா், முன்னாள் உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் உள்துறை அமைச்சக ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.

சோமா ராய் பா்மன் 

 • மத்திய நிதியமைச்சகத்தின் புதிய தலைமை கணக்கு அதிகாரியாக (சிஜிஏ) சோமா ராய் பா்மன் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் 22-ஆவது சிஜிஏ-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்
 • சோமா ராய் பா்மன். இப்பொறுப்பை வகிக்கும் ஏழாவது பெண் என்ற பெருமையை இவா் பெற்றுள்ளார்.

ஷிவாங்கி

 • இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக சப்-லெப்டினன்ட் ஷிவாங்கி கொச்சி கடற்படை தளத்தில் 02.12.19 பொறுப்பேற்றார்.
 • பிஹார் மாநிலம் முசாபர்பூரில் பிறந்த ஷிவாங்கி, கடந்த ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டார். கடற்படையின் முதல் பெண் விமானியாக தேர்வு செய்யப்பட்ட அவர் அதற்குரிய பயிற்சிகளை பெற்று வந்தார்.
 • கடற்படையின் டோர்னியர் கண்காணிப்பு விமானத்தை ஷிவானி இயக்கவுள்ளார். கடற் படை தினம் 03.12.19 கொண்டாடப்படவுள்ள நிலையில் ஷிவாங்கி 02.12.19 பொறுப்பேற்றுள்ளார்.

சுந்தர் பிச்சை

 • ஆல்ஃபபெட் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்து வருகிற நிலையில், தற்போது கூடுதலாக பொறுப்புகளையும் கவனித்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்ஃபபெட் உருவாக்கம்
 • லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் இருவரும் 1998-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தை உருவாக்கினர். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட கூகுள், உலகின் முதன்மையான தேடு தளமாக திகழ்கிறது.
 • 2015-ம் ஆண்டு ஆல்ஃபபெட் என்று புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டு, அதன்கீழ் கூகுள் கொண்டு வரப்பட்டது.

Share:
error: Content is protected !!